செய்திகள்

ரூ.1517 கோடி செலவில் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை, ஜன.7–

நெம்மேலியில் ரூ.1516 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் அமைக்கப்பட்டுவரும் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார் என்று நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

இந்த நிலையத்தின் நிறைவு கட்டப் பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார். பின்னர், அமைச்சர் நேரு தெரிவித்ததாவது:–-

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான குடிநீர், பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம், வீராணம் ஆகிய ஏரிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. பருவமழை பொய்க்கும் காலங்களில் நகரின் நீண்ட கால குடிநீர்த் தேவை மற்றும் மக்களின் அன்றாட குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களை அமைத்துள்ளது.

கடல்நீரை நிலையத்திற்கு உள் கொணரும் குழாய் மற்றும் நிராகரிக்கப்பட்ட உவர்நீரை கடலுக்கு வெளியேற்றும் குழாய், கடல்நீரை உள் வாங்கும் ஆழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, காற்றழுத்தம் மூலம் எண்ணெய் மற்றும் கசடுகளை அகற்றும் தொட்டி, வடிகட்டப்பட்ட கடல் நீர்த்தேக்கத் தொட்டி, வடிகட்டப்பட்ட கடல்நீர் உந்து நிலையம் என இந்நிலையத்தில் மொத்தம் உள்ள 23 அலகுகளில் அனைத்து பணிகளும் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

48.10 கி.மீ நீள குழாய் பதிக்கும் பணி

இந்நிலையத்திலிருந்து பெறப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் பொருட்டு, 48.10 கி.மீ நீளத்திற்கு குழாய் பதிக்கும் பணிகள் மற்றும் சோழிங்கநல்லூரில் இடைநிலை நீரேற்று நிலையம் அமைப்பதற்கான அனைத்து கட்டுமானப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்நிலையத்திலிருந்து பெறப்படும் குடிநீர், தென் சென்னை பகுதிகளான வேளச்சேரி, ஆலந்தூர், புனிததோமையார் மலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, மூவரசன்பேட்டை, சோழிங்கநல்லூர், உள்ளகரம்-புழுதிவாக்கம், மடிப்பாக்கம். தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம் மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை(ஓ.எம்.ஆர்)ல் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பகுதிகளில் உள்ள 9 லட்சம் மக்கள் பயனடைவார்கள்.

இந்நிலையத்தின் இயக்குதலுக்கான ஒப்புதல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையத்தின் அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறைவு செய்யப்படும் தருவாயில் உள்ளது. சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், முதலமைச்சர் ஸ்டாலினால் நிலையத்தின் செயல்பாடுகள் விரைவில் தொடங்கி வைக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

தா.கார்த்திகேயன்

இவ்வாய்வின்போது, நகராட்சி நிருவாக துறை அரசு முதன்மைச் செயலாளர் தா.கார்த்திகேயன், குடிநீர் வழங்கல் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய், செயல் இயக்குநர் செ.சரவணன், பொறியியல் இயக்குநர் மி.ஜெய்கர் ஜேசுதாஸ், தலைமைப் பொறியாளர் ஆர்.கந்தசாமி மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *