செய்திகள்

ஸ்டாலினுக்கு தோல்வி ஜூரம்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

சேலம், ஏப்.15-–

ஸ்டாலினுக்கு தோல்வி ஜூரம் வந்துவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அண்ணா தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. யார் அழிக்க நினைத்தாலும் அவர்கள் அழிந்து போவார்கள் என்று ஆத்தூரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அண்ணா தி.மு.க. வேட்பாளர் குமரகுருவுக்கு ஆதரவாக சேலம் மாவட்டம் ஆத்தூரில் நேற்று மாலை தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. இதில், அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-–

ஸ்டாலினுக்கு தோல்வி ஜுரம் வந்துவிட்டது. அதனால் எங்கு பார்த்தாலும் என்னைப் பற்றியே அவதூறாகவும், கீழ்த்தரமாக பேசுவதும் திட்டமிட்டு அண்ணா தி.மு.க.வை விமர்சிப்பதும் வாடிக்கையாக கொண்டுள்ளார். அவர், ஏதோ பொய் பிரச்சாரம் செய்து அண்ணா தி.மு.க.வை அழித்து விடலாம் என நினைக்கிறார். ஒரு ஸ்டாலின் இல்லை, ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அண்ணா தி.மு.க.வை ஒன்றும் செய்ய முடியாது.

அரசியலுக்கு வந்து 5 ஆண்டுகள் கூட ஆகவில்லை. அண்ணா தி.மு.க.வை ஒழிப்பேன் என்று ஒருவர் கூறுகிறார். அண்ணா தி.மு.க.வை அழிக்க நினைப்பவர்கள் தான் அழிந்து போவார்கள். இதுதான் சரித்திரம். ஏற்கனவே, அண்ணா தி.மு.க.வை அழிக்கவும், ஒழிக்கவும் நினைத்தவர்கள் இப்போது எந்த நிலையில் இருக்கிறார்கள்? என்பதை நினைத்து பாருங்கள்.

யாராலும் அழிக்கமுடியாது

தமிழகத்தில் 30 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி அண்ணா தி.மு.க. 2.6 லட்சம் கோடி உறுப்பினர்கள் கொண்ட இயக்கம். யார் அழிக்க நினைத்தாலும் அவர்கள் அழிந்துபோவார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் மக்கள் மனதில் தெய்வங்களாக குடியிருந்து வருகிறார்கள். மக்கள் செல்வாக்கு உள்ள கட்சியாக திகழ்வதால் அண்ணா தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது.

தி.மு.க ஆட்சியில் தான் ஸ்டெர்லைட் ஆலைக்கு நிலம் கொடுத்தனர். தி.மு.க ஆட்சியில் தான் இந்த பிரச்சினை பூதாகரமாக கிளம்பியது. அண்ணா தி.மு.க ஆட்சியில் அந்த ஆலையை மூட நடவடிக்கை எடுத்தோம்.

அந்த ஆலை சுற்றுச்சூழல் துறையில் புதுப்பிக்காமல் நிறுத்தி வைத்தோம். அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்தபோது தி.மு.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ. ஊர்வலம் நடத்தினார். அப்போது அங்கு விரும்பத்தகாத சம்பவத்தை உருவாக்கியது தி.மு.க.

மின் கட்டண உயர்வை ஒரு பைசா குறைக்க போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது தி.மு.க. அரசு. தமிழகம் முழுவதும் 16 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த விவசாயிகளின் நினைவாக இங்கும் நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது.

தி.மு.க ஆட்சியில் பல துப்பாக்கி சூடு நடந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு போராட சென்று கொண்டிருந்தபோது காவல் துறையினர் தடுத்து நிறுத்தி தாக்கியதால் உயிருக்கு பயந்து தாமிரபரணி ஆற்றில் குதித்ததில் 17 பேர் உயிரிழந்தனர். இதுவும் தி.மு.க. ஆட்சியில் நடந்தது தான். தேர்தல் நேரத்தில் அரசியல் ஆதாயம் பெற முற்பட்டால் அதற்கான தகுந்த பதிலடியை அண்ணா தி.மு.க கொடுக்கும்.

2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த 38 பேர் வெற்றி பெற்றனர். அவர்கள் 5 ஆண்டுகளாக என்ன செய்தார்கள்? நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு உரிய நிதி ஒதுக்கீடு கிடைத்திருக்கும். ஆனால் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்திற்குள் இருக்கையில் அமர்ந்துவிட்டு வந்தது தான் மிச்சம்.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை கொள்முதல் செய்ய இப்பகுதியில் கொள்முதல் நிலையம் உருவாக்கி தந்தோம். நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,020 தருவதாகவும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் தருவதாகவும், 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்துவதாகவும், அதில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றார்கள். ஆனால் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

மடிக்கணினியை நிறுத்தினீர்கள்

அண்ணா தி.மு.க. ஆட்சியில் 52 லட்சத்து 32 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி தந்தோம். அந்த திட்டத்தையும் ரத்து செய்துவிட்டனர். இப்படி அண்ணா தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை ரத்து செய்ததில்தான் தி.மு.க ஆட்சி சாதனை படைத்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு சட்டசபை தொகுதிகள் அண்ணா தி.மு.க.வின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிக்க வேண்டும். அதற்கு அண்ணா தி.மு.க. வேட்பாளர் குமரகுருவை பெருவாரியாக வாக்குகள் வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இந்த கூட்டத்தில், சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், முன்னாள் அமைச்சர் மோகன், முன்னாள் எம்.பி. காமராஜ், எம்.எல்.ஏ.க்கள் ஜெய்சங்கரன், நல்லதம்பி, சித்ரா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சின்னத்தம்பி, மாதேஸ்வரன், மாரிமுத்து, பிரபு மற்றும் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக எடப்பாடி பழனிசாமி மேடைக்கு வந்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *