செய்திகள்

50 மணி நேர அமலாக்கத்துறையின் விசாரணை: ராகுல்காந்தி விளக்கம்

டெல்லி, ஜூன் 23–

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை 50 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்திய நிலையில் விசாரணை அறையில் நடந்த சில தகவல்களை ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.

நேஷனல் ஹெரால்டு பணப் பரிவர்த்தனை முறைகேடு வழக்கில் ராகுல் காந்தியிடம் 5 நாட்களில் 50 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. கடந்த 13-ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை 27 மணி நேரம் விசாரணை நடத்தியது. இதையடுத்து மீண்டும் 20ஆம் தேதி நள்ளிரவு வரை அவரிடம் அமலாக்கத்துறை விசாரணையை நடத்தியது. 21ஆம் தேதி 8 மணி நேரம் விசாரணை நடத்தியது. இதுபோன்று அவரிடம் 50 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் விசாரணையில் நடந்த சில தகவல்களை ராகுல்காந்தி பகிர்ந்துள்ளார்.

இருட்டு அறையில் நான்

டெல்லியில் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “நான் ஒரு சிறிய இருட்டு அறையில் அமர வைக்கப்பட்டேன். மூன்று அமலாக்கத் துறை அதிகாரிகள் என்னை விசாரிப்பார்கள். பின்னர் அறிவுறுத்தல்களைப் பெறுவதற்காக அவர்கள் அறையை விட்டு வெளியே செல்வார்கள். ஆனால் நான் நீண்ட நேரம் நாற்காலியில் அமர்ந்து பொறுமையாக அவர்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தேன்.

அமலாக்கத் துறையின் கேள்விகள் எனக்குக் கடினமாக இருந்திருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் எனக்கு அப்படி இல்லை. ஏனென்றால் நான் தனியாக அந்த நாற்காலியில் அமரவில்லை. என்னுடன் அந்த அறையில் ஒவ்வொரு காங்கிரஸ் தலைவரும் ஒவ்வொரு தொண்டனும், இந்த அரசுக்கு எதிராக அச்சமின்றி போராடும், ஜனநாயகத்திற்காகப் போராடும் அனைவரும் என் உடன் இருந்தது போல் இருந்தது.

பயமுறுத்த முடியாது

அதே சமயத்தில் எப்படி இவ்வளவு அமைதியாக இருக்க முடிந்தது என்று என்னிடம் கேள்வி எழுப்பிய அதிகாரிகளே ஆச்சரியப்பட்டனர். நான் ஏன் அமைதியாக இருந்தேன் என்கிற உண்மையைச் சொல்ல வேண்டாம் என்று முடிவு செய்தேன். அதற்குப் பதிலாக வேறு சில காரணங்களைக் கூறினேன். அதிகாரிகளிடம் நான் விபாசனா பயிற்சி செய்கிறேன். அதனால் என்னால் நீண்ட நேரம் எளிதாக உட்கார முடியும் என்று கூறினேன்.

நாம் உண்மையின் பக்கம் இருப்பதால் காங்கிரசின் எந்த தலைவரையும் பயமுறுத்தவோ அல்லது அடக்கவோ முடியாது என்று என்னிடம் விசாரித்து அதிகாரிகளும் புரிந்து கொண்டனர்” என்று கூறினார்.

முன்னதாக இவ்வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இந்தச் சம்மனின் படி சோனியா காந்தி இன்று ஆஜராக வேண்டும். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாகச் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சோனியா காந்தி நேற்று அமலாக்கத் துறை இயக்குநருக்குக் கடிதம் ஒன்று எழுதினார். அதில் பூரண குணமடையும் வரை விசாரணைக்கு ஆஜராக சில வாரங்கள் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். இந்த நிலையில் சோனியா காந்தியின் கோரிக்கையை அமலாக்கத் துறை ஏற்றதாகக் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விசாரணை: ராகுல்காந்தி விளக்கம்

Leave a Reply

Your email address will not be published.