சிறுகதை

பேசா ஓவியம் – ராஜா செல்லமுத்து

கருணா நல்ல ஓவியன். தன் கண்ணில் படும் அத்தனையும் கையில் கொண்டு வந்து அதை ஓவியமாக வடிக்கும் ரசனைக்காரன்.

அவனுடைய எண்ணமெல்லாம் நல்ல ஓவியங்களை வரைய வேண்டும் என்று தான் இருந்தது.

அவன் பெரும்பாலும் மொட்டை மாடியில் தான் ஓவியங்களை வரைந்து கொண்டிருப்பான்.

வெட்ட வெளி. நீண்ட வானம். காது மடல்களை தொட்டுப் போகும் தென்றல் என்று இயற்கையோடு இயற்கையாக கலந்து அவன் ஓவியங்களை வரைந்து கொண்டு இருப்பான்.

அவன் மொட்டை மாடிக்கு வரும் போதெல்லாம் எதிர் வீட்டு மாடிக்கு ஒரு சிறுமி ஏறி வந்து விடுவாள். அவள் கருணாவை ஒட்டிய வயது இல்லை என்றாலும் ஒரு முறை இரு முறை என்று பார்த்த கருணாவிற்கு ஒவ்வொரு முறையும் மொட்டை மாடிக்கு வந்து அவன் ஓவியம் வரைவதை அங்கிருந்து ரசித்துக் கொண்டிருப்பாள்.

இந்த ஈர்ப்பின் தூரம் என்னவென்று அவனுக்குத் தெரியாது. ஆனால் அந்தச் சிறுமி தினமும் நாம் மொட்டை மாடிக்கு வரும் போதெல்லாம் நம்மையே பார்த்துக் கொண்டிருக்கிறாளே?

நாம் அவளைத் திருமணம் செய்து கொள்ளும் வயதோ இல்லை அவள் நம்மைக் காதல் செய்யும் பருவமோ அவளுக்கு இல்லை என்று கருணாவிற்கு தெரியும். இருந்தாலும் அந்தச் சிறுமி எதற்காக நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறாள்? என்று அவன் எண்ணிக் கொண்டிருந்தபோது அந்தச் சிறுமி கருணாவைப் பார்த்து சிரித்தாள்

என்ன வேண்டும்? என்று கருணா சைகையில் கேட்டபோது

ஓவியம் வரைவதைப் பற்றி அவளும் சைகையில் சொன்னாள்.

அந்தச் சிறுமியைத் தன் மொட்டை மாடிக்கு கூப்பிடுவது தவறு இல்லை என்று நினைத்த கருணா அவளைத் தொடும் தூரத்தில் இருந்த தன் வீட்டு மொட்டை மாடிக்கு வரச் சொன்னான். அவன் வர சொன்னது தான் தாமதம் நாலுகால் பாய்ச்சலில் ஓடி வந்தாள் அந்தச் சிறுமி.

உன் பேர் என்ன? எதுக்காக இங்க என்னைய பார்த்துகிட்டு இருக்கே? என்று கருணா கேட்டபோது

அந்தச் சிறுமி பதில் சொல்லாமல் கீழே குனிந்தாள். பரவாயில்லம்மா எதுக்காக என்னைய பார்க்கிற? ஓவியம் வரையணுமா ?

என்று மறுபடியும் கருணா அந்தச் சிறுமியிடம் பேசிய போது

அதற்கும் அந்தச் சிறுமி பேசாமல் தலையை மட்டுமே ஆட்டிக் கொண்டிருந்தாள்.

சும்மா வாயத் திறந்து பேசு. நான் தப்பா நினைக்க மாட்டேன் என்று கருணா அந்தச் சிறுமியிடம் பேச எதிர் திசையில் நின்று கொண்டிருந்த இன்னொரு பெண் பேசினாள்.

தம்பி அந்தச் சிறுமிக்கு வாய் பேச முடியாது. காது கேக்கும். ஓவியம் வரையனும்னு அந்த சிறுமிக்கு ராெம்ப நாள் ஆசை. அதனால தான் நீ மாடிக்கு வரும் போதெல்லாம் அந்த பொண்ணு மேலே வந்துரும் என்று சொன்னாள் அந்த பெண். அதைக் கேட்ட கருணாவிற்கு ஒரு மாதிரியாகப் போனது.

அவங்க சொல்றது உண்மையா என்று கருணா அந்தச் சிறுமியிடம் கேட்க

ஆமா என்று தலையாட்டினாள் அந்தச் சிறுமி.

சரி நாளைக்கு இருந்து நீ மொட்டை மாடியில் நின்று பாக்க வேணாம். என்கிட்ட வந்துரு என்று உறுதி சொன்னான் கருணா.

அதிலிருந்து தினமும் கருணா வரையும் போதெல்லாம் அந்தச் சிறுமியை அருகில் வைத்துக் கொண்டு வரையலானான்.

ஓவிய நுணுக்கங்களை அவளுக்கு கற்றுக் கொடுத்தான். சில பல நேரங்களில் அந்தச் சிறுமியை வரையச்சொல்லி பிழை திருத்தினான்.

அவளுக்கு ஓவியம் வருகிறது என்பதை அறிந்து கொண்ட கருணா அவளை தாெலைதூர ஓவியக் கல்லூரியில் சேர்ப்பதற்கு முயற்சி செய்தான்.அந்தச் சிறுமி வீட்டிலும் சரி என்று தான் சொன்னார்கள் . தொலைதூர ஓவியக் கல்லூரியில் ஓவியங்களை படிக்கலானாள்.

அந்தச் சிறுமி வீட்டில் இருக்கும் நேரங்கள் எல்லாம் கருணா அந்த பெண்ணுக்கு ஓவிய நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்து அவளை சிறந்த ஓவியராக்கினான்.

ஒரு நாள், உலக அளவில் ஓவிய போட்டிக்கான அறிவிப்பு வந்தது.

ஓவியர்கள் எல்லாம் ஓவியங்களை வரைந்து அனுப்பினார்கள். அத்தனை ஓவியங்களையும் பரிசீலனை செய்த அந்தக் குழு அந்தச் சிறுமி வரைந்த ஓவியத்தை முதல் பரிசாக தேர்ந்தெடுத்தார்கள்.

அதுவரை அந்தச் சிறுமியின் பெயரைக் கூட கேட்காத கருணா உலக ஓவியத்திற்கான பரிசு பெற்ற போது தான் அந்த மேடையில் அவள் பெயரை அறிவித்தார்கள்.

அந்த பெயரை கேட்டபோது கருணாநிதிக்கு வியப்பாக இருந்தது.

அந்தப் பேசா ஓவியத்தின் பெயர் ஓவியா.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *