செய்திகள்

21 நாளில் 50 லட்சம் பேருக்கு தடுப்பூசி: இந்தியா சாதனை

டெல்லி, பிப். 7–

உலகிலேயே மிகவேகமாக 21 நாட்களில் 50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டு இந்தியா சாதனை படைத்துள்ளது.

இந்தியாவில் கடந்த மாதம் 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளும் இதில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள வீரர்கள் என சுமார் 3 கோடி பேருக்கு முதற்கட்டமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான அமர்வுகள் மூலம் தினமும் லட்சக்கணக்கானோர் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

அந்தவகையில் நேற்று காலை வரை 54 லட்சத்து 16 ஆயிரத்து 849 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. அதாவது 21 நாட்களிலேயே 50 லட்சம் பேர் தடுப்பூசியால் பயன்பெற்று உள்ளனர். இது உலகிலேயே மிகவும் வேகமான சாதனையாகும்.

உலக வல்லரசான அமெரிக்கா கூட 24 நாட்களில்தான் 50 லட்சம் என்ற சாதனையை எட்டியுள்ளது. இதைத்தவிர இங்கிலாந்து, இஸ்ரேல் ஆகிய நாடுகள் 50 லட்சம் என்ற சாதனையை எட்டுவதற்கு தலா 45 நாட்கள் எடுத்துள்ளன.

நேற்று காலை வரை பயனடைந்துள்ள 54.16 லட்சம் பேரில், அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 6 லட்சத்து 73 ஆயிரத்து 542 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக மராட்டியத்தில் 4,34,943 பேரும், ராஜஸ்தானில் 4,14,422 பேரும், கர்நாடகாவில் 3,60,592 பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு உள்ளனர்.

உலக அளவில் இந்த மாபெரும் தடுப்பூசி திட்டம் வேகமாக அமல்படுத்தப்பட்டு வருவதால், இந்தியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை விரைவில் 1 கோடியை எட்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *