சிறுகதை

கடற்கரையில் தமிழ் – ராஜா செல்லமுத்து

மெரினா கடற்கரையின் மணற்பரப்பில் மக்கள் நடந்து செல்லும் இரு பக்கங்களிலும் நிறைய இருந்தன கடைகள்.

அதில் தமிழ்ப்புத்தகக் கடையை வைத்திருந்தாள் யாழினி. அந்தக் கடையில் நிறையத் தமிழ்ப் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அதற்கான விளம்பரமோ கடையில் தமிழ் புத்தகங்கள் இருக்கிறது என்றோ அவள் கூவி விற்பதில்லை .

மற்ற கடைகளில் எல்லாம் டாட்டூ மருதாணி, டிரஸ் , சாவிக்கொத்துகள், பலகாரம், மீன் என்று வியாபாரம் களை கட்டிக் கொண்டிருந்தது.

ஆனால் யாழினி மட்டும் வியாபாரம் செய்யும் மற்ற கடைகளை வேடிக்கை பார்த்தபடியே இருந்தாள்.

மற்ற எல்லாக் கடைகளில் ஏதேதோ வாங்கிக் கொண்டிருந்தார்கள். யாழினி வைத்திருக்கும் தமிழ்ப் புத்தகக் கடைக்கு யாரும் எட்டிப் பார்க்கவில்லை.

என்ன மனிதர்கள் இவர்கள்? மணலைக் கொட்டி வைத்திருப்பது போல தமிழைக் கொட்டி வைத்திருக்கிறாேம்.

எந்த மனிதனும் தமிழ்ப் படிக்க வரவில்லையே ? தமிழ் வாங்க வரவில்லையே? அலைகள் பாடும் தமிழ் பாடல்களைப் போல தமிழை குவித்து வைத்திருக்கிறோம் யாரும் என்ன ஏது என்று கேட்கவில்லையே? இது தமிழ்நாடா ?

தமிழ் வளர்த்த கலைஞரும் அண்ணாவும் தூங்கிக் கொண்டிருக்கும் இந்தக் கடற்கரையில்…

தமிழுக்கு நேர்ந்த கதியா இதுவா ?

என்று வருத்தப்பட்டு அமர்ந்திருந்தாள் யாழினி. அந்த வழியாக கடற்கரைக்கு செல்பவர்கள் யாரும் யாழினி வைத்திருக்கும் தமிழ்ப் புத்தகக் கடையைத் திரும்பி கூட பார்ப்பதில்லை.

மாறாக துப்பாக்கி கொண்டு பலூனைச் சுடுவதிலும் பஜ்ஜி, வடை சம்சா சாப்பிடுவதிலும் ,டாட்டூ போடுவதிலும் காதில் கடுக்கன் குத்துவதிலும் அலாதி பிரியம் கொண்டிருந்தார்கள்.

தமிழ்க் கடையில் ஒரு புத்தகம் கூட வியாபாரம் ஆகவில்லை என்பது அவளுக்கு ஏமாற்றம் தந்தது.

தமிழை நம்பி நாம் கடை விரித்திருந்தோம்; கொள்வார் இல்லையே? என்று கலங்கினாள்.

ஒவ்வொரு நாளும் அதிகாலையில் வந்து கடையைத் திறந்து வைத்து இரவு எட்டு, ஒன்பது மணி வரையில் கடையில் அமர்ந்து தமிழைப் பரப்பி வைத்திருப்பாள்; மருந்துக்கு கூட ஒரு புத்தகம் விற்கவில்லை என்பது அவளுக்கு வேதனையைத் தந்தது.

இந்தக் கடையை வைத்து வயிற்று பிழைப்புக்காக வாழ்க்கை நடத்த முடியாது. தமிழைத் தூக்கி எறிந்து விட்டு நாமும் மற்றவர்களைப் போல வியாபாரப் பொருளை விற்பனை செய்தால் தான் இந்த ஊரில் வாழ முடியும். இல்லையென்றால் பிழைப்பது அரிது என்று தமிழைத் தள்ளி வைத்துவிட்டு வேறு ஒரு பொருளை வியாபாரம் செய்ய அவளது சிந்தனை மாறியது.

இருக்கும் புத்தகங்களை எல்லாம் பக்கத்தில் இருக்கும் பலகாரக் கடைக்கு கொடுத்துவிட்டு நாமும் கரும்புச்சாறு, பலகாரம், டாட்டூ துணிக்கடை, செருப்பு , சங்கு, பாசி முத்து என்று எதுவானாலும் வைத்து பிழைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து மறுநாள் கடையை திறந்தாள் யாழினி

பலகாரக் கடையிலும் புத்தகம் விற்பதைப் பற்றி பேசிக் கொண்டார்கள். பலகாரம் மடிப்பதற்கு எவ்வளவு தர முடியுமோ அதற்கேற்ற தொகை தர முன்வந்தார்கள் .

ஒரு மனதாக இருக்கும் புத்தகங்களை எல்லாம் அள்ளிக் கட்டி பலகாரக் கடைக்கு கொடுக்கப் போகும் நேரத்தில் ஒரு பெரியவர் வந்தார்.

அம்மா இங்க கடற்கரைக்கு நாம் போகும் போது இங்க ஒரு தமிழ் புத்தகக் கடையக் கடந்து பாேனேன். அது எங்க இருக்கு என்று அருகில் இருக்கும் கடையில் கேட்டார்,

இந்தக் கடையில் இருந்து நாலாவது கடைக்கு போங்க

என்று அந்தப் பெண்மணி சொல்ல…..

மொத்த புத்தகத்தையும் அள்ளி பலகாரம் மடிக்கக் கொடுப்பதற்காக விரைந்து கொண்டு இருந்தாள் யாழினி.

அம்மா தமிழ்ப் புத்தகக் கடை இதுதானே? என்று கேட்டார் அந்தப் பெரியவர்

வாய் திறந்துபேசாமல் தலையை மட்டுமே ஆட்டி ஆமாம் என்றாள் யாழினி

எனக்கு புத்தகம் வேணும்

என்ன… ஒரு புத்தகம்… இல்ல.. இரண்டு புத்தகம்… வாங்குவார் என்று நினைத்த யாழினி

என்ன புத்தகம் வேணும் சார்?

என்று விரக்தியாகக் கேட்டாள்.

புத்தகங்களை காட்டுங்க என்றார் பெரியவர்

கட்டி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை அவிழ்த்து காட்டிய போது அத்தனையும் தமிழ் முத்துக்கள் என்பதை அறிந்து கொண்டவர்

மொத்த புத்தகத்துக்கு எவ்வளவு பணம் வேணும் ?

என்று கேட்டபோது யாழினிக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

என்னது தினந்தோறும் ஒரு புத்தகம் கூட விக்கலையேன்னு வருத்தப்பட்டுட்டு இருந்தோம்.

இன்னைக்கு மொத்த புத்தகத்தையும் ஒரு மனிதர் கேக்குறாரே ? இது என்ன விந்தை? என்று அவளுக்குள் ஆனந்த அலைகள் ஆர்ப்பரித்தன

மெரினா கடற்கரை மணல் முழுவதும் ஓடி ஓடி மகிழ்வதாக அவளது எண்ணம் தோன்றியது

சார் நிஜமா சொல்றீங்களா ? மொத்த புத்தகமும் வேணுமா? என்ற போது

ஆமாம்மா எனக்கு மொத்த புத்தகம் வேணும் என்றார் பெரியவர்.

புத்தகங்களின் விலைப்பட்டியலைப் பார்த்து கால்குலேட்டரில் கணக்கு போட்டு மொத்த புத்தகங்களின் விலையைச் சொன்னாள் யாழினி.

அவள் பட்டியல் இட்டு சொன்ன தொகைக்கு மேலே ஆயிரம் அதிகமாக கொடுத்து மொத்த புத்தகத்தையும் அள்ளிச் சென்றார் அந்தப் பெரியவர் .

அவளுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.

தமிழ் தன்னை ஏமாற்றி விட்டதாக நினைத்துக் கொண்டிருந்த யாழினிக்கு இப்போது தமிழ் மீது தலையாயப் பெருமை வந்தது.

இதுவல்லவோ தமிழ் ? மொத்த புத்தகத்தையும் ஒரே நொடியில் விற்று விட்டதே. அவளின் தமிழ் வானத்தில் பறந்து வட்டமடித்தது.

அருகில் இருந்த கடைக்காரர்கள் எல்லாம் யாழினியைப் புகழ்ந்தார்கள் .

ஒன்று இரண்டு பொருட்கள் விற்கும் கடைகளில் மொத்தத் தமிழ்ப் புத்தகமும் விற்று போனதைப் பற்றி நெகிழ்ந்து போனார்கள்,மற்ற கடைக்காரர்கள்.

மறுநாள் வேறொரு பொருளை வாங்கிக் கடை வைக்கலாம் என்று மாறி இருந்த அவளின் மனம் மறுபடியும் தமிழுக்கு திரும்பியது.

மறுநாள் முன்னை விட அதிகமான தமிழ்ப் புத்தகங்களை வாங்கி அடிக்கினாள்.

தூரத்தில் பார்த்தாள்:

வரும் அலைகள் எல்லாம் தமிழ் பேசுவது போல இருந்தன. அறிஞர்கள், கவிஞர்கள் கவிஞர்கள், எழுத்தாளர்கள் என்று வந்து செல்லும் இந்தக் கடற்கரையில் தமிழ் நம்மை தோற்கடிக்காது என்று நினைத்தாள்.

அதுவரையில் குனிந்து அமர்ந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த யாழினி இப்போது நிமிர்ந்து அமர்ந்தாள்.

என்றாவது ஒரு நாள் தமிழ் நம்மை காப்பாற்றும் என்ற புதிய நம்பிக்கை அவளுக்கு வந்திருந்தது.

இப்போது வந்த மெரினாக் கடல் அலைகள் எல்லாம் தன்னைத் தொட்டுத் தமிழ் பேசிச் செல்வதாக உணர்ந்தாள் யாழினி.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *