செய்திகள்

தூத்துக்குடியில் 8 ஆயிரம் டன் அரிசி சேதம்: 500 டன் கோதுமையும் வீணானது

தூத்துக்குடி, டிச.24-

தூத்துக்குடியில் உள்ள இந்திய உணவுக்கழக குடோனில் மழை வெள்ளம் புகுந்ததால் சுமார் 8 ஆயிரம் டன் ரேஷன் அரிசி சேதம் அடைந்து உள்ளது. 500 டன் கோதுமையும் வீணானது.

இந்திய உணவுக்கழகத்துக்கு சொந்தமான குடோன் தூத்துக்குடியில் அமைந்து உள்ளது. இங்கு பொது வினியோகத்துக்கான அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்டவை இருப்பு வைக்கப்படுகின்றன.

ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் அரிசி கொண்டு வரப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. இந்த குடோனில் சுமார் 24 ஆயிரம் டன் அரிசியும், 2 ஆயிரம் டன் கோதுமையும் இருப்பு வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளநீர் தூத்துக்குடி–மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள இந்திய உணவுக்கழக குடோனையும் சூழ்ந்து உள்ளே புகுந்தது.

இதனால் குடோனில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த அரிசி மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதம் அடைந்து உள்ளன. அதேபோன்று கோதுமை மூட்டைகளும் நனைந்து முளைக்க ஆரம்பித்து உள்ளன. இதில் சுமார் 8 ஆயிரம் டன் வரை ரேஷன் அரிசியும், 500 டன் வரை கோதுமையும் சேதம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு இந்திய உணவுக்கழக ஊழியர் சங்க செயலாளர் கதிர்வேல் கூறுகையில், ‘தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக இந்திய உணவுக்கழக குடோனுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் குடோனில் வைக்கப்பட்டு இருந்த அரிசி மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதம் அடைந்து உள்ளன. இதில் சுமார் 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் டன் வரை சேதம் அடைந்து இருக்கலாம். இதனால் சேதம் அடைந்த அரிசி மூட்டைகளை விரைவாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தாமதம் ஆனால் சேதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதற்கு இந்திய உணவுக்கழக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

உப்பளங்கள் சேதம்

தூத்துக்குடியை அடுத்த முள்ளக்காடு, முத்தையாபுரம், அத்திமரப்பட்டி, பொட்டல்காடு, புல்லாவெளி உள்ளிட்ட பகுதிகளில் மழைவெள்ளம் சூழ்ந்ததால் அந்த பகுதியில் உள்ள உப்பளங்களை வெள்ளம் மூழ்கடித்தது. அங்கு சேமித்து வைத்திருந்த உப்பு அம்பாரங்களும் நீரில் மூழ்கி கரைந்து சேதம் அடைந்தன.

இதேபோன்று ஆறுமுகநேரி, சாகுபுரம், பழையகாயல் உள்ளிட்ட பகுதிகளிலும் வெள்ளத்தால் உப்பளங்கள் நீரில் மூழ்கி ஏரியாக மாறியது. அங்கு ஏற்றுமதி செய்வதற்காக தார்ப்பாயால் மூடி வைத்திருந்த உப்பு அம்பாரங்களும் தண்ணீரில் கரைந்து வீணாகின.

பல கோடி ரூபாய் மதிப்பிலான உப்பு அம்பாரங்கள் தண்ணீரில் கரைந்து சேதமடைந்ததாகவும், இதனால் சொந்த தேவைக்கு கூட வெளியூர்களில் இருந்து உப்பு இறக்குமதி செய்யும் நிலையில் உள்ளதாகவும் உப்பு உற்பத்தியாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *