செய்திகள் நாடும் நடப்பும்

மக்கள் ஆரோக்கியம், மகளீர் மேம்பாடு: பிரதமர் மோடியின் நாட்டு வளர்ச்சிக்கு வெற்றி திட்டங்கள்


ஆர்.முத்துக்குமார்


பருவநிலை மாற்றங்களும் அதிகரிக்கும் நோய் அவதிகள் பற்றி நன்கு தெரிந்தவர்களில் நமது பிரதமர் மோடியும் உண்டு. அதனால் தான் ஐ.நா. சபையின் பருவநிலை மாநாட்டில் பிரதான பேச்சாளராக அறிவிக்கப்பட்டு அவரது கருத்துக்களை உலகத் தலைவர்கள் உண்ணிப்பாக கவனித்துக் கேட்கும் வாய்ப்பைப் பெற்றனர்.

தற்போது துபாயில் ஐ.நா. சபையின் 28–வது பருவநிலை மாறுபாடு மாநாடு நடந்து கொண்டிருப்பதில் டிசம்பர் 1 அன்று மோடியை முன்வரிசையில் அமர வைத்து பிரதான பேச்சாளராக அறிவிக்கப்பட்டு அவரைப் பேச அழைத்து இருந்தனர்.

அவர் பேச்சைக் கேட்ட 100 நாடுகளின் தலைவர்கள் பட்டியலில் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், பிரிட்டர் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் மெக்ரான், ஜெர்மன் பிரதமர் ஓலாக் ஷோல்ஸ், இத்தாலி பிரதமர் ஜார்ஜிய மெலோனி, ஜப்பான் பிரதமர் கிஷிடோ என பலர் இருந்தனர்.

இது சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கு கிடைத்திருக்கும் சிறப்பான செல்வாக்கு என்பதை உணர முடிகிறது.

ரஷ்யாவையும் சீனாவையும் உலக தலைவர்கள் அமெரிக்க கெடுபிடி அரசியல் காரணங்களால் இப்படி ஒரு முடிவை எடுத்து வந்தாலும் இந்தியாவின் நிலைப்பாட்டை உலகத் தலைவர்கள் வரவேற்பதை தான் இந்நிகழ்வு சுட்டிக்காட்டுகிறது.

பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழல் சமநிலையை உறுதிப்படுத்துதல் போன்றவற்றில் இந்தியா உலக நாடுகளுக்கு நல்ல முன்உதாரணங்கள் என்று பெருமையுடன் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

மேலும் உலக மக்கள் தொகையில் 17 சதவிகிதம் பேர் இந்தியாவில் வாழ்கிறார்கள், ஆனால் சர்வதேச கரியமில வாயு உமிழ்வில் நம் நாட்டின் பங்கு வெறும் 4 சதவிகிதம் மட்டுமே என்பதையும் சுட்டிக்காட்டினார்.

பாரீஸ் ஒப்பந்தம் ஏற்படுத்திய திட்டவரைவுகளை பல நாடுகள் உதாசீனப்படுத்தி விட்டாலும் நாங்கள் அந்த இலக்கை எட்ட கண்டிப்புடன் செயல்படுத்த உறுதியாக இருக்கிறோம் என்றும் கூறினார்.

கடந்த நூற்றாண்டுகளின் வளர்ச்சிகளை மாற்றிட முடியாது. அதன் தவறுகளையும் திருத்த முடியாது. இனியாவது பூமியின் சுற்றுச்சூழலை பாதுகாப்போம். இதுவரை சந்தித்த எதிர்வினைகளை உலகமே சந்தித்து வருவதையும் உணர்ந்து பொறுப்புடன் செயல்படுவோம் என்று கூறினார்.

அது மட்டுமின்றி 2028ல் ஐ.நா பருவநிலை மாறுபாடு மாநாட்டை இந்தியாவில் நடத்தவும் அழைப்பு விடுத்தார்.

சர்வதேச நாடுகள் வந்து இந்தியாவின் சுற்றுச்சூழலை விமர்சித்து பேச வாய்ப்புகள் இருந்தும் இப்படி ஓர் அழைப்பை பிரதமர் மோடி வெளியிட்டு இருப்பது நமது நடவடிக்கைகள் மீது அவருக்கு இருக்கும் நம்பிக்கை என்பதை இந்தியர்கள் உணர்ந்தாக வேண்டும்.

சுற்றுச்சூழல் பாதிப்பால் சுகாதாரச் சீர்கேடுகள் அதிகரிக்கும் அதையும் சமாளிக்க பிரதமர் மோடி இம்மாத துவக்கத்தில் விசேஷ நடவடிக்கைகள் எடுத்துள்ளார்.

நாடு முழுவதிலும் மக்கள் மருந்தகம் எண்ணிக்கையை 10,000-ல் இருந்து 25,000 ஆக உயர்த்தும் திட்டம், மகளிர் டிரோன் திட்டம் ஆகியவற்றை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்.

மத்திய அரசின் முன்னணி திட்டங்களின் பயன்கள் மக்களுக்கு குறித்த நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் அவற்றை மேலும் செறிவூட்டும் நோக்கில் ‘வளர்ந்த இந்தியா சபத யாத்திரை’ (விக்‌ஷித் பாரத் சங்கல்ப் யாத்ரா) நாடு முழுவதும் நடத்தப்படுகிறது.

10,000-வது மக்கள் மருந்தகத்தை ஜார்கண்ட் மாநிலத்தின் தியோகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் தொடக்கி வைத்தார். மக்கள் மருந்தகங்கள் எண்ணிக்கையை 10,000-ல் இருந்து 25,000 ஆக அதிகரிக்கும் திட்டத்தையும் தொடக்கி வைத்தார்.

மேலும் மகளிர் டிரோன் திட்டத்தையும் பிரதமர் தொடக்கி வைத்தார். இத்திட்டம் மூலம் அடுத்த 3 ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்ட 15,000 மகளிர் சுயஉதவி குழுவினருக்கு ட்ரோன்களும் இவற்றை இயக்க பயிற்சியும் அளிக்கப்படும். அதன்பிறகு விவசாய பணிகளுக்கு டிரோன்கள் வாடகைக்கு விடப்படும். ‘‘இதன்மூலம் டிரோன்களை இயக்கும் பெண் பைலட்டுகளுக்கு கிராமங்களில் மரியாதை கிடைக்கும். அவர்களின் நிதி நிலையும் மேம்படும். என்னை பொறுத்தவரை ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள்தான் 4 மிகப் பெரிய பிரிவினர். இவர்களின் வளர்ச்சிதான் வளர்ந்த இந்தியாவை உருவாக்கும்’’ என்று பிரதமர் கூறினார்.மொத்தத்தில் நாட்டின் வளம் அதன் பிரஜைகளின் ஆரோக்கியத்திலும் மகளிர் பொருளாதார வளர்ச்சியிலும் இருப்பதை உணர்ந்து பிரதமர் மோடி இப்படி ஓரு நல்ல திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளார்.

நாட்டு வளர்ச்சிக்கு வெற்றி திட்டங்கள் அவை;

பிரதமர் மோடியின் இத்திட்டங்களை பாராட்டி வரவேற்போம்.


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *