செய்திகள் முழு தகவல்

12 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறைச் சொல்லும் சாத்தனூர் கல்மரம்!


பெரம்பலூரில் இருந்து 23 கி.மீ. தொலைவில் அழகிய சுற்றுலாத்தளம்வாழ்வின் குறிக்கோளே பொருள் ஈட்டல், நுகர்வுப் பண்பாடு என்று சுருங்கிவிட்ட காலத்தில், நமது மொழி, பண்பாடு, மண் குறித்த பெருமிதங்கள் கூட சட்டை செய்யப்படாமல் போவதுண்டு. அந்த வகையில், நமக்கு அருகில் உள்ள பல்வேறு வியக்க வைக்கும் பகுதிகள், செய்திகளை கூட பலவேளைகளில் நாம் அறியாமல் இருப்பது வாடிக்கைதான்.

எந்திரத்தனமான வாழ்வில் இவை தவிர்க்க முடியாதது என்ற போதிலும், நண்பர்களோடு, உறவினர்களோடு நேரம் செலவளிக்க கிடைக்கும் வாய்ப்பில், அதுபோன்ற இடங்களை பார்வையிடுவது நமது வரலாற்றை அசைபோடும் நல்வாய்ப்பு என்றே கூற வேண்டும். அப்படியான ஒரு இடம் என்றால், பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாத்தனூர் கல்மர(ம்)ப் பூங்கா என்று சொல்லலாம்.

தமிழ்நாட்டில் அதிக கல்மரம்

காலத்தின் கோலத்தால் மரங்கள் கல்லாக மாறிய நிகழ்வுகள் பூமியின் பல பகுதிகளில் பல்வேறு காலக்கட்டங்களில் வரலாற்றில் நிகழ்ந்துள்ளன.

அப்படி கல்லாக மாறிப்போன கல்மரங்கள், அந்த பகுதியின் தொன்மை மற்றும் புவி வரலாற்றை பறைசாற்றுகின்றன. அப்படி இந்தியாவில் அதிகமாக கல்மரங்கள் உள்ள மாநிலம் என்றால் அது தமிழ்நாடு தான் என்பதில் நமக்கு பெருமை.

அந்த வகையில், அரியலூர் பகுதியிலுள்ள படிவப் பாறைகளில் பல்வேறு வகைப்பட்ட ஏராளமான தொல்லுயிர் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்களே ஆகும். இதன்மூலம் இப்பகுதிக்கு கிழக்கில் 100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கடல் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இந்த பகுதியில் இருந்துள்ளதை, இந்திய புவியியல் ஆய்வுத்துறை உறுதிப்படுத்தி காட்சிக்கு வைத்துள்ளது.

மேலும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நத்தை, ஆமை, கல்மரத் துண்டுகள், நட்சத்திர மீன் போன்றவற்றின் படிமங்களும் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், இதில் காணப்படும் முட்டைகள், மாமிச கார்னோட்டாரஸ் மற்றும் இலைகளை உண்ணும் டைனோசர்களின் முட்டைகளாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

18 மீட்டர் நீள கல்மரம்

1940 ஆம் ஆண்டில், ஆங்கிலேய ஆட்சியில் இந்திய புவியியல் ஆய்வுத்துறைக்கு தலைமை ஏற்ற முதல் இந்தியரான எம்.எஸ்.கிருஷ்ணன், அரியலூர் பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டார்.

அப்போது அரியலூருக்கு 10 கிலோ மீட்டர் மேற்கேயுள்ள சாத்தனூர் என்னும் ஊராட்சிக்கு வடக்கே 700 மீட்டர் தூரத்தில் ஓடைப் படுகையில் 18 மீட்டர் நீளமுள்ள தொல்மர எச்சம் அல்லது கல்மரம் (FOSSIL TREE/WOOD FOSSIL) கண்டுபிடிக்கப்பட்டது.

தொழில்நுட்ப வசதியை
அரசுகள் செய்யலாமே!


இதுபோன்ற இடங்களுக்கு செல்ல கார், மோட்டார் சைக்கிள் வசதிகள், வெளிமாவட்டங்களில் இருந்து வருவோருக்கு கிடைக்க வாய்ப்பிருக்காது. இந்நிலையில், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட முதன்மையான சில இடங்களில் இருந்து, சிற்றுந்துகளை அரசு சார்பில் இயக்கினால், மக்களுக்கும் பயனளிக்கும். சுற்றுவட்டார பகுதி மக்களும் இதுபோன்ற பகுதிகளை அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்பது உறுதி.அதேபோல, அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிக்கூட மாணவர்களையும் பள்ளிகளே அழைத்துச் சென்று காட்டி, இதுபோன்ற அரிய செய்திகளை எடுத்துச் சொன்னால் மண்ணின் வரலாற்றையும், புவியியல் வியப்புகளையும் இளம் வயதிலேயே மாணவர்கள் அறிந்து கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும். மேலும் இதுபோன்ற மண்ணின் பெருமிதங்களை காக்கவும் அதுகுறித்த ஆய்வில் ஈடுபடும் எண்ணமும் மாணவர்களுக்கு மேலோங்கும்.
தொழில்நுட்ப வசதி
அருங்காட்சியகத்தில் உள்ள அரிய சேகரிப்புகளைப் பற்றி எடுத்துச்சொல்ல பணியாளர் இருந்தாலும் கூட, காலை முதல் மாலை வரையில், அவர்கள் சோர்வின்றி சுற்றுலா பயணிகளுக்கு விவரித்துசொல்வது சிரமமாகவே இருக்கும். எனவே, கணினி வழி குரல் பதிவு மூலம் ஒவ்வொரு அரும் பொருள்கள் பற்றிய விளக்கங்களும் பதிவுசெய்யப்பட்டு, ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம், அதனைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள முடியும். எனவே, கால மாற்றத்துக்கேற்ற நவீன தொழில்நுட்ப வசதிகளை இதுபோன்ற அருங்காட்சியங்களில் நடைமுறைப்படுத்துவது சிறப்பு சேர்க்கும்.

(இந்த கல்மரமானது, 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ‘ஆங்கியோஸ்பிரம்ஸ்’ என இக்காலத்தில் பூக்களுடன் காணப்படும் தாவர இனம் தோன்றுவதற்கு முன்னால், ‘கோனிபர்ஸ்’ என்ற பூக்கள் தோன்றால கால தாவர இனத்தைச் சேர்ந்தது என்றும் வரையறுத்துள்ளார்கள்.)

அதேபோல, இதன் அருகேயுள்ள வரகூர், ஆனைப்பாடி, ஆழுந்தளையூர், போன்ற பகுதிகளின் ஓடைப் பகுதிகளிலும் சில மீட்டர் நீளமுள்ள கல்மரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு 2009 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இங்குள்ள கல்மரப் பூங்காவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அதுதவிர இங்கு கண்டுபிடிக்கப்பட்ட பெரிய வகை கடல்வாழ் ஆமை ஓடு, நத்தை ஓடு, டைனோசர் முட்டைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.கல்மரம் தோன்ற காரணம் என்ன?

ஒரு மரம் அல்லது உயிரினம் கல் மரமாகவோ, மிருகமாகவோ மாற வேண்டுமானால், அவை அழுகும் முன்னர், அதன் உடலின் ஒவ்வொரு உயிரணுவிலும் கால்சியம் கார்பனேட்டும், சிலிகாவும் புகுந்திருக்க வேண்டும். அதுவே அந்த உயிரினம் மக்கிவிட்டால் அது கல்மரமாக ஆகாமலே மண்ணில் கலந்துவிடும்.
சில கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பல பனி யுகங்கள் உண்டானதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அந்த காலங்களில் ஏற்பட்ட புவியியல் மாற்றங்களால் மரங்கள் மண்ணில் புதைந்துக் கல் மரங்களாகி உள்ளது. அந்த மரத்தின் வகையைக் கொண்டு அந்தப் புவியமைப்பின் காலத்தைக் கணிப்பதன் மூலம் ஒரு இடத்தின் தொன்மையான புவியியல் அமைப்புகளை கண்டறிய இயலும்.

கிரேடாஷியஸ் கால படங்கள்

மேலும் 2 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய கல்மரங்களும் வைக்கப்பட்டு பாதுகாப்பாக கம்பித் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இதுகுறித்து விளக்கிச் சொல்லவும் பணியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையொட்டி, ஒரு அருங்காட்சியகம் திறக்கப்பட்டு பல்வேறு அரங்குகளில், 12 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட ‘கிரேடாஷியஸ்’ காலக்கட்டத்தை விளக்கும் வண்ணப்படங்கள் வைக்கப்பட்டு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காரைப்பாடி, ஒதியம், கரம்பியம், குன்னம், காரை, குளக்கானத்தம் ஆகிய பகுதிகளில் காணப்படும் ‘கிரேடாசியஸ்’ காலகட்டத்தில் கிடைக்கும் கடல்வாழ் உயிரினங்களின் தொல்லுயிர் எச்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதுதவிர, காரை பகுதியில் காணப்படும் சிறு குன்றுகள் நிறைந்த ‘பாழ் நிலம்’ (Bad Lands) என அழைக்கப்படும் இந்திய புவியியல் ஆய்வு மையத்தால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட இடங்களின் படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இவற்றை எல்லாம் பார்த்துவிட்டு நாம் திரும்பும்போது, ஒரு வரலாற்று பெருமிதமும் நாம் வாழும் பூமி பற்றிய அறிவியல் பார்வையும் கூடவே, நமக்குள் விவரிக்க இயலாத மனநிறைவும் ஏற்படுவதை உணர முடிகிறது என்பதே உண்மை.


மேற்குத்தொடர்ச்சி மலை,
இமயமலையின் வரலாறு!


சுமார் 8 கோடி ஆண்டுகளுக்கு முன்னர், புவியின் யூரேசிய தட்டுக்கு (இப்போது பூமி நிலைகொண்டிருக்கும் இடத்திற்கு) தெற்கே 6400 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. இரண்டையும் பிரித்தது டெதிஸ் கடல். அதன் பிறகு, 4 கோடி ஆண்டுகளுக்கு முன்னர், இப்போதைய இந்திய பகுதி, ஆசியாவை நெருங்க நெருக்க, அதனால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, டெதிஸ் கடல் சுருங்கத் தொடங்கியது. இதன் காரணமாக அதன் கடலடி (Sea bed) மெதுவாக மேல்நோக்கித் தள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சுமார் 2 கோடி ஆண்டுகளுக்கு முன்னர், டெதிஸ் கடல் முற்றிலுமாக மறைந்து, அதன் கடல்பரப்பில் இருந்து எழுந்த வண்டல், மிகப்பெரிய மலைத்தொடரை உருவாக்கியது. அதுவே இன்றைய இமயமலை.
அதுபோல், 12 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய நிலப்பகுதி, ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், மற்றும் அண்டார்டிகாவை உள்ளடக்கிய பரந்ததொரு நிலப்பரப்பு, நிலத்தட்டுகளின் நகர்வால், இந்திய நிலப்பரப்பு அண்டார்டிகாவை விட்டு விலகி, வடக்குநோக்கி பயணிக்க தொடங்கியது. அப்போது இந்திய தீபகற்பத்திற்கும் இலங்கைக்கும் இடையே மூன்று கட்டங்களில் பெரும் பிளவு ஏற்பட்டது. அப்பிளவில் உருவானதே திருச்சியில் இருந்து தொடங்கி புதுச்சேரி வரை நீளும் நீண்ட தாழ்நிலப் பரப்பு.
மேற்குத்தொடர்ச்சி மலை
அடுத்த 6 கோடி ஆண்டுகளில் கிரேட்டோசியஸ் காலத்தில் அத்தாழ்நிலப் பகுதியில் கடல் சூழ்ந்தது. அதாவது இன்றைய அரியலூரின் அரசு சிமெண்ட் தொழிற்சாலை அமைந்திருக்கும் பகுதி ஆழமற்ற கடல் மற்றும் கடற்கரை பகுதியாகவும் பெரம்பலூரின் பலப் பகுதிகள் கடற்பகுதிகளாகவும் இருந்தன. இதனால் ஏற்பட்ட புவியியல் மாற்றங்களின் காரணமாக உருவான வண்டல்படிவுகள் பிற்காலத்தில் கிரேடேசியஸ் கால படிமப்பாறைகளாக வெளிப்பட்டது.
சில கோடி ஆண்டுகளுக்குப் பிறகு மேற்குத் தொடர்ச்சி மலை உருவானது. அதன்தொடர்ச்சியாக, குடகு பகுதியில் காவிரி ஆறு தோன்றி இத்தாழ் நிலப்பரப்பில் பாய்ந்தோடத் தொடங்கியது. அதனாலேயே காவிரி தாழ்நிலப்பகுதி (Kaveri delta) அழைக்கப்படுகிறது.மா. இளஞ்செழியன்


Leave a Reply

Your email address will not be published.