சென்னை, நவ. 15-
தமிழகக் காவல்துறை அதிகாரிகள் மட்டுமல்லாமல், கர்நாடகா தெலங்கானா மற்றும் ஆந்திரா மாநிலக் காவல்துறை அதிகாரிகளின் பெயர்களிலும் போலி ஃபேஸ்புக் கணக்குகள் தொடங்கப்பட்டு, 5,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை பணம் கேட்டு புதுவித கொள்ளையில் ஈடுபட்ட வட மாநிலத்தவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாதவரம் போலீஸ் உதவி கமிஷனர் அருள் சந்தோஷ் முத்து, வண்ணாரப்பேட்டை போலீஸ் உதவி கமிஷனர் ஜூலியஸ் சீசர், மத்திய குற்றப்பிரிவு முன்னாள் போலீஸ் உதவி கமிஷனர் ராஜேந்திர குமார் ஆகியோரின் பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி மோசடி நடப்பது தெரியவந்தது. உதவி கமிஷனர் அருள் சந்தோஷ், சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்ததின் பெயரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து, மோசடி கும்பலை பிடிக்க தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டதையடுத்து, மோசடி செயலில் ஈடுபட்ட முக்கிய கும்பலானது ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டம் பஹரி தாலுகாவில் பதுங்கியிருக்கும் ரகசியத் தகவல் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தெரியவந்தது. இது குறித்த முதல் வழக்கு செப்டம்பர் 15-ம் தேதி, பதிவு செய்யப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் ராஜஸ்தானில் முகாமிட்டு குற்றவாளிகளைத் தேடி வந்துள்ளனர். அதில், இச்சம்பவத்திற்குத் தலையாக விளங்கிய ஷகீல் கான் உள்ளிட்ட ஐந்து குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனர்.
காவல் ஆணையர் செய்தியாளர்களுக்கு தெரிவித்த தகவலில், “இச்சம்பவம் தொடர்பாக, ஷகீல் கான், ரவீந்திர குமார், முஷ்டாகிம் கான் மற்றும் இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், ஷகீல் கான், போலி கணக்குகளை உருவாக்கி பலருடன் பேசியுள்ளார். ரவீந்திர குமார் பணத்தைப் பெற்றுக்கொண்டு வங்கிகளில் மாற்றியுள்ளார். ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்களிலும் இதுபோன்ற வழங்கிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறி உள்ளார்.
கூகுள் வாய்ஸையும் செல்போன் நம்பர்களின் கடைசி 5 இலக்க நம்பர்களையும் இவர்கள் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டிருக்கின்றனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.