செய்திகள்

24–ந் தேதி பிளஸ் 2 தேர்வு எழுதாதவர்களுக்கு மட்டும் வேறொரு நாளில் தனியாக தேர்வு

Spread the love

1 முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் பாஸ்

24–ந் தேதி பிளஸ் 2 தேர்வு எழுதாதவர்களுக்கு மட்டும் வேறொரு நாளில் தனியாக தேர்வு

எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

 

சென்னை, மார்ச் 26–

24–ந் தேதி நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மட்டும் வேறொரு நாளில் தனியாக தேர்வு நடத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாடு அரசு கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. 24–ந் தேதி மாலை 6 மணி முதல், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. அது தொடர்பான ஆய்வுக் கூட்டம் நேற்று (25–ந் தேதி) எனது தலைமையில் முகாம் அலுவலகத்தில் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் கே.சண்முகம், காவல்துறை தலைமை இயக்குனர் திரிபாதி, சென்னை மாநகரக் காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

* 24.3.2020 அன்று தமிழ்நாடு முழுவதும் +2 பொதுத்தேர்வு நடைபெற்றது. அத்தேர்வில் சில மாணவர்கள், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளால் தங்களால் தேர்வெழுத செல்ல முடியவில்லை என்ற விவரத்தினை எனது கவனத்திற்கு கொண்டு வந்ததை கனிவோடு பரிசீலித்து, 24.3.2020 அன்று +2 தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மட்டும் வேறொரு நாளில் தனியாக தேர்வு நடத்தவும், இத்தேர்வுக்கான தேதியை பின்னர் அறிவிக்கவும் உத்தரவிட்டேன்.

* மேலும், கொரோனா நோயை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பள்ளிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டு இன்று வரை அமலில் உள்ளது. இதனால், தமிழ்நாட்டில் 1–-ம் வகுப்பு முதல் 9–-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களால் இறுதித் தேர்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டும், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், 1–-ம் வகுப்பு முதல் 9-–ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டேன்.

* தேநீர் கடைகளில் தேவையற்ற கூட்டம் கூடுவதைத் தவிர்க்க, தமிழ்நாடு முழுவதும் உள்ள தேநீர் கடைகள் இயங்குவதற்கு, 25–ந் தேதி மாலை 6 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை தடை விதிக்கப்படுகிறது.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *