செய்திகள்

புதிதாக நியமிக்கப்பட்ட பிரிட்டன்வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு

புதுடெல்லி, நவ.14–

புதிதாக நியமிக்கப்பட்ட பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் கேமரூனை சந்தித்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்.

4 நாள் அரசுமுறை பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், லண்டனில் உள்ள ஸ்ரீ சுவாமிநாராயண் கோயிலில் தீபாவளி கொண்டாடினார். அன்றைய தினம் அவர் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்துப் பேசினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான உறவுகளைப் பற்றி விவாதிக்க எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. இந்தியா இன்று மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக உள்ளது. பாரதத்தின் மீதான பார்வை எவ்வளவு மாறிவிட்டது என்பதை நான் தற்போது காண்கிறேன்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் பிரிட்டன் வெளியுறவு அமைச்சரை சந்திக்க மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அப்போது ஜேம்ஸ் க்ளெவர்லி தான் வெளியுறவு அமைச்சராக இருந்தார். ஆனால் பிரிட்டன் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. அதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுயெல்லாவை உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி பிரதமர் ரிஷி சுனக் உத்தரவிட்டார். மேலும் கிளவர்லி உள்துறை அமைச்சராகவும், அவர் வகித்த வெளியுறவுத் துறைக்கு டேவிட் கேமரூன் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்றைய சந்திப்பு புதிய அமைச்சர் கேமரூடன் நிகழ்ந்துள்ளது.

இது குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், “புதிய வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள டேவிட் கேமரூனுக்கு எனது வாழ்த்துகள். அவருடன் இரு நாட்டு நல்லுறவு, ஒத்துழைப்பு குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது” என்று பதிவிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *