செய்திகள்

தமிழ்நாடு, தெலங்கானா, டெல்லியில் மார்பக புற்றுநோய் பாதிப்பு அதிகம்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்

டெல்லி, மார்ச் 27–

தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் மார்பகப் புற்றுநோய் பாதிப்பு அதிகம் இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) அண்மை ஆய்வின்படி, மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, ​​தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் மார்பகப் புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ளது. இந்தியாவில் அடுத்த ஆண்டுக்குள் மார்பகப் புற்றுநோயின் தாக்கம் கணிசமாக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு 2012-2016 ஆம் ஆண்டுக்கு இடையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வறிக்கையில், நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் மார்பக புற்றுநோயின் பாதிப்பு குறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளது. தேசிய புற்றுநோய் பதிவுத் திட்டத்தின் (என்சிஆர்பி) கீழ், நாடு முழுவதும் உள்ள மக்கள்தொகை அடிப்படையிலான 28 புற்றுநோய் பதிவேடுகளின் தரவைப் பயன்படுத்தி, இந்தியாவில் மார்பகப் புற்றுநோயின் பாதிப்பு குறித்த இந்த ஆய்வு கடந்த 2016-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.

நகரங்களில் ஐதராபாத் முதலிடம்

இதனிடையே, ‘குளோபல் கேன்சர் அப்சர்வேட்டரி’ நடத்திய ஆய்வின்படி, தென் மத்திய ஆசியாவில் மார்பகப் புற்றுநோயின் தாக்கம் கடந்த 2016 ஆம் ஆண்டில் 21.6 விகிதமாகவும் கடந்த 2018-ஆம் ஆண்டில் 25.9 விகிதமாகவும் இருந்தது. பரந்த அளவிலான தரவுகளைப் பயன்படுத்தி தேசிய மற்றும் துணை தேசிய பாதிப்புகள் மட்டுமே இந்த ஆய்வில் மதிப்பிட்டுள்ளன. அதன்படி, நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் மார்பக புற்றுநோயின் பாதிப்பு குறைவாக உள்ளது தெரிய வந்துள்ளது.

உடற்பயிற்சிகள் செய்யாமல் இருத்தல், அதிக உடல் பருமன், தாமதமான திருமணம் மற்றும் பிரசவம் ஆகிய காரணிகளால் நகர்ப்புறங்களில் மார்பகப் புற்றுநோயின் பாதிப்பு அதிகம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்திய நகரங்களுக்கு இடையிலான பட்டியலில் ஐதராபாத், சென்னை, பெங்களூரு மற்றும் டெல்லி ஆகியவை பட்டியலில் முதலிடத்தில் உள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *