செய்திகள்

தென் மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த இடங்களிலிருந்து 10 ஆயிரம் பேர் மீட்பு

தலைமை செயலாளர் பேட்டி

சென்னை, டிச. 19–

தென் மாவட்டங்களில் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து 10,082 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்தார்.

தென் மாவட்டங்களில் பெய்த மழை, மீட்பு பணிகள் தொடர்பாக சென்னை எழிலகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

தென் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு போதிய குடிநீர், விநியோகம் செய்யப்படுகிறது. ஹெலிகாப்டர் மூலம் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடற்படை மூலம் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து 10,082 பேர் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆயிரம் உணவு பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. தென்மாவட்டங்களுக்கு சென்னையில் இருந்து 100 மோட்டார் பம்புகள் அனுப்பப்பட்டுள்ளன. சேலம், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து கூடுதலாக பால், உணவு பொருட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. 271 படகுகள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மீட்பு பணியில் 6 ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன. திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் செல்போன் சேவை பாதிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் தொலைத்தொடர்பு பிரச்சினை தொடர்ந்து நீடிக்கிறது. தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படையினர் 1,100 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 168 ராணுவ வீரர்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 130 நடமாடும் மருத்துவ முகாம்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் செயல்படுகின்றன.

தென்மாவட்டங்களில் தண்ணீர் வடிந்த பிறகு போக்குவரத்து சீராகும். மீட்பு பணிக்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 50 படகுகள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு செல்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *