சிறுகதை

மகளிர் பயணச் சீட்டு – ராஜா செல்லமுத்து

போரூரில் இருந்து வடபழனி வரைசெல்லும் வழித்தடத்தில், வடபழனியில் வேலை பார்க்கும் இளங்கோவன் எத்தனையோ பேருந்துகள் வந்தாலும் மகளிர் இலவசமாக இருக்கும் பேருந்தில் தான் ஏறுவார் இளங்கோ.

தனக்கு ஒரு சீட்டும் மகளிர் பயண சீட்டு வாங்கிக்கொள்வார். இதனால் தினமும் மகளிருக்கு இலவசப் பேருந்து பயண சீட்டு கிடைத்துவிடும். தான் ஒருவனுக்கு மட்டும் பயணச் சீட்டு எடுத்தால் போதும் என்று நினைக்கும் இளங்கோ காத்திருந்து கூட இலவசப் பேருந்தில் பயணம் செய்வதுதான் அவருக்கு பிடித்தமான ஒன்றாக இருந்தது.

நடத்துனருக்கு வேலை வைக்காமல் பின்பக்க வாசல் வழியாக ஏறி வடபழனி ஒன்று மகளிர் பயணச் சீட்டு ஒன்று என்று வாங்கிக் கொள்வார்.

இப்படியாக தினமும் தனக்கு ஒரு பயணச் சீட்டும் தன் மனைவிக்கு ஒரு பயண சீட்டுமாக வாங்கிக் கொண்டு பயணமாகிக் கொண்டு இருப்பார் இளங்கோவன்.

பேருந்துகள் மாறினாலும் அவரின் வருகை மாறாது. அதேபோல இளங்கோ பேருந்தில் ஏறும் போது அவர் பின்னால் ராஜூவும் ஏறுவான்.

இளங்கோ வடபழனி ஒரு டிக்கெட் மகளிர் ஒரு டிக்கெட் என்று டிக்கெட் எடுப்பதை சில சமயம் கவனிப்பான். ஒரு சில சமயம் கவனிக்காமல் இருந்து விடுவான்.

ஒரு நாள் இரண்டு பேரும் ஒரே சமயத்தில் பேருந்தை விட்டு கீழே இறங்க வேண்டியதாக இருந்தது இளங்கோ மட்டும் தனியாக போய்க் கொண்டிருந்தார். அவரின் மனைவியோ இல்லை மகளோ அம்மாவோ யாரும் இல்லை. இன்று அவர்கள் வரவில்லை போல என்று நினைத்தபடியே விட்டு விட்டான் ராஜு.

மறுநாளும் அதே நேரம் இரண்டு பேரும் பேருந்தில் ஏறினார்கள். காலை நேரம் என்பதால் கொஞ்சம் நெருக்கடியாகவே இருக்கும் பேருந்தில் ராஜு வடபழனி ஒரு டிக்கெட் எடுத்துக் கொண்டான். அருகில் இருந்த இளங்கோவும் வடபழனிக்கு ஒரு டிக்கெட் மகளிர் சீட்டு என்று வாங்கிக் கொண்டார்.

ஒருவேளை இன்று அவரின் மனைவி அல்லது மகள் அல்லது அம்மா உடன் வந்திருக்கலாம் அதுதான் இவர் மகளிர் பயணச் சீட்டு வாங்கிக் கொண்டார் என்று நினைத்த ராஜு அவரைக் கவனித்தான் இருவரும் வடபழனியில் இறங்கினார்கள்.

அப்போதும் இளங்கோவின் பின்னால் எந்தப் பெண்ணும் இல்லை, பின் எதற்காக இவர் தினமும் மகளிர் பயணச் சீட்டு என்று வாங்கிக் கொள்கிறார். என்ன காரணத்திற்காக இருக்கும் சரி நாளை பார்க்கலாம் என்று நினைத்தான் ராஜு.

மறுநாளும் அதேபோல வடபழனி ஒரு டிக்கெட் மகளிர் பயண சீட்டு 1 என்று வாங்கிக் கொண்டார் இளங்கோவன்.

ராஜூக்கு ஒரே குழப்பமாக இருந்தது. இலவசப் பயண சீட்டு என்பதற்காக இதை வாங்கி வைத்துக் கொள்கிறாரா? அப்படி ஒரு சீட்டை வாங்கி வைத்துக் கொள்வதால் அவருக்கு என்ன பயன் இருக்கப் போகிறது? இல்லை வராத பெண்ணுக்கு ஏன் இவர் மகளிர் பயண சீட்டு என்று வாங்கிக் கொள்கிறார்? என்று நினைத்த ராஜுக்கு தலை சுற்றியது.

அன்றும் இருவரும் ஒரே நேரத்தில் பேருந்தை விட்டு இறங்கினார்கள். அதுவரையில் அவரைப் பார்த்து இருக்கிறான். ஆனால் இளங்கோவுடன் பேசியதில்லை. இன்று பேசுவோமா? வேண்டாமா? என்று நினைத்துக் கொண்டிருந்த ராஜு சரி கேட்டு தான் பார்த்து விடலாம் என்று நினைத்தபடியே எக்ஸ்கியூஸ் மீ சார் என்று முன்னால் போய்க் கொண்டிருந்த இளங்கோவைக் கூப்பிட்டான் ராஜு.

எஸ் என்று திரும்பினார் இளங்கோவன்.

சார் நானும் உங்கள தினந்தோறும் கவனிச்சுக்கிட்டு தான் இருக்கேன். உங்களுக்கு ஒரு டிக்கெட் எடுக்குறிங்க மகளிர் பயண சீட்டு ஒன்னும் வாங்கிக்கிருங்க. ஆனா எந்த மகளிரும் உங்க பின்னால வரலையே? யாருக்காக இந்த டிக்கெட் எடுக்குறீங்க ?என்று கேட்க கடகடவென சிரித்தார் இளங்கோவன்.

என்ன இப்படி சொல்றீங்க? இந்தா என்னுடைய மகள் போறாளே தெரியலையா? என்று இளங்கோ சொல்ல,

ராஜுவுக்கு தூக்கி வாரிப் போட்டது.

என்ன சொல்றீங்க? எங்க உங்க மக போய்கிட்டு இருக்காங்க . இல்லைய என்று ராஜு கேட்டபோது

என்னங்க உங்களுக்கு கண்ணு தெரியலையா? அந்தா போறா பாருங்க என் பொண்ணு. அவளுக்குத்தான் டிக்கெட் எடுத்து இருக்கேன். இங்க பக்கத்துல இருக்குற ஸ்கூல்ல படிச்சிட்டு இருக்கா. நான் அவளை ஸ்கூல்ல விட்டுட்டு நான் என்னோட ஆபீஸ் போயிடுவேன். தினந்தோறும் என் கூட தான் வந்துட்டு இருக்கா. நீங்க பார்த்ததில்லையா?என்று இளங்கோ சொல்ல அவர் சொன்னதைக் கேட்ட ராஜுவுக்கு தலை சுற்றியது.

சார் இங்க யாருமே இல்லையே? எங்க உங்க பொண்ணு போறாங்க உளராதீங்க ?என்று ராஜு சொன்னபோது உங்களுக்கு கண்ணு சரியா தெரியலன்னு நினைக்கிறேன் போய் நல்ல டாக்டரா பாருங்க என்று இளங்கோ ராஜுவை முறைத்து விட்டு சென்றார்.

என்னடா இது இப்படி ஒரு ஆளா? இவருக்கு ஏதோ மனப்பிரச்சனை இருக்கும் போல? அதுதான் உருவமே இல்லாதத உருவம் இருக்கிறதா நினைத்து கற்பனை பண்ணி வாழ்ந்துட்டிருக்கிறார் என்று யோசித்துக் கொண்டிருந்த ராஜுவை பின்னால் யாரோ தொடுவது போல உணர்வு ஏற்பட்டது.

தம்பி இளங்கோ கூட பேசினீங்களா? என்று ராஜுவிடம் கேள்வியாய் கேட்டார் ஒருவர் யார் இவர்? என்று தெரியாமல் விழித்த ராஜு ஆமா என்று தலையை மட்டும் ஆட்டினான்.

இளங்கோ நல்ல ஆளு தம்பி. ஒரே பொண்ணு. ஒரு விபத்தில் இறந்துட்டா அவனால அதை தாங்க முடியல. அதிலிருந்து தன்னோட பொண்ணு தான் கூட இருக்கிறதா நினைச்சுகிட்டு வாழ்ந்திட்டு இருக்கிறார். ரெட்டை சடை போட்டு பின்னாடி ஸ்கூல் பேக்கை மாட்டிகிட்டு தன்னோட பொண்ணு போறதாக இன்னும் கற்பனை பண்ணி தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் இளங்கோவன் எனக்கு தெரிஞ்சவர் தான் அவரோட மனச நான் வருத்தப்படும்படி பேசுறதில்ல. அவர் என்ன நினைச்சு வாழ்ந்துட்டு இருக்காரோஅப்படியே இருக்கட்டும்னு விட்டுட்டேன். சரி தம்பி எனக்கு வேலைக்கு நேரம் ஆச்சு. நான் வாரேன் என்று சொல்லிவிட்டு நடந்தார் ராஜுவுடன் பேசியவர்.

தூரம் பார்த்தான் ராஜு. தன்னுடன் மகள் வருவதாக எண்ணிக்கொண்டு நடந்து போய்க் கொண்டிருந்தார் இளங்கோவன்.

மறுநாள் அதே வழித்தடம் இளங்கோவன் பேருந்தில் ஏறினார்.

சார் ஒரு வடபழனி டிக்கெட்டு ஒரு மகளிர் சீட்டு என்று கேட்டார். அதுவரையில் குழப்பத்தில் இருந்த ராஜுவிற்கு இளங்கோவின் நிலை இப்போது புரிந்தது.

அவரை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தான். இளங்கோ தன்னுடன் மகள் நின்று கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டு பயணம் ஆனார்.

நடத்துனரும் உடன் வரும் பெண்ணின் அடையாளமோ? இல்லை யார் உங்களுடன் வந்திருக்கும் பெண் என்றோ கேட்பதில்லை. இலவசப் பயணச் சீட்டு என்பதால் கிழித்துக் கொடுத்து விடுகிறார்கள்.

இளங்கோவும் அப்படித்தான் தினமும் மகளிர் பயணச் சீட்டை வாங்கிக் கொண்டு சென்று கொண்டிருக்கிறார்.

இன்றும் அதே வட பழனி பேருந்து நிறுத்தம். இப்போது இளங்கோவன் முன்னால் இறங்கினார். ராஜு அவரின் பின்னால் இறங்கினான்.

தன்னுடன் அவரின் மகள் வருவதாக ஏதோ பேசிக் கொண்டே சென்று கொண்டிருந்தார் இளங்கோவன்.

ராஜுவுக்கு அவனை அறியாமலேயே அவன் கண்ணில் கண்ணீர் கசிந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *