செய்திகள்

பாஜக ஆளும் மாநிலங்களில் மின்சாரம், குடிநீர் கூட கிடையாது

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் குற்றச்சாட்டு

ஐதராபாத், அக். 27–

சொந்த மாநிலங்களுக்கு குடிநீர் மற்றும் மின் வசதி ஏற்படுத்தி தர முடியாத பாஜக முதலமைச்சர்கள் தெலங்கானா மாநிலத்திற்கு வந்து பாடம் நடத்தி கொண்டு இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சாடி உள்ளார்.

தெலுங்கானா சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையை தொடங்கி உள்ள அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ், அச்செம்பேட் தொகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசியபோது கூறியதாவது:–

சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைவதால் தங்களுக்கு எந்த இழப்பும் இல்லை. ஆனால் மக்களுக்கு தான் பெரும் இழப்பு ஏற்படும். மாநிலத்தை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்லும் டிஆர்எஸ் கட்சியை புறக்கணித்தால் மக்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ள நேரிடும்.

அடிப்படை வசதிகளே இல்லை

பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கூட ஏற்படுத்தி தராத பாஜக முதலமைச்சர்கள் தான் தெலங்கானாவிற்கு வந்து பாடம் நடத்தி கொண்டு இருப்பதாகவும் சந்திர சேகர ராவ் குற்றம் சாட்டினார்.

மேலும் பேசும்போது, தெலங்கானா மாநிலத்தை போராடி உருவாக்கியவர்களுக்கு அதனை வழிநடத்தவும் தெரியும். இதனை ஒரு கடமையாக கருதியே, மக்களிடம் தெரிவிக்கிறோம். இந்தியா முழுவதும் பாரதீய ஜனதா ஆளும் மாநிலங்களில், ஏன் பிரதமரின் மாநிலத்தில் கூட 24 மணி நேரமும் மின் வசதி கிடையாது. பயிர்கள் காய்வதால் அங்குள்ள விவசாயிகள் துன்பத்தில் உள்ளார்கள். ஆனால் அவர்கள் வந்து நமக்கு அறிவுரை சொல்வார்கள். இவ்வாறு சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *