செய்திகள்

10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 17 மற்றும் 23–ந் தேதி வெளியிட திட்டம்

சென்னை, ஜூன் 2-

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நேற்று தொடங்கியது. தேர்வு முடிவுகளை முறையே வருகிற 17 மற்றும் 23–-ந் தேதிகளில் வெளியிட கல்வித்துறை திட்டமிட்டு இருக்கிறது.

10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மாதம் (மே) முதல் வாரத்தில் தேர்வு தொடங்கியது. இதில் 12–ம் வகுப்புக்கு கடந்த மாதம் 28-ந்தேதியும், 10-ம் வகுப்புக்கு 30-ந்தேதியும், 11-ம் வகுப்புக்கு 31-ந்தேதியும் தேர்வு நிறைவு பெற்றது. பொதுத்தேர்வை எதிர்கொண்ட மாணவ-மாணவிகளின் விடைத்தாள்கள் பாதுகாப்பு அறையில் பத்திரமாக வைக்கப்பட்டன. இவற்றில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நேற்று தொடங்கி இருக்கிறது.

இதற்காக தமிழ்நாடு முழுவதும் 140–-க்கும் மேற்பட்ட மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டு இருக்கின்றனர். 10 மற்றும் 12-–ம் வகுப்பை சேர்ந்த 17 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் எழுதிய ஒரு கோடியே 87 லட்சம் விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளன. நேற்று தொடங்கிய இந்த விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 8–-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. அதனைத் தொடர்ந்து, 8 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதிய 11-–ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற இருக்கிறது.

தமிழ், ஆங்கிலம் பாடத்துக்கான விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர் ஒருவர் நாள் ஒன்றுக்கு காலை, பிற்பகலில் தலா 15 பேப்பர்களை திருத்தவேண்டும், இதேபோல், வேதியியல், இயற்பியல், கணித பாடத்துக்கான விடைத்தாளை திருத்தும் ஆசிரியர்கள் காலை, பிற்பகலில் தலா 12 பேப்பர்களை திருத்தவேண்டும், இதுபோல் ஒவ்வொரு பாடத்துக்கான விடைத்தாள் திருத்துவதில் ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு திருத்தி முடிக்கப்பட்டு, மதிப்பெண்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன. தேர்வு முடிவுகளை பொறுத்தவரையில், 10–-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 17–-ந்தேதியும், 12-ம் வகுப்புக்கு வருகிற 23-–ந்தேதியும் தேர்வு முடிவுகளை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதேபோல், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் (ஜூலை) 7–-ந் தேதி தேர்வு முடிவுகள் வெளியிட முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.