செய்திகள்

தாமிரபரணி ஆற்றில் 6 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

நெல்லை, ஜன. 10–

தாமிரபரணி ஆற்றில் இன்று 6 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது.நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று பிரதான அணையான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் பரவலாக மழை பெய்த நிலையில், இன்றும் காலை வரையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

அதன்படி பாபநாசத்தில் 30 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 21 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 12 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. பாபநாசம் அணை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு 2,358 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2,547 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மணிமுத்தாறு அணைக்கு 1,728 கனஅடி நீர் வரும் நிலையில் வினாடிக்கு 1,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதுதவிர கடனா அணையில் இருந்து 303 கனஅடி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.

இதனால் மொத்தமாக இன்று காலை நிலவரப்படி தாமிரபரணி ஆற்றில் 6 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் ஓடியது. மாநகர பகுதியில் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் ஓடியது. தற்போது ஆற்றில் தண்ணீர் அளவு அதிகரித்து காணப்படுவதால் அங்கு குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ள நிலையில் இன்று காலை முதல் குளிக்க வந்தவர்களை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை விடுத்து திரும்பி அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மெயினருவியில் அதிக அளவு தண்ணீர் விழுவதால் அங்கு இன்றும் 4-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *