செய்திகள்

மைசூர் தசரா விழா கோலாகலம்: 750 கிலோ தங்க அம்பாரியுடன் ஊர்வலமாக வந்த யானை

பெங்களூரு, அக்.25–

உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா விழாவின் இறுதி நாளான நேற்று யானை ஊர்வலத்தின்போது 750 கிலோ தங்க அம்பாரியை அபிமன்யூ யானை சுமந்து சென்றது.

கி.பி. 1610-ம் ஆண்டு மைசூரை ஆண்ட நால்வடி கிருஷ்ணராஜ உடையார் மன்னர் விஜயதசமியை முன்னிட்டு தசரா விழாவை கொண்டாட தொடங்கினார். 10 நாட்கள் வண்ண மயமாக நடைபெறும் இவ்விழாவை காண பல்வேறு நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர் வருவதால் மைசூர் தசரா பண்டிகைக்கு உலகப் புகழ் ‍பெற்று விளங்குகிறது.

414-வது ஆண்டாக இந்த ஆண்டில் கடந்த 15-ம் தேதி இசையமைப்பாளர் ஹம்சலேகா, சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பூஜை செய்து தசரா விழாவை தொடங்கி வைத்தார்.

மைசூரு அரண்மனை, சாமுண்டி மலை, ரயில் நிலையம்,பழங்கால கட்டிடங்கள், பிருந்தாவன தோட்டம், கிருஷ்ணராஜசாகர் அணை உள்ளிட்டவை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டதால் மைசூர் விழாக்கோலம் பூண்ட‌து.

இதைத் தொடர்ந்து 10‍ நாட்களும் இளைஞர் தசரா, விவசாயிகள் தசரா, உணவு தசரா, மகளிர் தசரா, விளையாட்டு தசரா, திரைப்பட தசரா, விமான கண்காட்சி, மல்யுத்த போட்டி உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளும், மலர் கண்காட்சியும் ந‌டைபெற்றது. மன்னர் யதுவீர், அரண்மனையில் தங்கத்தினால் ஆன சிம்மாசனத்தில் அமர்ந்து தனியார் தர்பார் நடத்தினார்.

தசரா விழாவின் இறுதி நாளான நேற்று மன்னர் யதுவீர் அரண்மனை வளாகத்தில் உள்ள வன்னி மரத்துக்கு பூஜை செய்தார். பிற்பகல் 5 மணியளவில் கர்னாடக முதல்வர் சித்தராமையா, ஜம்பு சவாரி என அழைக்கப்படும் யானைகள் சவாரி தசரா ஊர்வலத்தை சிறப்பு பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

அபிமன்யூ யானை சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடையுள்ள தங்க அம்பாரியை சுமந்து ஊர்வலமாக சென்றது. சைத்ரா, லட்சுமி உள்ளிட்ட யானைகளும், குதிரை படை, ஒட்டக படை ஆகியவையும் அதனை பின்தொடர்ந்து ஊர்வலமாக சென்றன. பன்னி மண்டபத்தை நோக்கி 5 கி.மீ.தூரம் சென்ற இந்த ஊர்வலத்தில் கர்னாடகாவில் உள்ள 30 மாவட்ட நிர்வாகங்களின் சார்பிலும் கலை கலாச்சார வாகனங்கள், இசைக்குழுவினர், நாட்டுப்புற கலைக்குழுவினர் உள்ளிட்ட 55 குழுவினர் பின்தொடர்ந்து சென்றனர்.

இதை லட்சக்கணக்கான மக்கள் பார்த்து ரசித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *