செய்திகள் நாடும் நடப்பும்

இஸ்ரேலுக்கு முழு ஆதரவு தரும் பைடன், ரிஷி சுனக் : போர் பதட்டத்தில் வளைகுடா

திணறும் உலக பொருளாதாரம்


ஆர்.முத்துக்குமார்


18 நாட்களை தாண்டிவிட்ட ஹமாஸ் – இஸ்ரேல் போரின் பின்விளைவு உலக பொருளாதாரத்தை பாதிப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. உக்ரைனில் பிப்.2022ல் துவங்கிய போர் பதட்டம் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட வர்த்தக சிக்கல்கள் ஆசிய பகுதிகளில் பெரிய தாக்குதலை ஏற்படுத்தவிலலை. ஆனால் இரண்டாம் ஆண்டில் நுழைய இருக்கும் அப்போரின் பின்விளைவுகளை உலக பொருளாதாரங்கள் சந்திக்க திணறிக்கொண்டே மாற்று சிந்தனைகளுடன் செயல்பட துவங்கிக்கொண்டு எதிர்நீச்சல் போட்டுக் கொண்டு இருக்க ஹமாஸ் நிலவரம் கட்டுக்கடங்காமல் யுத்த காட்சிகள் தலைவிரித்தாடத் துவங்கி இருக்கிறது.

இஸ்ரேலும் ஹமாசும் உலக அரசியலிலும் பொருளாதார விவகாரங்களிலும் பெரிய பங்களிப்பு கிடையாது என்றாலும் அமெரிக்காவும் ஐரோப்பிய ஜாம்பவான் நாடுகளும் இஸ்ரேலை நிதானித்து செயல்பட அறிவுறுத்தி வருகிறது.

அமெரிக்க ஜனாதிபதி பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஜெர்மன் அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் உட்பட பலர் இஸ்ரேலுக்கு சென்று அந்நாட்டு தலைவர்களுடன் கலந்து பேசி கள நிலவரத்தை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டி வருவது ஏன்? காரணம் இப்பதட்டம் காரணமாக ஏற்பட இருக்கும் பொருளாதார சிக்கலில் அவர்களுக்கு பெரிய தாக்குதல் காத்திருக்கிறது என்பது புரிகிறது.

ஹமாஸ் – பாலஸ்தீன மக்களின் உண்மையான பிரதிநிதிகளா? இல்லையா? என்ற வாதம் ஒரு பக்கம் இருக்க, பாலஸ்தீன மக்களும் ஹமாஸ் தலைமைக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு வாக்களித்து ஜனநாயக முறையில் ஆட்சிப் பொறுப்பை வழங்கியவர்கள் ஆவர்.

இன்று ஹமாஸ் தீவிரவாதிகளாக தென்பட்டாலும் அவர்களது கோரிக்கை இப்புதிர் நிறைந்த சம்பவங்களில் சிறுபான்மையினரான பாலஸ்தீனர்களின் பிரதிநிதிகளின் குரலாக ஹமாஸ் இருக்கிறார்கள்.

அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஹமாசை அங்கீகரிக்க மறுக்க பல காரணங்கள் கூறினாலும் பிரச்சினை தீர அவர்களிடும் பேச்சுவார்த்தைகள் நடத்த தயங்குவது ஏன்? ஹமாஸ் உண்மையான வில்லன்களா?

அப்படி ஹமாஸ் தான் வில்லன்கள் என்றால் பாலஸ்தீன மக்களின் ஆதரவு குரல் அவர்களுக்கு சாதகமாக இருந்த நிலை தொடர்கிறதா? அல்லது அவர்களும் ஹமாசை வெறுக்கிறார்களா? இதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய பொறுப்பு உலக அமைப்புகளுக்கு குறிப்பாக ஐ.நா. சபைக்கு இருப்பதை அறிவோம்.

இஸ்ரேல் நடத்திய பதிலடி தாக்குதலில் அதாவது காசா பகுதியில் குண்டுமழை பொழிந்ததே அதை ஏன் அச்சமயத்தில் அங்கிருந்த பைடனோ, பிறகு சென்ற ரிஷி சுனக்கோ கண்டிக்க தவறினர்! ஐ.நா. சபையின் நிரந்தர உறுப்பினர்களான இவ்விரு பெரிய பொருளாதாரங்களுக்கும் பாலஸ்தீன மக்கள் மீது பற்று ஏதுமின்றி இருப்பதும் இஸ்ரேலுக்கு ஆதரவு தருவதைத் தொடர்வதும் சரிதானா?

கிட்டத்தட்ட இவ்விரு ஐ.நா. சபை நிரந்தர உறுப்பினர்களும் இஸ்ரேலை தொடர்ந்து தாக்கி, பாலஸ்தீனத்தை அழித்து விடவா துணிந்துள்ளார்கள்? இவர்களின் ஆதரவால் இஸ்ரேல் கவலை ஏதுமின்றி பாலஸ்தீன யூதர்களை அழிக்க ஹிட்லர் நடத்திய ஹாவோ காஸ்ட் நிகழ்வை போல், அமெரிக்கர்கள் ஹிரோசிமா, நாகசாகியில் நடத்திய அணுகுண்டு தாக்குதல் போல், இஸ்ரேல் நடத்திட ஊக்கம் தருவதாகத் தான் வரலாறு பேச இருக்கிறதா?

இஸ்ரேல் பாதுகாப்புக்கு உதவுவது சரியாக இருக்கலாம்; அப்பாவி நோயாளிகள் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த மருத்துவமனை மீது தாக்குதல் நடத்திட துணிந்து விட்ட இஸ்ரேலை கட்டுப்படுத்தாமல் இருப்பதால் அழிவு பாலஸ்தீனத்திற்கு மட்டும் என்பது கிடையாது. உலக வர்த்தகத்தின் பெரும் அங்கமாக இருக்கும் மத்திய கிழக்கு பகுதியில் குறிப்பாக கச்சா எண்ணை வளம் கொண்ட அரபு நாடுகளின் தரைவழி, வான்வழி மற்றும் நீர்வழித்தடங்கள் ஸ்தம்பித்து விடும்.

இதை உலகப் பொருளாதாரம் அச்சத்துடன் பார்க்க ஆரம்பித்து விட்டது, அதன் பிரதிபலிப்பாகவே பங்கு மார்க்கெட்டுகள் கடும் வீழ்ச்சியை கடந்த மூன்று நாட்களாக சந்திக்க ஆரம்பித்து விட்டது.

பைடனும் ரிஷி சுனக்கும் மனித குலத்துக்கு எதிராக இஸ்ரேல் திணிக்கும் போருக்கு ஆதரவு தராமல் அதைத் தடுத்து நிறுத்தி வீழ்ச்சியைச் சந்திக்க ஆரம்பித்துவிட்ட உலகப் பொருளாதாரத்தை மீட்டு உலக அமைதியைக் காக்க முனவர வேண்டும்.


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *