செய்திகள்

புயல், கனமழை எச்சரிக்கை: அண்ணா, சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளிவைப்பு

சென்னை, டிச.3-–

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, அண்ணா பல்கலைக் கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து அந்த பல்கலைக் கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-–

தமிழ்நாட்டில் இன்று மாலை முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்ப தாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனத்தின் செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைக்கப்படுகிறது.

அதேபோல், நாளை (திங்கட்கிழமை) நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் என்ஜினீயரிங் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் தள்ளிவைக்கப்படுகிறது. தள்ளிவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

அதேபோல் சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு உதவிப்பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளின் நவம்பர், டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகளும் நடைபெற்று வருகிறது.

நாளை (திங்கட்கிழமை) நடைபெறும் செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

4 மாவட்டங்களில் நாளை

பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை

புயல் காரணமாக நாளை கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், மாணவர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (4ம் தேதி) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *