செய்திகள்

ஊட்டியில் மே 10–-ந் தேதி முதல் 126-வது மலர் கண்காட்சி

20–ந் தேதி வரை நடைபெறுகிறது

ஊட்டி, ஏப்.29–-

ஊட்டி தாவரவியல் பூங்காவில் 126-வது மலர் கண்காட்சி மே 10-ம் தேதி தொடங்கி மே 20-ம் தேதி வரை நடைபெறும் என நீலகிரி கலெக்டர் அருணா அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறும். இந்த சீசனில் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர். அவ்வாறு வருபவர்களை கவரும் வகையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்படுகிறது.

தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதற்கிடையே ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மே மாதம் 17-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை புகழ் பெற்ற 126-வது மலர் கண்காட்சி நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே மலர் கண்காட்சி நடைபெறும் தேதி மாற்றப்பட்டு, இந்த ஆண்டு முன்னதாகவே தொடங்க உள்ளது. வழக்கமாக 5 நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சி, இந்த ஆண்டு 10 நாட்கள் நடைபெறுகிறது.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா நிருபர்களிடம் கூறியதாவது:-

ஊட்டி தாவரவியல் பூங்காவில் மே மாதம் 10-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெறுகிறது. குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64-வது பழ கண்காட்சி மே 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சுகாதாரமான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *