செய்திகள் நாடும் நடப்பும்

பங்குச் சந்தை வளர்ச்சியும் தொழில் துறை அச்சங்களும்


நாடும் நடப்பும் 


பங்கு குறியீடு 71,000 புள்ளிகளில் இருப்பது வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒன்றாகத் தெரியலாம், அது உண்மையும் கூடத்தான்! ஆனால் கொரோனா பெரும் தொற்று பரவ துவங்கிய சில நாட்களில் உலகமே முழு ஊரடங்கு என்ற முடிவை எடுக்க பொருளாதார சரிவுகள் ஏற்பட ஆரம்பித்தது.

பல லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டதுடன் பலர் மரணம் என்ற கவலை தரும் செய்தியும் வர ஆரம்பித்தவுடன் சர்வதேச பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை கண்டது. இந்திய பங்குச் சந்தை ‘கிடு கிடு’ என சரிந்து 38,000 புள்ளிகள் வரை கீழே வீழ்ந்தது.

2020ல் அப்படி கண்ட சரிவிலிருந்து 3 ஆண்டுகளில் பங்குச் சந்தை குறியீடு இரட்டிப்பாகி இருப்பது அதாவது 71,000 புள்ளிகள் உயர்ந்து இருப்பது மிகப்பெரிய சாதனையாகும்.

ஆனால் இந்த சாதனை நாட்டின் வளர்ச்சியை குறிக்கிறதா? சாப்ட்வேர் துறையில் வளர்ச்சிகள் 2000 ஆண்டில் துவங்க நமது பொருளாதாரம் மிகப்பெரிய ஊக்கத்தை பெற்று பெரும் வளர்ச்சிக்கு தயாரானது.

கிட்டத்தட்ட 10,000 புள்ளிகள் என்ற அளவில் இருந்து 20,000 புள்ளிகளாக வளர 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆனது.

பிறகு தொழில் துறையில் புதிய ஊக்கம் பெற நாட்டின் பொருளாதாரம் மீண்டும் புதிய வேகத்தில் 30,000 புள்ளிகளை தாண்டியது.

2019ல் 40,000 புள்ளிகள் என்ற உச்சத்தை தொட்டு அதிவேகமாக 50,000 புள்ளிகள் என்ற உச்சத்தை தொடத் தயாராக இருந்த கட்டத்தில் கொரோனா பெரும் தொற்று பொருளாதாரத்தை ஸ்தம்பிக்க வைத்தது.

ஆனால் மெல்ல நமது தொழில்துறையின் ஸ்திரத் தன்மையால் பொருளாதாரம் மீண்டு எழுந்து வெற்றி நடைபோட ஆரம்பித்தது.

தொழில்துறையின் வளர்ச்சிகளையும் விட பங்குச் சந்தை படு வேகத்தில் உயர்கிறதா? அதாவது பொருளாதார வளர்ச்சியில் தொழில்துறை வளர்ச்சியின் பங்களிப்பு அதிகரிக்காமல் முதலீட்டாளர்களின் வரத்து அதிகரிக்க அதன் பயனாக பங்கு வர்த்தகம் இன்றைய சாதகமான உயர்வை பெற்றிருக்கிறதா?

2020ல் வீட்டில் முடங்கி இருந்த நேரத்தில் புதிய முதலீட்டாளர்களின் வருகை பன்மடங்கு உயர்ந்ததை மறுக்க முடியாது. அப்படி வந்த பலர் இன்று முழு நேர முதலீட்டாளர்களாக மாறி இருந்தால் அதன் பாதிப்பு தொழில்துறைக்கும், சாப்ட்வேர் துறைக்கும் இருக்கக் கூடும் அல்லவா?

மன அழுத்தமில்லா பணி என்ற சூழ்நிலை பங்கு வர்த்தகர்களுக்கு வந்துள்ளது. அவர்களின் பலர் சாப்ட்வேர் துறை பொறியியல் தயாரிப்பு துறைகளில் கைநிறைய சம்பளம் பெற்று வந்தவர்கள் அதை விட்டு வெளியேறி முழு நேர ஆன்லைன் பங்கு வர்த்தகர்களாக மாறியுள்ளனர்.

வேலைப் பளு மிகக் குறைவு என்பதுடன் பயணிக்க அவசியமின்றி வீட்டிலிருந்து சம்பாதிக்க முடிகிறது, இது தான் இன்றைய தலைமுறைக்கு பிடித்தமானதாகவும் இருக்க பங்கு குறியீடு கிடுகிடு வளர்ச்சியை காண்பதில் வியப்பில்லை.

நம் நாட்டில் நகரீய வளர்ச்சிகளின் பயனாக பலியானது கிராம பகுதிகளும் மூன்றாம் நிலை நகரங்களும் ஆகும்.

மாட மாளிகைகள் உயர்ந்துகொண்டே போனதால் ஏழை சாமானியனின் குடிசை பங்களா வீடுகளாக உயர பல ஆண்டுகள் ஆகும் அல்லவா?

இன்று தொழில்துறை ஸ்தம்பித்து நிற்க பங்கு மார்க்கெட் வளர்கிறதோ? என்ற அச்சக் கேள்வியும் எழுகிறது.

சாப்ட்வேர் துறையில் மாதச் சம்பளம் இதர பொறியியல் துறைகளில் கிடைப்பதில்லை! பொறியியல் துறையினர் தான் தொழில்துறை வளர்ச்சிகளுக்கு அச்சாணி, ஆனால் அவர்களோ இத்துறையிலிருந்து விலகி பங்கு முதலீடு என்ற சொகுசான தொழிலுக்கு மாறி வருவதாக அறிகுறிகள் சுட்டிக் காட்டுகிறது.

தொழில்துறையில் கடின வேலை செய்வோருக்கு சாப்ட்வேர் துறையினர் தரும் சம்பளம் இருப்பது கிடையாது. ஆகவே தொழில் சார் படிப்பில் உச்சத்தை தொட்டவர்கள் கூட சாப்ட்வேரில் பணியாற்றி அதிக சம்பளம் பெற்று வருகிறார்கள்.

ஆனால் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் எல்லா பிற பொறியியல் பணிகளிலும் கைநிறைய சம்பளமும் குறிப்பிட்ட பணி நேரமும் உறுதியாக இருப்பதால் மனஉளச்சல் இன்றி பணியாற்றுகிறார்கள்.

பலர் பணியில் இருந்து விலகி முதலீட்டாளர்களாக சென்று விட்டதால் பொறியியல் துறையில் பணிகள் நல்ல சம்பளத்துடன் காத்திருக்கிறது.

நிறைய சம்பளம் என்றாலும் ஆட்கள் குறைவாக பணியாற்றுவதால் பணிச்சுமை இருக்கும் பணியாளர்களுக்கு மட்டுமே.

ஆகவே அப்படி மனஉளச்சலுடன் கடுமையாக பணியாற்றுவதை விட நாற்காலியில் கணினி முன் ஏ/சி குளுகுளுப்பில் அமர்ந்து பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதால் அடுத்த சில ஆண்டுகளில் உற்பத்தித் துறையில் வளர்ச்சி ஸ்தம்பிக்கலாம்!

தொழில்துறை வளர பங்குச் சந்தை உயர்ந்தால் அது நல்ல வளர்ச்சி; ஆனால் பங்குச் சந்தைக்குள் பொறியியல் வல்லுநர்களின் வரவால் வீழ்ச்சி என்ற நிலை உருவாகினால் அதன் தொடர்ச்சியாக பங்குச் சந்தையும் சரிந்து விடும் அபாயம் இருக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *