செய்திகள்

அடுத்த 5 ஆண்டில் மின்னணு சந்தையில் 8% வளர்ச்சிக்கு இலக்கு

மத்திய அரசின் தகவல் துறை செயலாளர் கிருஷ்ணன் உறுதி

சென்னை, ஏப். 28-

இந்தியா அடுத்த 5 ஆண்டுகளில் மின்னணு சந்தையில் 8% வளர்ச்சிக்கு இலக்கு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கேமரா, டிஸ்ப்ளே, சார்ஜர்,அடாப்டர், லித்தியம் அயன் பேட்டரி உள்ளிட்ட மின்னணு பொருள்களின் விநியோக சங்கிலி, இந்தியாவை நோக்கி மாறிக் கொண்டிருக்கிறது. அதே வேளை ஐடி துறையில் இந்தியா மிகப்பெரிய முன்னணியில் உள்ளது. எனவே டிஜிட்டல் பொருளாதாரத்தில் 10 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை அடைய முடியும் என “நவீன தொழில்நுட்பங்கள் மூலம் மீண்டெழும் பொருளாதார கட்டுமானம்” என்ற தலைப்பில் மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் பேசினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:-

இந்த சொற்பொழிவுக்கான தலைப்பாக ‘மீண்டெழுதல்’ என்று வழங்கப்பட்டுள்ளது. தானியங்கி தொழில்நுட்பம் மூலமான (Automation) பணியிழப்புகள், புவி மைய அதிகார போட்டி, வெப்பமயமாதல் போன்ற பல்வேறு காரணிகள், ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் உலக நாடுகளுக்கு இடையிலும் சமத்துவமின்மையை வளர்த்து வருகிறது என்ற காரணிகளில் இருந்து தான் இதனை நாம் பார்க்கிறோம். உலகம் தொழில்மயமாதல் நடவடிக்கையில் படிப்படியாக வளர்ந்து வந்துள்ளது.

தொழில்மயமாதல் 1.0 நீராவி என்ஜின் உள்ளிட்ட பல்வேறு மாறுதல்களை ஏற்படுத்தியது. அதேபோல் தொழில்மயமாதல் 2.0 மின்சாரமயமாதல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிகளை கண்டது. தொழில் மயமாதல் 3.0 கணினி மையம் உள்ளிட்ட புரட்சிகரமான மாற்றங்களை உள்ளடக்கியதாக இருந்தது. தொழில் மயமாதல் 4.0 என்பது, செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், ரோபோடிக்ஸ், இன்டர்நெட் ஆப் திங்ஸ், ஆகுமெண்டல் ரியாலிட்டி என புதிய புரட்சிகளை உள்ளடக்கியதாக அபார வளர்ச்சி பெற்று வருகிறது.

அது தவிர நிகழ் நேர கண்காணிப்பு, தகவல் திரட்டல், தரவுகள் மூலமாக திட்டமிடல், ஜாட்பாட் மூலமாக புரட்சிகரமான வாடிக்கையாளர் சேவை என புதிய திசையில் தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. இந்த டிஜிட்டல் மயமான மாறுதல்களை ஏற்றுக் கொண்டு செயல்படுத்துவதன் மூலம், தொடர்பு சங்கிலிகளை அதிகரிக்கலாம். தொழில் நுட்ப புத்தாக்கங்கள் மூலம், பொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும் ஆய்வு வளர்ச்சியை சாத்தியமாக்கலாம். உருவாகும் சைபர் பாதுகாப்பு சவால்களை சட்ட ரீதியான அமைப்புகள் மூலம் சரிபடுத்தி கொள்ளலாம்.

இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் 2019–20ம் ஆண்டுகளில் ரு. 13.6 லட்சம் கோடியாக இருந்தது. 2021- 22 ஆம் ஆண்டுகளில் அது ரூ. 18. 2 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. உலக மின்னணு உற்பத்தி பங்களிப்பில் சீனா 60 விழுக்காடும் இந்தியா மூன்று புள்ளி 3.30 விழுக்காடும் ஜப்பான், கொரியா, அமெரிக்கா ஆகியவை இணைந்து 20 விழுக்காடு பங்களிப்பையும் கொண்டுள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பங்களிப்பு 40 சதவீதத்தில் வந்து 20% ஆக குறைந்துள்ளது.

தனிநபர் வருவாய்

அவரைத் தொடர்ந்து, சென்னை பொருளியல் பள்ளியின் தலைவரும் முன்னாள் ரிசர்வ் பேங்க் ஆளுநருமான சி. ரங்கநாதன் தலைமையுறையில் பேசியதாவது:-

தொழில்நுட்ப வளர்ச்சியில் வேலை இன்மை அதிகரிக்கிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. தொழில்நுட்பம் வளரும் போது வேலையின்மை ஏற்படும் என்பது இயல்பான ஒன்றுதான். எடுத்துக்காட்டாக இந்திய ரிசர்வ் பேங்கில் மூன்றில் ஒரு பகுதி பணியாளர்கள், முன்பு பணத்தை எண்ணும் பணியில் மட்டுமே ஈடுபட்டிருந்தனர். ஆனால் இப்பொழுது பணம் என்னும் எந்திரங்கள் வந்த பிறகு மூன்றில் ஒரு பகுதியினருக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. இந்த மாற்றம் இயல்பான ஒன்றுதான். இதனை தவிர்க்க முடியாது. வளர்ச்சி இல்லாமல் வேலை வாய்ப்பை உருவாக்குவது எப்படி சரியானது இல்லையோ, அதேபோல் வளர்ச்சிக்காக வேலையை பறித்துக் கொள்வதும் சரியானது இல்லை என்பது தான் உண்மை.

இவ்வாறு அவர் பேசினார்.

கிருஷ்ணன் ஐஏஎஸ் பேசும்போது இந்தியா அஞ்சாவது பொருளாதார நாடாக முன்னேறி வருகிறது என்று குறிப்பிட்டார் ஆனால் தனி நபர் வருவாய் மற்ற வளர்ந்த நாடுகளை விட இந்தியாவில் மிகவும் குறைவாக உள்ளது. தனிநபர் வருவாய் உயராமல் பொருளாதார வளர்ச்சி என்பது சரியான வளர்ச்சி அல்ல என்றும் ரங்கநாதன் குறிப்பிட்டார்.

ஐஏஎஸ் அதிகாரிகள்

நிகழ்ச்சியில் சிறந்த மாணவிகள் நான்கு பேருக்கு தங்கப்பதக்கம் அணிவிக்கப்பட்டது.மேலும் நிகழ்ச்சியில் ஜி.ராமச்சந்திரன் குடும்பத்தைச் சேர்ந்த ஆர். கணபதி, கீதா கங்காதரன் மற்றும் ஸ்ரீபதி, சந்திரமௌலி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *