சிறுகதை

இப்படி நடந்தால்….மு.வெ. சம்பத்

திருப்பதி நன்றாகத் திட்டமிட்டு வாழ்வை நடத்தி ஒரு அரசராகவே வலம் வந்தார்.

அவர் மனைவி தயாசினி தன் கணவருடன் கை கோர்த்து செல்வதில் ஆனந்தம் அடைபவர். இவர்களுக்கு வாரிசாக இரண்டு மகன்களும் ஒரு மகளும் வலம் வந்தனர்.

திருப்பதி தான் செய்ய வேண்டிய கடமையைச் சரியாகச் செய்து தனது வாரிசுகளை நன்றாக படிக்க வைத்தார்.

அவர்கள் தற்போது அரசாங்க வேலை கிடைக்கப் பெற்று மகிழ்ச்சியுடன் வலம் வருகிறார்கள்.

மகன்கள் பெயர் ஆதிரன், சமரன். மகள் அகல்யா.

எல்லோருக்கும் அலுவலகம் சென்று வர வாகன வசதி ஏற்பாடு செய்து தந்திருந்தார் திருப்பதி.

தனது மூத்த மகனுக்கு நல்ல இடத்தில் சம்பந்தம் ஏற்படுத்திக் கொடுத்தார். நன்கு படித்த பெண்ணை அவர் மகன் ஆதிரனுக்கு மணம் முடித்தார்.

ஆதிரன் மனைவி அமுதினியும் பெரிய கம்பெனி ஒன்றில் பணி புரிந்து வருகிறார்.

திருமணம் தடபுடலாக நடந்து முடிந்தது. தன் வீட்டின் பின்புறமுள்ள காலி மனையில் தனது மகன்கள் மற்றும் மகளுக்கு நல்ல வசதியாக இருக்கும்படியான வீடுகளைக் கட்டித் தந்தார் திருப்பதி.

ஆனால் உணவு மட்டும் பொதுவானதாக தன் வீட்டில் வைத்துக் கொண்டார்.

மனதிற்குள் எல்லோரும் மகிழ்ந்தாலும் அவர்கள் எந்த ஒரு அசைவையும் காட்டாதது திருப்பதிக்கு வருத்தம். தயாசினி அவர்கள் ஏதும் கூறா விட்டால் என்ன, நமது கடமை தானே என்றார்.

தனது இரண்டாவது மகன் இரண்டு நாட்கள் வெளியூர் சென்று வந்தவர் தான் ஒரு இஸ்லாமிய பெண்ணை விரும்புவதாகவும். அவரும் என்னை விரும்புகிறார் என்றும் கூறினார்.

திருமணத்திற்குப் பின் அவர் சைவத்திற்கு மாறி விடுவதாக வாக்குத் தந்துள்ளார் என்றார்.

எனது அபிப்பிராயம் கூறி விட்டேன் என்று கூறி நகர்ந்தார்.

திருப்பதி மனைவியைப் பார்க்க, அவர் மனைவி,

‘‘நாம் என்ன செய்வது? நடப்பது நடக்கட்டும். நாம் ஏன் தடையாக இருக்க வேண்டும் ’’என்று மெல்லிய குரலோசையில் கூறினார்.

திருப்பதி, ‘‘வயதானவர்கள் பயணிகள் தானே. பயண முடிவை நோக்கி நிற்கும் பயணி தானே, அவர்கள் எதிர்காலம் அவர்கள் கையில்….’’ என்று முடித்துக் கொண்டார்.

திருமணம் முடிந்ததும் அவர்கள் வீட்டில் அவர்களது பகுதிக்குச் சென்றார்கள். சமரன் அன்று காலை வந்து அப்பாவிடம் இனிமேல் எங்களுக்கு நாங்களே சமையல் செய்து கொள்கிறோம் என்றதும் திருப்பதி சரியெனச் சொன்னார்.

சமரன் மனைவி பாத்திமா தனது பெயரை நிகிலா என மாற்றிக் கொண்டார். நிகிலா திருப்பதி மற்றும் அவர் மனைவி இருக்கும் பகுதிக்கு வருவதையே தவிர்த்தார்.

அன்று காலை திருப்பதி தனது மனைவியிடம் நம் மகள் திருமணம் பற்றி ஆரம்பிப்பதற்கு முன் அவரிடம் கருத்துக் கேட்கும்படி கூறினார்.

தயாசினி தனது மகளிடம் திருமண பேச்சை ஆரம்பித்ததும் அவர் தான் ஒருவரை விரும்புவதாகவும் அவர் கிருத்துவமதத்தைச் சார்ந்தவர் என்றும் கூறினார்.

மயக்கம் ஏற்படும் நிலைக்குத் தள்ளப்பட்டார் தயாசினி . அங்கு வந்த திருப்பதி உனது விருப்பம் என்று கூறி விட்டு, திருமணத்திற்குப் பிறகு எங்கே குடியிருப்பாய் எனக் கேட்டுவிட்டு நகர்ந்தார்.

எனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் தான் என்றார் அகல்யா. தயாசினி கோபத்துடன் வீட்டோடு மாப்பிள்ளையா என்றார். அகல்யா திருமணம் முடிந்ததும் அவரும் தனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டின் பகுதியில் தங்கினார்.

அகல்யாவும் தானே சமையல் செய்து கொள்வதாக் கூறிச் சென்றார். ஆலமரம் சுற்றி நிறைய விழுதுகள் தொங்கினாலும் அவை ஆலமரத்துக்குச் சொந்தமில்லை என்று எங்கோ படித்ததைக் கூறினார் திருப்பதி.

அவரவர்கள் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டாலும் திருப்பதி , தயாசினி தனி வாழ்க்கையையே தொடர்ந்தனர். இனிமேல் குடும்ப ஒற்றுமை என்பது நினைத்துப் பார்க்க முடியாததொன்று என்று திருப்பதி நினைத்தார்.

தயாசினி திருப்பதியுடன் அடிக்கடி வெளியூர் பயணம் சென்றார் ஒரு மாறுதலுக்காக.

அவர்கள் இல்லாத நாட்களில் அவர்கள் வீட்டை திறந்து கூட ஒருவரும் சுத்தம் செய்ய மாட்டார்கள். அமுதினியும் தனது போக்கை மாற்றிக் கொண்டார்.

தயாசினிக்கு திடீரென ஆரோக்கிய குறைவு ஏற்பட திருப்பதி உடனே மருத்துவரை அழைத்தார். மருத்துவர் வந்து பார்த்து அவர் உடல் நிலை மோசமாகவே உள்ளது. என்ன தான் வைத்தியம் பண்ணினாலும் கொஞ்சம் கடினம் தான் என்றார்.

தானே வலுவான வைத்தியம் செய்கிறேன். என்ன செய்வது இறைவன் சித்தம் என்றார். திருப்பதி தனது மகன்கள் மற்றும் மகளுக்கு செய்தி சொன்னதும் அவர்கள் மாலை வந்து பார்க்கிறோம் என்றார்கள் ஒட்டு மொத்தமாக.

மாலை 4 மணி அளவில் தயாசினி உடல்நிலை மோசமடைந்து சில மணித்துளிகளில் தயாசினி காற்றில் கலந்து இறந்துவிட்டார்.

திருப்பதி தனது வாரிசுகளுக்கு தகவல் சொன்னார். மறு நாள் செய்ய வேண்டிய காரியங்களுக்கு தகுந்த ஏற்பாடுகளை தனக்கு தெரிந்த நபர்கள் மூலம் செய்தார்.

மறு நாள் காலை 10 மணி அளவில் முதலில் கிருத்துவமுறைப்படி செய்யும் சடங்குகளை பாதிரியார் வந்து செய்தார். அடுத்து இஸ்லாமிய முறைப்படி செய்யும் சடங்குகளை அந்த மத வழக்கப்படி நடத்துபவர் வந்து செய்தார். பின் கடைசியில் இந்துமத வழக்கப்படி இறுதிச்சடங்கு செய்பவர் தனது கடமைகளைச் செய்தார்.

எல்லாம் முடிந்து வீடு திரும்பிய திருப்பதியிடம் அவரது நண்பர் என்னப்பா, யாரும் செய்யாத ஏற்பாடு எனக் கேட்க இப்படி நடந்தால் ஆவது குடும்ப ஓற்றுமை ஏற்பாடுமா என்று நப்பாசை தான் என்றார்.

மேலும் வந்த மாற்று மதத்தினர் எங்களை மனிதர்களாக பாவிக்கவில்லை என்றதும் அங்கு நின்று இருந்த ஆறு பேரும் நெடுஞ்சாண் கிடையாக திருப்பதி காலில் விழுந்து எங்களுக்கு மன்னிப்பே கிடையாது என கதறினார்கள். நாங்கள் தெரியாமல் செய்து விட்டோம் என்று கூறினார்., என்றோ தயாசினி படத்தில் வைத்த பூ கிழே விழுந்து மன்னியுங்கள் என்று கூறுவதாக உணர்ந்த திருப்பதி ‘‘நாட்கள் மாற்றத்தை ஏற்படுத்தாது, நாம் தான் மாற்றத்தை ஏற்பட்டுத்த வேண்டும். மேலும் உதிரப் போகும் சருகுகளைத் தான் கண் காணிக்க வேண்டும். ஏனெனில் அவைகளுக்குத் தெரியும் பிரிவு என்பது தவிர்க்க முடியாத ஒன்று என்று’’, என்றார்.

வாழும் வாழ்க்கையில் நடப்பவை இறைவன் செயல் என்றாலும் திட்டமிட்டு வாழ்ந்தால் வாழ்க்கையே பலனளிக்கும் என்றார்.

தனக்குப் பிறகு வீட்டின் இந்த பகுதி நமது வழக்கறிஞர் பொறுப்பில் வயதானவர்கள் தங்கும் விடுதியாக மாறும் என்றார். அதற்குண்டான தொகை முழுவதும் நானே ஒதுக்கி விடுவேன் என்றார்.

இப்படிப் பட்டவர்களை அறியாமல் இருந்து விட்டோமே என ஆறு பேரும் கலங்கினார்கள்.

இனிமேலாவது திருப்பதியை பற்றி புரிந்து கொண்டு இருப்பீர்ங்கள் என்று கூறி வழக்கறிஞர் நகர்ந்தார்,

வாரிசுகள் திகைத்து நின்றார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *