செய்திகள்

ஆள்மாறாட்டம் செய்து ரூ. 65 லட்சம் நில மோசடி: 3 பேர் கைது

சென்னை, பிப். 10–

ரூ. 65 லட்சம் மதிப்புள்ள நிலத்தை ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்ட 3 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சென்னை அம்பத்துார், மேற்கு பானு நகர், தனலட்சுமி தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி சசிகலா (வயது 60). கடந்த 1980ம் ஆண்டு நடராஜ கிராமணி என்பவரிடமிருந்து அம்பத்தூர் சிவபிரகாசம் நகரில் 2,400 சதுர அடி கொண்ட நிலத்தை சுப்பிரமணி விலைக்கு வாங்கியுள்ளார். இந்த சூழ்நிலையில் சுப்பிரமணி நோய்வாய்பட்டு 2014-ம் ஆண்டு இறந்து விட்டார். இந்நிலையில் தனது கணவரின் பெயரில் உள்ள நிலம் தொடர்பாக சசிகலா பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்கம் போட்டு பார்த்த போது அதிர்ச்சி ஏற்பட்டது. சசிகலாவின் கணவரைப் போன்றே போலியாக ஆள்மாறாட்டம் செய்து அந்த இடத்தை அம்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் காஜாமொய்தீன் என்பவர் பாஸ்கர் என்ற பெயரில் கடந்த 2007ம் ஆண்டு பொது அதிகார ஆவணம் பதிவு செய்துள்ளது தெரியவந்தது.

மேலும் அந்த இடத்தை மோகன் என்பவரின் மைத்துனி ஜெஸி என்பவருக்கு காஜா மொய்தீன் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் ஜெஸி என்பவர் கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதியன்று மோகன் என்பவருக்கு போலி ஆவணம் மூலம் அந்த இடத்தை கிரையம் செய்து கொடுத்துள்ளார் போன்ற விவரங்கள் தெரியவந்தது. இது தொடர்பாக சசிகலா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

அது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு, நிலமோசடி, தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சசிகலாவின் கணவர் சுப்பிரமணியைப் போன்று ஆள்மாறாட்டம் செய்து பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. சசிகலாவின் கணவர் சுப்பிரமணி உயிருடன் இருப்பது போன்று போலியான நபரை ஆள்மாறட்டம் செய்து அதில் தன் மகன் பாஸ்கர் என்பவருக்கு செட்டில்மெண்ட் செய்வது போன்று போலி பத்திரம் தயார் செய்துள்ளனர். மேலும் மோகன் என்பவருக்கு கிரைய ஆவணம் செய்தும் அதில் ராமையா என்பவர் சாட்சியாக கையொப்பமிட்டுள்ளதையும் போலீசார் கண்டுபிடித்தனர். அதனையடுத்து ஆள்மாறாட்டம் செய்த சென்னை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த காஜாமொய்தீன் (வயது 32), திருமுல்லைவாயலைச் சேர்ந்த மோகன் (46), ராமையா (53) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மூவரும் விசாரணைக்குப் பின்னர் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *