செய்திகள்

தேர்தல் நடத்தை விதி மீறல் தொடர்பாக ‘சி-விஜில்’ செயலி மூலம் 79 ஆயிரம் புகார்கள்: தேர்தல் கமிஷன் தகவல்

புதுடெல்லி, மார்ச் 30–-

நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 79 ஆயிரத்துக்கு மேற்பட்ட புகார்கள் ‘சி-விஜில்’ செயலி மூலமாக வந்துள்ளதாக தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19–-ந் தேதி முதல் ஜூன் 1–-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் கடந்த 16–-ந் தேதி வெளியிட்டது. அன்று முதலே நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

இந்த விதிகள் தீவிரமாக பின்பற்றப்படும் என கூறிய தேர்தல் கமிஷன், நடத்தை விதிமீறலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்து உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதி மீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க ‘சி-விஜில்’ என்ற செல்போன் செயலியை தேர்தல் கமிஷன் அறிவித்தது. இந்த செயலி மூலமாக பொதுமக்கள் புகார்களை வழங்கலாம் என்றும் அறிவித்தது.

அதன்படி இந்த செயலி வழியாக தொடர்ந்து புகார்கள் வருவதாக தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. அந்தவகையில் இதுவரை 79 ஆயிரத்துக்கு மேற்பட்ட புகார்கள் வந்திருப்பதாக தேர்தல் கமிஷன் நேற்று கூறியுள்ளது.

இதில் 58 ஆயிரத்து 500-க்கு (73%) அதிகமான புகார்கள் சட்ட விரோதமான பதாகைகள் மற்றும் பேனர்கள் தொடர்பானவை ஆகும். வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் மற்றும் மது வினியோகம் தொடர்பாக 1,400-க்கு மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. சுமார் 3 சதவீத (2,454) புகார்கள் சொத்துகளை சேதப்படுத்தியது சம்பந்தப்பட்டவை ஆகும்.

துப்பாக்கியை காட்டுதல் மற்றும் மிரட்டல் தொடர்பாக 535 புகார்கள் வந்துள்ள நிலையில், அவற்றில் 529 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளன. அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து தேர்தல் பிரசாரம் செய்ததாக 1,000 புகார்கள் வந்துள்ளன.

இதுவரை வந்துள்ள 79 ஆயிரத்துக்கு மேற்பட்ட புகார்களில் 99 சதவீத புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளன. இதில் 89 சதவீத புகார்களுக்கு 100 நிமிடங்களுக்குள் தீர்வு காணப்பட்டு இருக்கிறது.

இந்த தகவல்களை தேர்தல் கமிஷன் தனது செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *