டெல்லி, ஏப். 18–
சாமானிய மக்களும் விமான சேவையைப் பெற 2024-ம் ஆண்டுக்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் பிராந்திய இணைப்புத் திட்டத்தின் கீழ் சாமானிய மக்களும் விமான சேவையைப் பெற ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 415 வழித்தடங்கள் குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.
பிரதமர் விருதுக்கு தேர்வு
இந்தத் திட்டம் 2020ஆம் ஆண்டுக்கான பொது நிர்வாக பிரிவில் சிறந்த திட்டமாக பிரதமரின் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 21ஆம் தேதி டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் விழாவில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு இந்த விருது வழங்கப்படும் என அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உதான் திட்டத்தின் கீழ் 2024ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 100 புதிய விமான நிலையங்களை அமைக்கவும், 2026ஆம் ஆண்டுக்குள் 1,000 புதிய வழித்தடங்களில் விமானங்களை இயக்கவும் திட்டமிட்டு, அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.