செய்திகள்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்

பிரார்த்தனை செய்து வாழ்த்தியவர்களுக்கு நன்றி

சென்னை, டிச. 11–

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து 21 நாட்களுக்கு பின் வீடு திரும்பியுள்ளார்.

உடல் நலக்குறைவு காரணமாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 18-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மார்பு சளி, இருமல் காரணமாக செயற்கை சுவாசக்கருவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

விஜயகாந்த் உடல்நிலை குறித்த வதந்திகள் பரவிவந்த நிலையில், விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றுள்ளார் என்றும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அவர் சிகிச்சை பெற்றுவந்த மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்த் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பினார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மார்பு சளி, இருமல், உடல்நல பிரச்சினை காரணமாக கடந்த மாதம் 18ம் தேதி முதல் விஜயகாந்த் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு வழக்கமான உடல்பரிசோதனை மற்றும் சிகிச்சை முடிந்த நிலையில் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் சில ஆண்டுகளாக வீட்டிலேயே ஓய்வில் இருந்து வருகிறார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார். வீட்டில் ஓய்வில் இருந்த விஜயகாந்துக்கு இருமல், காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்பட்டதால் கடந்த மாதம் 18-ம் தேதி சென்னை கிண்டியை அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், 21 நாட்களுக்குப் பின்னர் குணமடைந்து விஜயகாந்த் இன்று வீடு திரும்பியுள்ளார்.

அனைவருக்கும் நன்றி

தான் பூரண நலம் பெற வேண்டி வாழ்த்தியவர்களுக்கு விஜயகாந்த் நன்றி தெவித்துள்ளார்.

இது தொடர்பாக தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பூரண நலம் பெற வேண்டி வாழ்த்திய திரை உலகை சேர்ந்த அனைவருக்கும், அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும், தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர்களுக்கும், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும், எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *