செய்திகள்

மே மாத இறுதிக்குள் இந்திய படைகள் மாலத்தீவில் இருந்து வெளியேறும்

நாடாளுமன்றத்தில் அதிபர் முகமது மொய்சு பேச்சு

மாலி, பிப். 5–

மே மாத இறுதிக்குள் இந்திய படைகள் மாலத்தீவில் இருந்து வெளியேறும் என்று அந்நாட்டு அதிபர் முகமது மொய்சு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சீன ஆதரவாளரான முகமது மொய்சு, மாலத்தீவு அதிபரானதை அடுத்து அந்நாட்டில் இருக்கும் இந்திய ராணுவத்தை வெளியேற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில், இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முகமது மொய்சு, மாலத்தீவு விவகாரங்களில் தலையிடவோ, அதன் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தவோ எந்த நாட்டையும் அனுமதிக்க முடியாது. மாலத்தீவின் மூன்று விமான தளங்களில் இந்திய துருப்புகள் உள்ளன. அவற்றில் ஒரு விமான தளத்தில் உள்ள இந்திய துருப்புகள் மார்ச் 10ம் தேதிக்குள் வெளியேறிவிடுவார்கள். மற்ற இரண்டு விமான தளங்களில் உள்ள இந்திய துருப்புகள் மே 10ம் தேதிக்குள் வெளியேறிவிடுவார்கள். இதற்கான ஒப்பந்தம் இந்தியா – மாலத்தீவு இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

முகமது மொய்சுவின் இந்த நடவடிக்கைக்கு மாலத்தீவின் இரு பெரும் எதிர்க்கட்சிகளான எம்டிபி மற்றும் ஜனநாயகக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதிபர் நாடாளுமன்றத்தில் பேசும்போது, எம்டிபியின் 43 உறுப்பினர்கள் மற்றும் ஜனநாயகக் கட்சியின் 13 உறுப்பினர்கள் என 56 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். முகமது மொய்சு பேசும்போது அவையில் 24 உறுப்பினர்கள் மட்டுமே இருந்துள்ளனர். இது மாலத்தீவு நாடாளுமன்ற வரலாற்றில் அதிபரின் உரைக்கு ஏற்பட்ட மிகப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. முகமது மொய்சுவின் இந்திய விரோதப் போக்கு தவறானது என கூறி வரும் எம்டிபி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகியவை, அதிபர் முகமது மொய்சுவை பதவிநீக்கம் செய்ய முயன்று வருகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *