சென்னை, டிச.24
தமிழகத்தில் நேற்று 1,066 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. 23 மாவட்டங்களில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நேற்று குறைந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று 650 ஆண்கள், 416 பெண்கள் என மொத்தம் 1,066 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிக பட்சமாக சென்னையில் 302 பேரும், கோவையில் 109 பேரும், செங்கல்பட்டில் 77 பேரும், காஞ்சீபுரத்தில் 40 பேரும், சேலத்தில் 36 பேரும், குறைந்தபட்சமாக அரியலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சியில் தலா 2 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ராமநாதபுரம், பெரம்பலூரில் ஒருவருக்குக்கூட தொற்று பாதிப்பு இல்லை. தமிழகத்தில் இதுவரை 8 லட்சத்து 10 ஆயிரத்து 80 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனாவுக்கு அரசு மருத்துவ மனையில் 8 பேரும், தனியார் மருத்துவமனையில் 4 பேரும் என 12 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதுவரையில் 12,024 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 1,131 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். இதுவரையில் தமிழகத்தில் 7 லட்சத்து 88 ஆயிரத்து 742 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சையில் 9 ஆயிரத்து 314 பேர் உள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 33 லட்சத்து 58 ஆயிரத்து 824 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
நேற்று ஒரே நாளில் 70 ஆயிரத்து 534 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.