செய்திகள் வாழ்வியல்

நீரில் கலந்துள்ள நச்சுப் பொருள்களைக் கண்டறியக் கருவி : சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் தீவிரம்


அறிவியல் அறிவோம்


சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள், மண்ணிலும் நீரிலும் கலந்துள்ள கன உலோகங்களைக் கண்டறிய கையடக்கக் கருவியை உருவாக்கி வருகின்றனர்.

உரிய பயிற்சி பெறாதவர்களும் மண், நீர் ஆகியவற்றின் தரத்தை விரைந்து கண்டறிய இது உதவிகரமாக இருக்கும். மண் தரக்குறியீட்டின் தொழில்நுட்பம் அல்லாத மதிப்பீடுகளை தொழில்நுட்ப ரீதியாக, பொறியியல் சார்ந்த சாதனத்தில் தொகுத்து மொபைல்போன் போன்ற செயலியில் வழங்குவதுதான் இந்த ஆராய்ச்சியின் நோக்கமாகும். மண்ணில் கன உலோகம் ஏதேனும் கலந்துள்ளதா என்பதைக் கண்டறிய சாதாரண நபர் களத்தில் பயன்படுத்தக் கூடிய கருவிகள் ஏதும் தற்போது இல்லை. இந்தியாவில் உள்ள 36,000க்கும் மேற்பட்ட கிராமப்புற குடியிருப்புகளில் உள்ள குடிநீர் ஆதாரங்கள் புளோரைடு, ஆர்சனிக், கன உலோகங்கள் போன்றவற்றால் பாதிக்கப்படுவதாக மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகத் தரவுகளில் மதிப்பிடப்பட்டுள்ளது. மண்ணில் கன உலோகங்கள் சேர்ந்திருப்பதால் உப்புத்தன்மை கலந்து மண்ணின் தரத்தையும் பாதிக்கிறது.வேளாண் விளைச்சல் குறைந்து உலகளாவிய உணவுப் பாதுகாப்பிலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு எதிர்விளைவையும் மனித உடல் நலத்தில் பாதிப்பையும் ஏற்படுத்துகின்றன. ‘Inductively Coupled Plasma-Optical Emission Spectroscopy’ (ICP-OES) போன்ற தற்போதைய உயர் தரமான தொழில்நுட்பங்களுக்கு நம்பகமான, அதிநவீன ஆய்வகங்களும் நீண்ட நடைமுறையும் தேவைப்படுகிறது.

சாதாரண நபர்களோ, விவசாயிகளோ கையடக்கக் கருவிகளைப் பயன்படுத்தும்போது, மகத்தான நன்மைகள் கிடைப்பதுடன், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக தாக்கத்தையும் ஏற்படுத்தும். சென்னை ஐஐடியின் உலோகவியல் மற்றும் பொருட்கள் (Mettallurgical and Materials) துறையின் இணைப் பேராசிரியர்களான டாக்டர் ஸ்ரீராம் கல்பாத்தி, டாக்டர் டிஜு தாமஸ், சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவி கே.வி.வித்யா ஆகியோர் இந்த ஆராய்ச்சிக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். கன உலோகத்தைக் கண்டறியக் கூடிய சிறிய மற்றும் ஆயத்த தயாரிப்பு சாதனத்தை உருவாக்கும் திட்டத்தை இக்குழுவினர் முன்னெடுத்துள்ளனர்.

இது குறித்து சென்னை ஐஐடி உலோகவியல் மற்றும் பொருட்கள் பொறியியல் துறையின் இணைப்பேராசிரியர் கல்பாத்தி கூறும்போது, “இந்திய மக்கள் விவசாயத்தில் அதிக நம்பிக்கை வைத்திருப்பதால், கன உலோகங்களின் செறிவுகளைக் கண்டறிந்து அளவிட தொழில்நுட்ப ரீதியான தீர்வு உடனடியாகத் தேவைப்படுகிறது. எந்தெந்தப் பயிர்களை பயிரிட வேண்டும், எப்போது கவனிப்பை செலுத்த வேண்டும் போன்றவற்றைத் தீர்மானிக்க விவசாயிகளுக்குத் தேவையான தகவல்களை இத்தொழில்நுட்பம் வழங்கும்.

செம்பு, ஈயம், காட்மியம் (பிபிஎம் அளவு) ஆகியவற்றுக்கான உயர்தெளிவுத் திறனைக் கண்டறியும் ஆராய்ச்சியில் தற்போது கவனம் செலுத்தி வருகிறோம். குறிப்பிட்ட சில உலோகங்களைக் கண்டறிந்திருக்கிறோம். எங்கள் கருத்துகளை மண், நீர் மாதிரிகளைக் கொண்டு சரிபார்க்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளோம்என்றார் அவர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *