செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா: பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் குளிர்பானம்

மதுரை, ஏப். 16–

மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு, இஸ்லாமியர்கள் குளிர்பானம் வழங்கி உபசரித்து வருவது, மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 12 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாள்தோறும் அம்மனும் சுவாமியும் மாசி வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.

இந்நிலையில் 4 -ம் நாள் நிகழ்வாக நேற்று மாலை சுவாமியும் அம்மனும் வில்லாபுரத்திலுள்ள பாவாக்காய் மண்டகப்படியிலிருந்து புறப்பட்டு கோயிலுக்கு வருகை தந்தனர். மதுரை தெற்குவாசல் பகுதியில் சுவாமியும் அம்மனும் வீதி உலா சென்றபோது சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு தெற்குவாசல் பகுதியில் உள்ள பிரபலமான முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசல் சார்பில் ரோஸ் மில்க் உள்ளிட்ட குளிர்பானங்களை வழங்கப்பட்டது.

இஸ்லாமியர்கள் குளிர்பானம்

இப்போது மட்டுமல்ல, பல ஆண்டுகளாகச் சித்திரை திருவிழா 4-ம் நாள் நிகழ்வின் போது மீனாட்சியம்மன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் குளிர்பானங்கள் வழங்கி வருகிறார்கள். மதுரையில் கொண்டாடப்படும் சித்திரைத் திருவிழா மதங்கள் கடந்து கொண்டாடப்படுகிறது என்பதற்கு இது போன்ற நிகழ்வுகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன.

“ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் நீண்ட தூரம் நடந்து வருவதால் களைப்போடு இருப்பார்கள், என்பதால் இதுபோன்று குளிர்பானங்கள் வழங்கி வருகிறோம். ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதற்கு இதுபோன்ற பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்” என தெற்கு வாசல் ஜமாத் நிர்வாகிகள் தெரிவித்தனர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *