செய்திகள்

நஷ்டத்திலுள்ள நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி: வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்

டெல்லி, ஏப். 04–

தேர்தல் பத்திரங்கள் மூலம் நஷ்டத்தில் உள்ள நிறுவனங்கள் மிகப்பெரிய தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

பாரதீய ஜனதா அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திர சட்டங்கள், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனக் கூறி, தேர்தல் பத்திரங்கள் முறையை உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 15-ம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்குமாறு எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்டது.

அந்த உத்தரவின் அடிப்படையில், தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை எஸ்பிஐ சமர்ப்பித்தது. தொடர்ந்து, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தனது அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

இதனை அடுத்து, அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்த நிறுவனங்கள் பற்றி பல்வேறு தரப்பில் இருந்து அலசி ஆராயப்பட்டு வருகிறது. நன்கொடை அளித்த நிறுவனங்களுக்கும், நன்கொடை வாங்கிய கட்சிக்கும் இடையே இருக்கும் தொடர்பு என்ன என்பது குறித்த தகவல்கள் ஆங்காங்கே வெளிவந்தவண்ணம் உள்ளன.

சந்தேகத்திற்குரிய நிதி

அந்த வகையில் தனியார் தொலைக்காட்சியின் குழு ஒன்று நடத்திய ஆய்வில், ஏப்ரல் 12, 2019, ஜனவரி 24, 2024-க்கு இடையிலான காலக்கட்டத்தில், சந்தேகத்திற்குரிய நிதி ஆதாரங்களைக் கொண்டிருந்த, லாபம் இல்லாத 45 நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.1,432.4 கோடி நிதி வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. அதில் ஏறத்தாழ 75 சதவீதம், அதாவது ரூ.1,086.4 கோடி பாஜகவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த 45 நிறுவனங்களில் 33 நிறுவனங்கள் எதிர்மறையான அல்லது பூஜ்ஜிய லாபத்தைக் கொண்டிருந்ததன. தேர்தல் பத்திரங்கள் மூலம் இந்த 33 நிறுவனங்கள் வழங்கிய ரூ.576.2 கோடியில், ரூ.434.2 கோடியை பாஜக பணமாக்கியுள்ளது. 2016 – 2023 ஆம் ஆண்டுகளுக்கு இடையிலான காலக்கட்டத்தில் இந்த நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் சுமார் 1 லட்சம் கோடி என கணிக்கப்பட்டுள்ளது.

நஷ்டம் ஏற்பட்டபோதும், மிகப்பெரிய தொகையை தேர்தல் பத்திரங்கள் மூலம் நிறுவனங்கள் வழங்கியுள்ளதால், அவை வரி ஏய்ப்பு, மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை கிளப்புவதாக பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *