செய்திகள்

பொய் பிரச்சாரத்தில் மோடி வல்லவர்: கார்த்தி சிதம்பரம் எம்பி குற்றச்சாட்டு

சென்னை, மார்ச் 11–

பிரதமர் மோடி மதச்சார்பின்மைக்கும் பன்முகத்தன்மைக்கும் எதிராக செயல்படுகிறார் என கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டினார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் மதச்சார்பின்மையை அழிப்பது, நாட்டை இந்து ராஜ்யமாக அறிவிக்க வேண்டும் என்பது தான் பா‌.ஜ.க.வின் நோக்கம். தேர்தல் அறிவிப்பு வர உள்ள நிலையில் தனது பதவியை அருண் கோயல் ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக ஒன்றிய அரசு எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை.

தேர்தல் பத்திர விவரங்களை அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சுமார் 22 ஆயிரம் தேர்தல் பத்திர விவரங்களை கொடுக்குமாறு பாரத ஸ்டேட் வங்கியில் கேட்டால், அதை வகைப்படுத்த 4 மாதமாகும் என்று வங்கி தெரிவிக்கிறது. இந்த மோசமான சூழலில் தேர்தல் நடைபெற உள்ளது.

ஒன்றிய பாஜக அரசு, மாநில உரிமைகளை மதிக்காத அரசாக உள்ளது. செஸ், சர்ச்சார்ஜ் வரி மாநிலங்களுக்கு பகிர்ந்து வழங்கப்படுவதில்லை. வரி விதிப்பில் தமிழ்நாட்டுக்கு பாரபட்சம் காட்டுகிறது. மாநில உரிமை காப்பாற்றப்பட வேண்டும் என்றால், ஆட்சிக்கு இந்தியா கூட்டணி வரவேண்டும்.

பொய் சொல்வதில் வல்லவர்

இந்தியாவின் பன்முகத்தன்மை, மக்களாட்சி முறையை பாரதீய ஜனதா அரசு கேள்விக்குறியாக்குகிறது. பாஜகவின் வளர்ச்சி இந்தி பேசும் மாநிலங்களில் மட்டும்தான் உள்ளது. இந்தி பேசாத மாநிலங்களில் குஜராத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் அவர்கள் வளர்ச்சி பெறவில்லை. பா.ஜ.கவை இந்தி, இந்துத்துவா கட்சியாகவே பார்க்கிறேன். பொய் பிரச்சாரம் செய்வதில் பிரதமர் மோடி வல்லவர்.

தமிழ்நாட்டில் பிரதமர் மோடி திட்டங்களை அறிவிக்கிறார். ஆனால் அது எப்போது தொடங்கும்? இந்து மதத்தின் நம்பிக்கைக்கு காங்கிரஸ் எதிரி இல்லை, அரசாங்கத்தின் நிர்வாகம் செயல்பாடுகள் மதத்தை சார்ந்து இருக்கக் கூடாது. தனிமனிதருக்கு இறை நம்பிக்கை இருக்க கூடாது என காங்கிரஸ் சொல்லவில்லை.

நான் எனது தொகுதியில் கொடுக்கப்பட்ட அதிகாரத்தில் மனசாட்சிக்கு உட்பட்டு சிறப்பாக செயல்பட்டதாக கருதுகிறேன். முழு மன நிறைவோடு இருக்கிறேன் என கார்த்திக் சிதம்பரம் கூறினார். பேட்டியின் போது, ஊடகம் மற்றும் செய்தி தொடர்புத் தலைவர் ஆனந்த் ஶ்ரீனிவாசன் உடன் இருந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *