செய்திகள்

புயல் கரையை கடக்கும்போது பொதுமக்கள் வெளியே வரவேண்டாம்: பொதுமக்கள் வெளியே வரவேண்டாம்

சென்னை, டிச. 3–

புயல் கரையை கடக்கும்போது பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மயிலாப்பூரில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் இன்று ஆய்வு செய்தார். பேரிடர் மீட்பு பணிக்காக தயார் நிலையில் உள்ள தளவாடங்களை அவர் பார்வையிட்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 2 ஆண்டுகளில் மழை நீர் வடிகால் பணிகள் பல பகுதிகளில் சரி செய்யப்பட்ட காரணத்தால் மழைநீர் தேங்கினாலும் சில மணி நேரங்களில் வடிந்து விடுகிறது. ஒருசில பகுதிகளை தவிர மற்ற இடங்களில் பெரிய பாதிப்பு இல்லை.கடந்த 3 நாட்களாக பெய்த மழையின்போது சென்னையில் தண்ணீர் தேங்கிய 150 இடங்களை அடையாளம் கண்டுள்ளோம். அந்த பகுதியில் தேங்கிய தண்ணீரை மோட்டார் மூலம் அகற்றினோம்.சென்னையில் 43 தீயணைப்பு நிலையங்களில் உள்ள வீரர்கள் மீட்பு பணிகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

தடையின்றி மின்சாரம்

செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களையும் சேர்த்து 1,700 பேர் தயார் நிலையில் உள்ளனர். இது தவிர மீனவர் துறை சார்பாக மீனவ நண்பர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். மீனவர்கள் கடலுக்குள் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தி உள்ளோம். அதே மாதிரி பொதுமக்களுக்கு விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், புயல் நெருங்கி வரும்போது காற்று வேகமாக வீசும் என்பதால் வீட்டில் இருந்து வெளியே வராமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

சென்னையில் பல வீடுகளுக்கு கேபிள் மூலம் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இங்கு மின்சார ஜங்ஷன் பாக்ஸ் பல இடங்களில் 3 அடிக்கு உயர்த்தி வைத்திருப்பதால் தண்ணீர் தேங்கினாலும் அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படாமல் தடையின்றி மின்சாரம் கிடைக்கும். அதிகம் காற்று வீசும்போது மட்டும் உயர்மின் அழுத்தம் கொண்ட இடங்களில் கட்டாயம் மின் சப்ளை நிறுத்தப்படும். ஆனால் கேபிள் மூலம் மின்சாரம் வழங்கும் இடங்களில் தடை ஏற்படாத அளவுக்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *