செய்திகள் வர்த்தகம்

3 மாத குழந்தைக்கு குடல் மறு சீரமைப்பு அறுவை சிகிச்சை:ரேலா மருத்துவமனை சாதனை

சென்னை, ஆக.11-

சென்னை ரேலா மருத்துவமனையில் 3 மாத குழந்தைக்கு வயிற்றில் குடல் மறு சீரமைப்பு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர் ரோஹிதாஷ்யா. இவருடைய மனைவி கர்ப்பமாக இருந்தபோது கொரோனா தொற்று ஏற்பட்டது. இரட்டை குழந்தைகளை பிரசவித்த உடனேயே அவர் இறந்துவிட்டார். 32 வார குறை பிரசவத்தில் பிறந்த பெண் குழந்தையான ஆஷாவுக்கு, பிறந்த சில நாட்களில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வயிறு சம்பந்தமான அறுவை சிகிச்சைக்காக ராஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆஷா சேர்க்கப்பட்டாள்.

அங்கு 3 மாத கைக்குழந்தையான ஆஷாவினுடைய சிறுகுடலின் பெரும்பகுதி அகற்றப்பட்டது. அவளால் பால் குடிக்க முடியவில்லை. இதையடுத்து மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நரம்பு வழி ஊட்டச்சத்துகள் அளிக்கப்பட்டு வந்தது. கொரோனா பாதிப்பு குணம் அடைந்த நிலையில், டாக்டர்களின் பரிந்துரையின்பேரில் குடல் சம்பந்தமான சிகிச்சைக்காக ஆஷாவை, சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனைக்கு அழைத்துவர முடிவு செய்யப்பட்டது.

கொல்கத்தாவில் இருந்து 1,600 கி.மீ. தொலைவில் உள்ள சென்னைக்கு ஆஷா தனி விமானத்தில் ‘வென்டிலேட்டர்’ உதவியுடன் 3½ மணி நேரத்தில் அழைத்து வரப்பட்டாள். பின்னர் விமான நிலையத்தில் இருந்து ‘இன்குபேட்டர்’ உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலமாக ரேலா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். அப்போது குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் கொல்கத்தா தனியார் மருத்துவ மருத்துவ நிபுணர்கள் ஆஷாவை கண்காணித்து வந்தனர்.

சென்னைக்கு அவசர சிகிச்சைக்காக அழைத்து வரும்போது ஆஷாவின் எடை 1½ கிலோ ஆகும். ரேலா மருத்துவமனையில், ஆஷாவினுடைய குடலின் நீளம் மற்றும் அதன் செயல்பாட்டை மதிப்பீடு செய்த மருத்துவ நிபுணர் குழு குடல் மறு சீரமைப்பு சிறப்பு சிகிச்சையை செய்து வருகிறது. இந்த சிகிச்சையின் காரணமாக குழந்தை தற்போது நலம்பெற்று வருகிறாள்.

இதுகுறித்து ரேலா மருத்துவமனையின் குழந்தைகள் இரைப்பை குடலியல் மற்றும் கல்லீரல் நிபுணர் டாக்டர் நரேஷ் சண்முகம் கூறுகையில், “ஆஷாவை பொறுத்தவரை அவளுக்கு, எங்கள் குழந்தைகள் குடல் மறுசீரமைப்பு குழு பல்வேறு நுட்பங்கள் மற்றும் மருந்துகளை பயன்படுத்தி சிகிச்சை அளித்துள்ளது. இதனால் தற்போது குழந்தை ஆஷாவின் சிறுகுடல் ஊட்டச்சத்தை உறிஞ்சுவதற்கு மெதுவாக ஏற்றுக்கொள்கிறது. மேலும் அவளுக்கு வென்டிலேட்டர் சுவாசம் நிறுத்தப்பட்டு தற்போது அவள் இயற்கையாக சுவாசிக்கிறாள்” என்றார்.

ஆஷாவின் தந்தை ரோஹிதாஷ்யா கூறியதாவது:-

சரியான ஊட்டச்சத்து இல்லாமை மற்றும் பல சிக்கல்கள் காரணமாக என்னுடைய குழந்தை ஆஷா பிறக்கும்போதே மிகவும் எடை குறைவாக பிறந்தாள். பச்சிளங்குழந்தைகளுக்கு நரம்பு மூலம் உணவு செலுத்துதல் என்பது மிகவும் கடினமாக இருந்தது. ‘ஏர் ஆம்புலன்சில்’ ஏற்றும்போது அவளது எடை 1½ கிலோ தான். என் குழந்தை பாதுகாப்பானவர்கள் கைகளில் இருப்பதைப்போல உணர்கிறேன். மிக விரைவில் மற்ற குழந்தைகளைப் போல அவளும் இயல்பான வாழ்க்கையை பெறுவாள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த தகவலை ரேலா மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி மருத்துவர் இளங்குமரன் கலியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *