செய்திகள்

பங்காரு அடிகளார் மறைவுக்கு ஸ்டாலின், எடப்பாடி, ஓ.பி.எஸ். இரங்கல்

சென்னை, அக்.20-

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவெய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன்.

ஆதிபராசக்தி பீடத்தை நிறுவி, அரை நூற்றாண்டுக்கும் மேலாக மிகச்சிறப்பாக நடத்தி, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளையும் மக்களுக்கு பங்காரு அடிகளார் வழங்கி வந்தார்.

அம்மா என்று பக்தர்களால் அழைக்கப்பட்ட பங்காரு அடிகளார், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் பெண்களே கருவறைக்குள் சென்று வழிபாடுகள் நடத்தும் புரட்சிகரமான நடைமுறைகளை வழக்கப்படுத்தினார்.

கோவில் கருவறைக்குள் அனைத்து சாதியினரும் சென்று அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதற்காக தி.மு.க. பல ஆண்டுகளாக போராடி, அதனை நடைமுறைப்படுத்தி வரும் நிலையில், அனைத்து பெண்களையும் கருவறைக்குள் சென்று அவர்களே பூசை செய்து வழிபட செய்த பங்காரு அடிகளாரின் ஆன்மிக புரட்சி, மிகவும் மதித்து போற்றத்தக்கது.

அவரது ஆன்மிக மற்றும் சமூக சேவைகளை பாராட்டி 2019-ம் ஆண்டு ஒன்றிய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி பெருமைப்படுத்தியது.

2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ‘நம்மைக் காக்கும் 48′ திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக மேல்மருவத்தூர் சென்றிருந்த போது, உடல்நலிவுற்றிருந்த பங்காரு அடிகளாரை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்து வந்தேன். உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது மறைவுற்றிருப்பது, அவரது பக்தர்களுக்கு ஒரு பேரிழப்பாகும்.

பங்காரு அடிகளாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், பக்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பங்காரு அடிகளாரின் சேவைகளை போற்றும் வகையில், அரசு மரியாதையுடன் அவரது இறுதி நிகழ்வு நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி

அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

பக்தர்களால் அம்மா என வணங்கப்பட்ட பங்காரு அடிகளாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், லட்சக்கணக்கான பக்தர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்து கொள்வதுடன், பங்காரு அடிகளாருடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம்

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இந்திய நாடு ஒரு மிகச்சிறந்த ஆன்மிகவாதியை இழந்துவிட்டது. அவரது இழப்பு இந்தியாவுக்கு குறிப்பாக தமிழகத்துக்கு பேரிழப்பு ஆகும். அவர் விட்டு சென்ற இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது என தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *