செய்திகள்

மிசோரமில் 40 தொகுதியிலும் இன்று ஒரே கட்டமாக தேர்தல்

மிசோ தேசிய முன்னணி வெற்றிபெறும்; பாரதீய ஜனதாவுடன் கூட்டணி இல்லை மிசோரம் முதலமைச்சர் ஜோரம்தங்கா உறுதி

அய்சால், நவ. 7–

மிசோ தேசிய முன்னணி அறுதிப் பெரும்பான்மை பெறும் எனவும் பாஜகவுடன் கூட்டணி இல்லை எனவும் மிசோரம் முதலமைச்சர் ஜோரம்தங்கா தெரிவித்துள்ளார்.

மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில், மாநிலத்தில் உள்ள 8.57 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர்.

மிசோரமில் உள்ள 1,276 வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி மதுப் வியாஸ் தெரிவித்தார். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ஆம் தேதி நடைபெறும். வாக்கெடுப்பை முன்னிட்டு, மியான்மர் உடனான 510 கிமீ நீள சர்வதேச எல்லையும், வங்கதேசத்துடனான 318 கிமீ நீள எல்லையும் சீல் வைக்கப்பட்டுள்ளன.

பெரும்பான்மை பெறுவோம்

இது தவிர, அசாமின் மூன்று மாவட்டங்கள், மணிப்பூரின் இரண்டு மாவட்டங்கள் மற்றும் திரிபுராவின் ஒரு மாவட்டத்துடன் மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. தேர்தல் பணிகளுக்காக குறைந்தது 3,000 காவல்துறையினரும், 5,400 மத்திய ஆயுதப்படை காவலர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேர்தலில் 18 பெண்கள் உட்பட 174 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆளும் மிசோ தேசிய முன்னணி (MNF), முக்கிய எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) மற்றும் காங்கிரஸ் ஆகியவை 40 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. பாஜக 23 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

இந்நிலையில், அந்த மாநில முதலமைச்சர் ஜோரம்தங்கா, ஐஸ்வால் வெங்கலை பகுதி வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்றார். அப்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் திரும்பி சென்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தன்னுடைய மிசோ தேசிய முன்னணி கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனவும் தனது கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளதை தவிர, மாநிலத்தில் பாஜகவுடன் எந்தக் கூட்டணியும் இல்லை என தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *