சிறுகதை

சைன் போர்டு – ராஜா செல்லமுத்து

பிரதான சாலையின் ஓரத்தில் சந்திரன் என்ற சைன் போர்டு ஆர்ட்டிஸ்ட் அமர்ந்திருந்தார்.

அவரைச் சுற்றி டூவீலர், ஃபோர் வீலர் வாகனங்களின் எண்கள் எழுதப்பட்டிருந்தன. உங்கள் வீட்டில் எட்டு போட வேண்டுமா ? இங்கு அணுகவும்

என்று சந்திரன் தன்னுடைய செல்போன் நம்பரை பதிவிட்டு இருந்தார். தான் இருக்கும் இடத்திற்கு மேலே உள்ள மரத்தில் வெள்ளைப் பேப்பரில் எண்ணற்ற வண்ணங்களை தெளித்து அதை பார்வைக்காகத் தொங்க விட்டிருந்தார்.அது வானவில்லின் வண்ணங்கள் போல காட்சி அளித்துக் கொண்டிருந்தன.

அவர் யாரையும் அழைத்து தனக்கு வேலை கொடுக்கச் சொல்லவில்லை மாறாக தன்னுடைய திறமையை வெளியில் பரப்பி வைத்திருந்தார்.

பார்த்தாலே இவர் யார் என்பது தெரியும் என்ற அளவிற்கு அவரின் வித்தைகள் வெளிப்படையாக தெரிந்து கொண்டிருந்தன.

சந்திரன் அந்த இடத்தில் அமர்ந்து பாதி எரிந்து தீர்ந்து போன பீடியைப் பற்ற வைத்துப் பிடித்து கொண்டிருந்தார்.

அவர் அருகே அனன்யா அப்பார்ட்மெண்ட் ஒன்னு, ரெண்டு, மூணு, நாலு , அஞ்சு, ஆறு என்று மாடிகள் பெயரிட்டு இருந்தன.

முதல் மாடி சரத்குமார், இரண்டாம் மாடி கோபி, மூன்றாம் மாடி சுரேஷ் நான்காம் அடி கல்யாணி ஐந்தாவது மாடி புருஷோத் என்று பெயரை எழுதி வைத்திருந்தார் சந்திரன்.

தான் என்ன வேலை செய்து கொண்டிருக்கிறோம் என்பதை பறைசாற்றுவதற்காக தான் இந்த பெயர்களை எல்லாம் எழுதி வைத்து எனக்கு இதுவெல்லாம் எழுதத் தெரியும். எனக்கு வேலை கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் போல என்று அவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள் ஆட்கள்.

அதில் முத்து மட்டும் அவரை உற்று கவனித்தான். உதட்டைச் சுடப் போகும் பீடி கரைந்து இப்பாேது தன்னுடைய கடைசி கட்டத்தை எட்டி நின்றது.

இதற்கு மேல் இழுத்தால் தன் உதட்டைத் தீ பதம் பார்த்து விடும் என்று தூரவீசி எறிந்து விட்டு தன்னை உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கும் முத்துவை சற்று நிமிர்ந்து பார்த்தார் சந்திரன்.

அவர் பார்ப்பதை அறிந்த முத்து ஐயா நீங்க எங்க வீட்டுக்கு வந்து எட்டு போட்டு தரணும். நான் காலை மாலை நடக்கணும். எவ்வளவு பணம் வேணும் எட்டு போடுவதற்கு என்று கேட்க ஆயிரம் ரூபாய் கேட்டார் சந்திரன்.

ஐயா அவ்வளவு பணம் என்கிட்ட இல்ல .குறைத்துக்கொள்ள கூடாதா ?என்ற போது

இல்ல தம்பி உங்களுக்காக 600 கொடுங்க போட்டு கொடுத்துடறேன்

என்ற போது சரி சாயங்காலம் வரேன் ஆபீஸ் முடிச்சிட்டு என் கூட வந்தீங்கன்னா நான் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்

என்று முத்து சொல்ல சரி என்ற சந்திரனிடம் 200 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தான் முத்து

போகும் போது திரும்பிய முத்து

ஐயா ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே ?

என்று கேட்க

தம்பி எதா இருந்தாலும் கேளுங்க; நான் பதில் சொல்றேன்

என்றார் சந்திரன்

இங்க இருக்குற எல்லா விஷயங்கள்ளயும் ஏதோ உயிரில்லாம இருக்கிற மாதிரி இருக்கு .ஆனா ஒரே ஒரு போர்டுல மட்டும் ஒரு உயிர் இருக்கிற மாதிரி எனக்கு தோணுது என்று பூடகம் போட்டான் முத்து

தம்பி என்ன சொல்றீங்க?

என்ற போது அனன்யா அப்பார்ட்மெண்ட்டுன்னு பேர எழுதி வைத்திருக்கிறீர்களே? அது உண்மையிலேயே கற்பனை பேரா? உண்மையா? இல்ல பொய்யா? என்று முத்து கேட்டபோது

கடகடவென்று அழுதார் சந்திரன்

தம்பி இது எப்படி உங்களுக்கு தெரியும் ?என்று அந்த போர்டையும் முத்துவையும் கவனித்தார் சந்திரன்.

ஏதோ கேட்கணும்னு தோணுச்சு அதான் கேட்டேன்.

நீங்க கேட்டது உண்மைதான் தம்பி இங்க இருக்குற எல்லா போர்டுமே நான் கற்பனையில எழுதி வச்சது; இந்த அப்பார்ட்மெண்ட் மட்டும்தான் உண்மையானது. அது இறந்து போன என் சின்னப் பொண்ணோட பேரு. அங்க எழுதி வைக்கப்பட்டு இருக்கிற எல்லா பேருமே என்னோட பிள்ளைங்க தான் .நல்ல சம்பாதித்தேன். அவங்களுக்கு வேணுங்கிறத செஞ்சேன். இப்ப அவங்க நான் சம்பாரிச்சு சேத்த வீட்டுல குடியேறிட்டு என்னைய ரோட்டில துரத்தி விட்டாங்க. மனைவியும் காலமாகிட்டா. வாழ வேற வழியில்லை. எனக்கு தெரிந்தது சைன் போர்டு வேலை தான். அதனால அத வச்சு இப்ப வாழ்ந்துட்டு இருக்கேன் என்றார் சந்திரன்.. இதைக் கேட்ட முத்துவிற்கு என்னவோ போலானது

ஐயா சாயங்காலம் வரேன். நம்ம வீட்டுல எட்டு போடலாம் என்று சொல்லிவிட்டு சென்றான் முத்து

சாயங்காலம் வந்து அவரைத் தன் இரு சக்கர வாகனத்தில் அழைத்து போனான் .

அங்கே போன சந்திரனுக்கு வருத்தம் மேலிட்டது. அனன்யா அப்பார்ட்மெண்ட் அருகில் தான் முத்து வீடு இருந்தது.

மாடியில் எட்டு போட்டார். அனன்யா அப்பார்ட்மெண்ட்டை எட்டிப் பார்த்தார்.

அவர் எழுதி வைத்த பெயர் பட்டியல் அங்கே அபார்ட்மெண்டில் தாெங்கிக் கொண்டிருந்தது.

ஆனால் சந்திரன் எழுதியது போல் இல்லை.பெயர் எல்லாம் முரண்பாடாக எழுதப்பட்டிருந்தன.அதைப் பார்த்து உள்ளுக்குள்ளே சிரித்துக் கொண்டார் சந்திரன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *