போஸ்டர் செய்தி

21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் கருணாநிதி உடல் அடக்கம்

சென்னை, ஆக.9-

21 குண்டுகள் முழங்க, மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதியின் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

உடல்நல குறைவின் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் மாலை 6.10 மணிக்கு மரணம் அடைந்தார். ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் தேவேகவுடா மற்றும் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள், முக்கிய பிரமுகர்கள், ஏராளமான தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

கருணாநிதியின் உடல் மாலை 3.55 மணி வரை அஞ்சலி செலுத்துவதற்காக அங்கு வைக்கப்பட்டு இருந்தது. அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி முடிவடைந்ததும் கருணாநிதியின் உடல் ராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் அவர்கள், அங்கு தயாராக நிறுத்தப்பட்டு இருந்த மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் கருணாநிதியின் உடலை ஏற்றினார்கள். அதன்பிறகு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. ராஜாஜி அரங்கத்தில் இருந்து புறப்பட்ட இறுதி ஊர்வலம் சிவானந்தா சாலை, அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக மெரினா காமராஜர் சாலையை நோக்கி சென்றது.

இறுதி ஊர்வலத்தில் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் நடந்து சென்றனர். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டு நின்ற பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டு இருந்த ராணுவ வாகனம் 6.15 மணிக்கு, உடல் அடக்கம் நடைபெறும் இடத்தின் அருகே வந்தடைந்தது. கருணாநிதியின் உடல் ராணுவ வாகனத்தில் இருந்து இறக்கப்பட்டு, அடக்கம் செய்யும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது முப்படை வீரர்கள் அணிவகுத்து வர, வாத்தியமும் இசைக்கப்பட்டது.

பின்னர், கருணாநிதியின் உடலுக்கு தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தினார்கள். அதன்பிறகு, முப்படை வீரர்கள் வாத்தியம் இசைக்க அனை வரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினார்கள். இதைத்தொடர்ந்து, கருணாநிதியின் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசிய கொடி அகற்றப்பட்டு, முறைப்படி மடிக்கப்பட்டு மு.க.ஸ்டாலின் கையில் ஒப்படைக்கப்பட்டது.

அதன்பிறகு கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் அவரது உடலுக்கு மலர்தூவி இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். மாலை 6.45 மணி அளவில் கருணாநிதியின் உடல் கண்ணாடி பெட்டியில் இருந்து சந்தன பேழைக்கு மாற்றப்பட்டது.

சந்தனப் பேழை 6 அடி நீளம், 2½ அடி அகலத்தில் தயாரிக்கப்பட்டிருந்தது. பெட்டியின் மேல் பகுதியில் ஒரு புறம், “கலைஞர் மு.கருணாநிதி, தி.மு.க. தலைவர், 3–6–1924 – 7–8–2018” என்று எழுதப்பட்டிருந்தது. மற்றொரு புறம், “ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ, ஓய்வு கொண்டிருக்கிறான்” என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தது.

குடும்ப உறுப்பினர்களின் இறுதி அஞ்சலிக்கு பிறகு 6.55 மணிக்கு கருணாநிதி உடல் வைக்கப்பட்ட சந்தன பேழை மூடப்பட்டது. அதன்பிறகு, அடக்கம் செய்யப்படும் குழிக்கு கருணாநிதியின் உடல் வைக்கப்பட்ட சந்தன பேழை கொண்டுவரப்பட்டது. இரவு 7 மணிக்கு 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் கருணாநிதியின் உடல் குழிக்குள் மெதுவாக இறக்கப்பட்டது. அதன்பின்னர், குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் கையில் மணலை அள்ளி குழிக்குள் போட, கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. கருணாநிதியின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத், மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், ராம்தாஸ் அத்வாலே, முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி, தமிழக அரசு சார்பில் அமைச்சர் டி.ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பணிகளை ஒருங்கிணைத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா

கருணாநிதியின் உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய நேற்று காலை சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்தது. அதன்பிறகு, பொதுப்பணித் துறை செயலர் எஸ்.கே.பிரபாகர், உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் பெ.அமுதா, சர்க்கரைத் துறை இயக்குநர் அனு ஜார்ஜ் ஆகியோர் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்வதற்கான இடத்தை அளவிடு பணியை மேற்கொண்டனர்.

அதன்பிறகு தமிழக அரசின் சார்பில் விஐபிக்கள் வருகைக்கான முன்னேற்பாடுகள், நல்லடக்கம் செய்வதற்கான முன்னேற்பாடுகள், ராணுவ மரியாதை செய்வதற்கான அடிப்படை பணிகள் ஆகியவற்றை ஐஏஎஸ் அதிகாரி அமுதா முழுமையாக ஒருங்கிணைத்தார். மேலும், மாலையில் நல்லடக்கம் செய்வதற்கான பணிகள் தொடங்கியபோதும் வரிசையாக என்னென்ன செய்ய வேண்டும் என்ற நிகழ்வுகளை மு.க.ஸ்டாலின், அவரது குடும்ப உறுப்பினர்கள், ராணுவ அதிகாரிகளிடம் தெரிவித்து வந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *