செய்திகள்

வெடிகுண்டுகள், போதை பொருட்களை கண்டுபிடிக்க 4 புதிய மோப்ப நாய்கள்

ரெயில்வே காவல் துறையில்

வெடிகுண்டுகள், போதை பொருட்களை கண்டுபிடிக்க 4 புதிய மோப்ப நாய்கள்

டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு

சென்னை, மார்ச். 3–

ரெயில்வே காவல்துறைக்கு புதிதாக 4 மோப்ப நாய்கள் பணிக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்று ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு கூறினார்.

ரெயில்வே காவல்துறை துப்பறியும் மோப்ப நாய் பிரிவு கடந்த 2002ம் ஆண்டு முதன்முதலாக துவங்கப்பட்டு சென்னை அயனாவரத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இதில் ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் 8 காவலர்கள் பணியில் உள்ளனர். முதலில் செல்லி மற்றும் டைசன் ஆகிய இரண்டு மோப்ப நாய்கள் வாங்கப்பட்டன. இவை இரண்டும் வெடிகுண்டுகள் மோப்பம் பிடித்து கண்டுபிடிக்கும் திறன் கொண்டவை. இந்த இரண்டு மோப்ப நாய்களும் ரெயில் நிலையங்கள், நடைமேடைகள் மற்றும் ரயில் வண்டிகளில் முக்கிய பாதுகாப்பு நேரங்களிலும் மற்றும் ரயில் நிலையங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தொலைபேசி மூலம் வரும் தகவல்களுக்கு உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று மோப்பம் பிடித்து வெடிகுண்டு உள்ளதா, இல்லையா என்பதை உறுதி செய்து சிறப்பாக பணிபுரிந்துள்ளது.

இந்நிலையில் மோப்ப நாய் செல்லி கடந்த 2010ம் ஆண்டும் டைசன் 2011ம் ஆண்டும் இறந்து விட்டன. அதன் பிறகு ஜாக் மற்றும் ஜெஸ்சி ஆகிய வெடிகுண்டு கண்டுபிடிக்கும் மோப்ப நாய்கள் ரெயில்வே காவல்துறைக்கு புதிதாக வாங்கப்பட்டன. இவற்றில் ஜெஸ்சி 2019ம் ஆண்டும், ஜாக் 2020ம் ஆண்டும் உயிரிழந்து விட்டன. பெர்னி என்ற வெடிகுண்டு கண்டுபிடிக்கும் மோப்ப நாய் 2017ம் ஆண்டு ரெயில்வே காவல்துறைக்கு வாங்கப்பட்டது. மேலும் ரெயில்வே காவல்துறைக்கு பாதுகாப்பு அலுவலுக்கு துப்பறியும் நாய்கள் தேவைப்படுவதால் 2020ம் ஆண்டில் மார்ச் மாதம் ஏஞ்சல், ஆகாஸ் ஆகிய இரண்டு மோப்ப நாய்கள் போதை பொருட்களை கண்டுபிடிப்பதற்காக வாங்கப்பட்டன. மேலும் சாரா என்ற மோப்ப நாய் குற்றச் செயல்களில் ஈடுபட்டோரை கண்டுபிடிக்கவும், சூர்யா என்ற மோப்ப நாய் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கவும் என மொத்தம் நான்கு மோப்ப நாய்கள் ரெயில்வே காவல்துறைக்கு புதிதாக கொண்டுவரப்பட்டன.

இந்த 4 மோப்ப நாய்களுக்கும் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சென்னை மாநகர மோப்ப நாய் பிரிவு படையில் பராமரிப்பாளர் மூலம் முறையாக ஆறு மாதம் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தன. பயிற்சி முழுவதுமாக முடிவடைந்த நிலையில் நேற்று இந்த 4 மோப்ப நாய்களும் அதன் பயிற்சியாளர்கள் மூலம் ரெயில்வே டிஜிபி சைலேந்திரபாபுவிடம் ஆய்வுக்காக அழைத்து வரப்பட்டன.

சென்னை எழும்பூரில் உள்ள தீயணைப்புத்துறை வளாகத்தில் ரெயில்வே டிஜிபி சைலேந்திரபாபு முன்பு மோப்ப நாய்கள் ஏஞ்சல், ஆகாஸ் சாரா, சூர்யா ஆகிய நான்கும் தாங்கள் பெற்ற பயிற்சிகளை சிறப்பாக செய்து காண்பித்தன. பயிற்சியாளர்களின் கட்டளைக்கு அடிபணிந்து வெடிகுண்டு மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை எப்படி கவ்விப்பிடிப்பது உள்ளிட்டவற்றை நாய்கள் சிறப்பா செய்தது டிஜிபி சைலேந்திரபாபுவின் கவனத்தை ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து ரெயில்வே காவல்துறைக்கு வந்துள்ள மோப்ப நாய்களுக்கு சிறப்பான பயிற்சி அளித்த பயிற்சியாளர்கள் மற்றும் பெறுப்பு உதவி ஆய்வாளர் ஆகியோரின் செயல்பாட்டினை டிஜபி சைலேந்திரபாபு வெகுவாக பாராட்டினார்.

அதனையடுத்து 4 மோப்ப நாய்களும் ரயில்வே காவல்துறைக்கு பணிக்கு ஒப்படைக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *