சிறுகதை

பூ முடிச்சுகள் – ராஜா செல்லமுத்து

பிரதான சாலையில் ஒரு ஜவுளிக்கடையின் முன்னால் இரண்டு பக்கமும் தரையில் பூவை வைத்தபடி அமர்ந்திருந்தார்கள் சாந்தி, வசந்தி என்ற இரண்டு பெண்கள்.

கூடையில் பூ இருந்தாலும் பூக்களை பொட்டலம் பொட்டலமாகக் கட்டித் தரை எங்கும் பரப்பி வைத்திருந்தார்கள்

அது பிரதான சாலை என்பதால் போகிறவர்கள் வருகிறவர்கள் என்று அத்தனை பேரும் அதைக் கடந்து தான் செல்ல வேண்டும். அப்படி கடந்து செல்பவர்கள் வாங்கும் வியாபாரத்திற்காக தான் சாந்தியும் வசந்தியும் அந்தத் தரையில் பூக்கடையைப் பரப்பியிருந்தார்கள்.

அந்த வழியாகப் போகிறவர்கள் நடக்கிற பாதையில் பூவைக் கொட்டிக் கட்டி வைத்திருக்கிறார்கள் என்று யாரும் சலித்துக் கொள்வதில்லை.

காரணம் அவர்களின் வறுமையைத் தெரிந்து கொண்டு யாரும் ஒரு வார்த்தை கூட பேசாமல் கடந்து செல்வார்கள்.

இந்தப் பூவ வித்து கோட்டையாக கட்டப் போறாங்க? ராத்திரிக்குள்ள இந்தப் பூ விக்கலன்னா இதெல்லாம் தூக்கி தூரப் போட வேண்டியது தான்.

ஒரு நம்பிக்கையில் எப்படி இந்தப் பூவுகள இப்பிடி கட்டி வச்சிருக்காங்க என்று அந்த வழியாகப் போன ஜெயும் ஆனந்தும் பேசிச் சென்றார்கள்.

ஒரு பெண் கட்டி வைத்த பூக்களை பார்த்து எவ்வளவு என்று கேட்டாள்.

ஒரு முடிச்சு 10 ரூவா என்று சொன்னாள் சாந்தி . பெண் இரண்டு பூ முடிச்சுகளை வாங்கிச் சென்றாள்.

மிச்சம் இருந்த பூ முடிச்சுகளை தரையில் பரப்பி வைத்தாள் சாந்தி.

வசந்தி பூவைக் கட்டிக் கொண்டே வாடிக்கையாளர்களை எதிர்பார்த்தாள். அவளுக்கும் இரண்டு பூ முடிச்சுக்கள் விற்றன.

என்ன வசந்தி இன்னைக்கு எவ்வளவு வித்த்திருக்கு? என்று சாந்தி கேட்க

ம்க்கும்….முக்கி…… முக்கி காலையிலிருந்து 300 ரூபாய்க்கு தான் வித்திருக்கிறேன். இதுல தண்டல் வாங்குன மாெதல் போக அதில லாபம் பாக்கணும் என்று வசந்தி சலித்துக் கொண்டாள்.

இங்க என்ன வாழுதாம்? .ஒனக்கு ரூ.300 எனக்கு 250 தானே? ஒன்னைய விட்டுட்டு நான் எதுவும் விக்கலையே? என்று சாந்தி, வசந்தி இருவரும் பூ முடிச்சுக்களை விற்றுக் கொண்டே பேசிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களின் வியாபாரத்தை தினமும் பார்த்துக் கொண்டே கடந்து செல்லும் பாலமுருகன் அவர்களைப் பார்த்து வருத்தப்பட்டு கொண்டே செல்வார்

அவனவன் கோடி கணக்கில முதலீடு செஞ்சு லாபம் சம்பாதித்து வாழ்ந்துட்டு இருக்காங்க. ஆனா இந்த இரண்டு பெண்களின் மொத்த மூலதனமே ஐநூறு ரூபாய்க்குள் தான் தேறும். .இந்த பூக்களைத் தினமும் வாங்கி வச்சு அத வித்து அதில இருந்து லாபம் பாத்து குடும்பம் நடத்தி, யப்பப்பா என்ன சோதனை? என்று மனதுக்குள்ளே நினைத்துக் கொண்டு செல்வார் பாலமுருகன்.

தினமும் அவர்களை கடக்கும் போதெல்லாம் அவர் மனதிற்குள் சின்னதாக கலக்கம் ஏற்படும்.

அவர் வாங்கும் மாதச் சம்பளம் 30 ஆயிரத்தை தொட்டு நிற்கும். அந்த 30,000 முமே நமக்கு ஒரு மாதத்திற்கு போதவில்லை என்றால் இவர்களின் வருமானம் என்னவாக இருக்கும். இந்த பூவை நம்பி எவ்வளவு நாளைக்கு வாழ்க்கை நடத்த முடியும்? என்று தினமும் எண்ணிக் கொண்டே செல்வார்.

ஆனால் ஒரு நாளும் அவர் இவர்களிடம் பூ வாங்குவதில்லை. காரணம் இவர் இருக்கும் வீட்டிற்கும் வேலை செய்யும் அலுவலகத்திற்கும் தொலைவு என்பதால் அவர் ஒரு நாள் கூட வாங்கியது இல்லை.

அந்தப் பூ முடிச்சுகளைப் பார்க்கும் போதெல்லாம். அவருக்கு என்னவோ போல் இருக்கும்.

அந்தத் தரை முழுவதும் பிளாஸ்டிக் பொட்டலங்களாக கிடக்கும் பூக்கடை பார்க்கும் போதெல்லாம் பாலமுருகன் வாடிப் போவார்.

இந்தத் தரையில் கிடக்கும் பூக்களை வாங்கிப் போய் தான் கடவுளுக்கும் படைக்கிறார்கள்; தலையிலும் வைத்துக் கொள்கிறார்கள்.

அதுதான் பூவின் மகிமை என்று நினைத்துக் கொண்டார் பாலமுருகன்.

தினமும் அந்தப் பாதை வழியே வரும் பாலமுருகன் ஒரு நாள் சாந்தியிடம் கேட்டார்:

எந்த நம்பிக்கையில் இப்படி பொட்டலம் பொட்டலமா பூவ கட்டி வச்சிருக்கீங்க ? இது வித்துருமா? என்று கேள்வி கேட்க

சார் ஒரு நம்பிக்கை தான். வித்துரும்னு அப்படி நம்பிக்கைதான். அதை வைக்கலனா நாங்க பூவ பொட்டலமாக கட்டி போட மாட்டாேம் சார் என்றாள் வசந்தி

அப்படி நீங்க கட்டி வச்சிருக்க பூ விக்கலன்னா அன்னைக்கு நஷ்டம் தானே? என்றார்.

ஆமா என்றாள் சாந்தி

அப்படின்னா மீதமான பூவ என்ன பண்ணுவீங்க? என்று கேட்க

பூவ கீழ போட மனசு வராது சார். அப்படியே எடுத்துக் கொண்டு போய் வீட்டில இருக்க சாமி படத்துக்கு கீழே வச்சிருவோம். அதில ஒரு காரணமும் இருக்கு; அர்த்தமும் இருக்கு சார்.

கடவுளே நீ விட்ட வழி இதுதான். நாங்க சம்பாதித்த சம்பாத்தியமும் இது தான். அதப் பாருங்க இன்னைக்கு இவ்வளவு நஷ்டமாகி இருக்குன்று என்று நாங்க மனதுக்குள் நினைச்சுக்கிருவாேம் என்றாள் வசந்தி.

அடக் கடவுளுக்கு கூட உங்க மேல இரக்கம் இல்லையா? என்று பாலமுருகன் கேட்க

அட நீ ஒன்னு சார். கடவுள் இல்லாம நாம இல்ல. இன்னைக்கு வயித்துக்கு படி அளக்கிறதே கடவுள் செயல் தான் . பத்து ரூபாய்க்கு பூ வித்தாலும் ஆயிரம் ரூபாய்க்கு வித்தாலும் அவன் இல்லாம இந்தச் செயல் நடக்காது சார் ..

கடவுளக் குறை சொல்லி என்ன செய்ய சார் ? மனுசங்க வாங்கணுமே ? எல்லாம் கண்ணாடிப் பெட்டியில் இருக்கிற பொருளைத்தான் வாங்குறாங்க.

இப்படி தரையில் எங்கள மாதிரி பூவ கட்டிப்போட்டு விக்கிற ஆளுகிட்ட எட்டிப் பாப்பாங்களா? எங்கள மாதிரி ஏழை பட்ட மனுசங்க தான் சார் பூ வாங்குறாங்க .போறது வரைக்கும் போகட்டும் சார் இந்த பொழப்பு என்று வருத்தப்பட்டு இருவரும் சொன்னார்கள் .

இதைக் கேட்டு உணர்ந்த பாலமுருகன் அன்றிலிருந்து ஒரு நிபந்தனையை தன் மனதுக்குள் நிறுத்தினார்.

இங்க பாருங்கம்மா நான் தினந்தோறும் இந்த வழியாத்தான் வேலை விட்டுப் போவேன். .நீங்க விக்கிற வரைக்கும் பூவ வில்லுங்க. நான் கடைசியா போகும்போது விக்காத மொத்த பூவையும் என்கிட்ட குடுங்க.

நான் விலை கொடுத்து வாங்கிட்டு போறேன் என்று பாலமுருகன் சொல்ல

ஏன் சார் அந்த ராத்திரியில மொத்த பூவும் வாங்கிட்டு போயி நீ என்ன செய்வே சார்? என்று இருவரும் கேட்க

நானும் கடவுளுக்கு தான் போடுவேன் என்று சொன்னார் பாலமுருகன் .

பாத்தீங்களா நாங்க வேண்டாம்ன்னு தூக்கி எறியாத பூவ கடைசியில கடவுளுக்கு வச்சுருவாேம்

இன்னைக்கு பாருங்க அந்த கடவுளுக்கே பூவெல்லாம் போகுது. எங்களுக்கு நஷ்டம் இல்ல . அதான் சார் கடவுளோட மகிமை என்று இரண்டு பெண்களும் சொல்ல

அன்று முதல் தினமும் பணி முடித்து வீட்டுக்குப் போகும் போதெல்லாம் பாலமுருகன்

பூ முடிச்சுகளை வாங்கிச் செல்வார் .

இதுவும் ஒரு வகையில கடவுள் செயல் தான் பாேல என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார் பாலமுருகன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *