செய்திகள்

25வது நாளாக தொடரும் போர்: காசா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்

ஹமாஸ் படைத் தளபதி பலி, 50 பாலஸ்தீனர்களும் உயிரிழந்ததாக தகவல்

டெல் அவிவ், நவ.1

காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் முக்கிய கமாண்டர் இப்ரஹிம் பியாரி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை உறுதி செய்துள்ளது.

கடந்த அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்ட ஹமாஸ் மத்தியப் பிரிவு கமாண்டர் இப்ரஹிம் பியாரியுடன் சேர்த்து நிறைய ஹமாஸ் தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதாக வீழ்த்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தெற்குப் பகுதிக்குச் செல்லுமாறு எக்ஸ் தளம் வாயிலாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஜபாலியா முகாம் மீதான தாக்குதல் குறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை செய்தித் தொடர்பாளர் லெப்டினண்ட் கர்னல் ஜொனாத்தன் கான்ரிக்கஸ் கூறுகையில், “பியாரியை வீழ்த்தியது மிகவும் முக்கியமானது. அதே வேளையில் பக்கவாட்டு சேதாரமாக பொதுமக்களும் உயிரிழக்க நேர்கிறது. நேற்றைய தாக்குதலில் பியாரி உள்பட 50 பாலஸ்தீனர்களும் கொல்லப்பட்டனர். இவர்களில் பலர் தீவிரவாதிகள். இஸ்ரேல் தரப்பில் 2 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பக்கவாட்டு சேதாரத்தை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன” என்றார்.

ஆனால் இப்ரஹிம் பியாரி வீழ்த்தப்படவில்லை என்று ஹமாஸ் கூறுகிறது. ”இஸ்ரேல் போலித் தகவலைத் தெரிவிக்கின்றது. ஹமாஸ் அழிப்புப் போர்வையில் இஸ்ரேல் அப்பாவி பொதுமக்களை வீழ்த்துகிறது” என்று ஹமாஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஜபாலியா முகாம் மீதான தாக்குதலை ஈரான், எகிப்து, ஜோர்டான் போன்ற நாடுகள் கண்டித்துள்ளன. மனித உரிமை மீறல்களை இஸ்ரேல் செய்து வருவதாக அவை குற்றஞ்சாட்டியுள்ளன. காசாவில் லட்சக்கணக்கான அப்பாவிகள் வாடுகின்றனர். அவர்களுக்கு உரிய மனிதாபிமான உதவிகள் கிடைப்பதையாவது இஸ்ரேல் உறுதி செய்ய வேண்டும் என்று அந்நாடுகள் வலியுறுத்தியுள்ளன. போரில் படுகாயமடைந்தவர்களை ராபா எல்லை வழியாக சிகிச்சைக்காக ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கையை எகிப்து முடுக்கிவிட்டுள்ளது. இதற்கிடையில், ஹமாஸுக்கு ஆதரவாக போரில் இணைந்துள்ளதாக ஏமன் நாட்டின் ஹவுத்தி கிளர்ச்சிப் படைகள் அறிவித்துள்ளன.இஸ்ரேல் மீது காசாவின் ஹமாஸ் படையினர் கடந்த அக்டோபர் 7ம் தேதி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே போர் 25 நாட்களை எட்டியதுடன் தீவிரமடைந்தும் வருகிறது.

வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டிருந்த ஹமாஸ், தற்போது தரைவழித் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

கடந்த 4 நாள்களாக எல்லைப் பகுதிக்குள் தாக்குதல் நடத்தியவாறு கொஞ்சம் கொஞ்சமாக காசாவுக்குள் முன்னேறி வரும் இஸ்ரேல் தரைப்படையினர்.

இஸ்ரேல் ராணுவத்தினரை ஹமாஸ் அமைப்பினர் நேருக்கு நேர் எதிர்கொண்டு வருவதாகவும், வீதிகளில் இருதரப்பினருக்கும் இடையே கடுமையான சண்டை நடப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இஸ்ரேல் ராணுவத்தின் இடைவிடாத குண்டு மழையில் அங்குள்ள குடியிருப்பு கட்டிடங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை தரைமட்டமாகி கிடக்கும் நிலையில், தரைவழி தாக்குதல் அங்கு மேலும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. தரைவழி தாக்குதலுக்கு மத்தியில் வடக்கு காசாவில் இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசி வருகிறது.

இந்த போரில் இஸ்ரேல் தரப்பில் 1,400 பேரும் பாலஸ்தீனியர்கள் இதுவரை 8,525 போ் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *