செய்திகள்

ஆன்மிகத்தில் புரட்சி செய்த மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

அரசு மரியாதையுடன் கோவில் கருவறை அருகே நல்லடக்கம்

சென்னை, அக்.20-

மறைந்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், அரசியல் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேல்மருவத்தூரில் உள்ள கருவறை அருகே பங்காரு அடிகளார் உடல் இன்று மாலை அரசு மரியாதையுடன் சித்தர் முறைப்படி நல்லடக்கம் செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் பங்காரு அடிகளார் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை 5 மணி அளவில் பங்காரு அடிகளார் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82.

பங்காரு அடிகளார் மறைவு செய்தியை அறிந்து பக்தர்கள் மேல்மருவத்தூரில் குவிந்து வருகிறார்கள். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக, அவரது வீட்டில் வைக்கப்பட்டது. அவருக்கு பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

மு.க.ஸ்டாலின்

நேரில் அஞ்சலி

பங்காரு அடிகளாரின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது துணைவியாரும், ஆதிபராசக்தி அறக்கட்டளை துணைத் தலைவருமான லட்சுமி பங்காரு அடிகளார் மற்றும் குடும்பத்தினருக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, க.பொன்முடி, தா.மோ.அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஜெகத்ரட்சகன், க. செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் கே.சுந்தர், ஆர். லட்சுமணன், என். புகழேந்தி, எழிலரசன், கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார் ஆகியோர் உடன் சென்றனர்.

பங்காரு அடிகளார் உடலுக்கு முன்னாள் அமைச்சரும், அண்ணா தி.மு.க. எம்.பி.யுமான சி.வி.சண்முகம், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க.நிறுவனர் ராமதாஸ், சசிகலா, புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

அடிகளாருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் மேல்மருவத்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர். இரவு முழுவதும் ஏராளமான பக்தர்கள் அடிகளார் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அஞ்சலி செலுத்த வரும் பக்தர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு அன்னதானம் கோவில் சார்பில் வழங்கப்பட்டது.

கோவில் கருவறை

அருகே அடக்கம்

மேல்மருவத்தூரில் உள்ள கோவில் கருவறை அருகே அடிகளாரின் உடல் இன்று மாலை 5 மணி அளவில் 27 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

பங்காரு அடிகளார் மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் முதல்வர்கள் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், பாரதீய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மதுராந்தகம் கோட்டத்தில்

பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை

அடிகளாரின் மறைவுயொட்டி மதுராந்தகம் கோட்டத்தில் உள்ள மதுராந்தகம், செய்யூர் வட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று சிறப்பு விடுமுறை அளித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் அறிவித்துள்ளார்.

பின்னர் பக்தர்கள் அஞ்சலிக்காக கோவில் வளாகத்தில் அடிகளார் உடல் வைக்கப்பட்டது. அஞ்சலி செலுத்துவதற்காக நாடுமுழுவதும் இருந்து முக்கிய பிரமுகர்கள், ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட் டங்களை சேர்ந்த 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உலகம் முழுவதிலும் உள்ள பங்காரு அடிகளார் பக்தர்கள் தங்களது அஞ்சலியை இணையதளத்தில் பதிவு செய்தனர். வீடியோ பதிவாகவும் வெளியிட்டு தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். எப்போதும் சிவப்பு நிற ஆடையுடன் காட்சி அளிக்கும் பங்காரு அடிகளார் விழுப்புரம் மாவட்டம் கரும்பாக்கம் கிராமத்தில் கோபால நாயக்கர் – மீனாட்சி அம்மாள் தம்பதியின் மூத்த மகனாக கடந்த 1941 மார்ச் 3-ந்தேதி பிறந்தார். பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் சுப்பிரமணி.

சிறுவயது முதலே ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டிருந்த இவர், வேப்பமரத்தின் அடியில் குறிசொல்லி வந்தார். இவரை அம்மனின் அருள்பெற்றவராக பக்தர்கள் வணங்கி வந்தனர். இந்த நிலையில் சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை கடந்த 1970-ம் ஆண்டு நிறுவினார். அங்கு இருந்து பக்தர்களுக்கு அவர் அருள்வாக்கு அளித்து வந்தார். அவர் மீது நம்பிக்கை கொண்ட பக்தர்கள் ஆதிபராசக்தி பீடத்தில் அமைந்து இருக்கும் கோவிலுக்கு சிவப்பு நிற ஆடைகள் கட்டிக் கொண்டு வருவார்கள். எனவே அவர்கள் செவ்வாடை பக்தர்கள் என்று அழைக்கப் பெற்றனர்.

ஆன்மிகத்தில்

புரட்சி செய்தவர்

கோவில்களில் அர்ச்சகர்கள் மட்டுமே பூஜை செய்ய முடியும் என்பதை மாற்றி, மேல்மருவத்தூர் கோவிலில் பெண்களையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் பூஜை செய்ய வைத்து புரட்சி செய்தார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரை சேர்ந்த மன்றத்துப் பெண்மணிகள் பொறுப்பேற்று கோவிலைத் தூய்மைப்படுத்துவது, பக்தர்களுக்கு உணவு வழங்குவது போன்ற திருப்பணிகள் செய்ய வகை செய்தார். அடிகளாரைப் பராசக்தியின் சொரூபமாகவே காணும் பக்தர்கள், அவரை ‘அம்மா’ என்றே அன்புடன் அழைத்து வந்தனர்.

நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் சக்திமாலை அணிந்து, இருமுடி சுமந்து மேல்மருவத்தூர் வந்து ஆதிபராசக்தி அம்மனை வழிபடத் தொடங்கினர். சித்ரா பவுர்ணமி, ஆடிப்பூரம், தைப்பூசம் போன்ற விசேஷ நாட்களில் அங்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து குவிவார்கள். தமிழ்நாடு மட்டும் அல்லாமல் ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநில பக்தர்களும், அரசியல் தலைவர்களும், தொழில் அதிபர்களும் அவரிடம் ஆசிபெற்று செல்வது வழக்கம்.

ஆதிபராசக்தி என்ற பெயரில் அறக்கட்டளை நிறுவினார். இதன்மூலம், மருத்துவம், பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் என ஏராளமான கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. அறக்கட்டளை மூலம் சுற்றுப்புற கிராமங்கள் உட்பட பல பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வந்தார்.தமிழ்நாடு முழுவதும் 2,500க்கும் மேற்பட்ட வார வழிபாட்டு மன்றங்களும், 25க்கும் மேற்பட்ட சக்தி பீடங்களும் செயல்பட்டு வருகின்றன.

ஆசிரியராக இருந்து ஆன்மிகப்பணியாற்றி வந்த பங்காரு அடிகளாரின் சேவைக்காக 2019-ம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி பங்காரு அடிகளார், மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவரையும் பக்தர்கள் திருமதி அம்மா என்ற அழைப்பார்கள். இவர்களுக்கு அன்பழகன், செந்தில்குமார் என்ற 2 மகன்களும் மற்றும் தேவி, உமாதேவி என்ற 2 மகள்களும் உள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *