செய்திகள்

20 கிலோ பார்லேஜி பிஸ்கட்டில் இளைஞர் கட்டிய ராமர் கோயில்

கொல்கத்தா, ஜன. 19–

20 கிலோ பார்லேஜி பிஸ்கெட்டில் 4 அடி உயரத்தில் எழிலான ராமர் கோயிலை கட்டி அசத்தியுள்ள வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அயோத்தியில் கட்டப்பட்டிருந்த 450 ஆண்டுகால பழமையான பாபர் மசூதி இந்துத்துவவாதிகளால் இடிக்கப்பட்டது. அது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்தது. அதில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டவும், அதற்கு ஈடாக அருகில் பாபர் மசூதி கட்ட இடம் ஒதுக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி, ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான கோடி செலவில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இன்னும் கட்டி முடிக்கப்படாத நிலையில் 22 ந்தேதி ராமர் கோயில் குடமுழுக்கு நடத்தப்படுகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள 4 சங்கர மடங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள மாட்டோம் என்றும் அறிவித்துள்ளது.

4 அடி ராமர் கோயில்

ஆனாலும், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, திறப்பு விழா ஏற்பாடுகள் வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அதனையொட்டி, அதனை கொண்டாடும் விதமாக பலரும் பல்வேறு செயல்களை செய்து தனது ஈடுபாட்டை காட்டி வருகின்றனர். இந்நிலையில் கொல்கத்தா இளைஞர் ஒருவர் பார்லேஜி பிஸ்கட்டுகளை வைத்து, 4 அடியில் அயோத்தி ராமர் கோவிலை கட்டியது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த சோட்டான் கோஷ் மோனு என்பவர் 20 கிலோ பார்லே ஜி பிஸ்கட்டுகளை வைத்து 4 அடி உயரத்தில் ராமர் கோவிலின் மாதிரியை தத்துரூபமாக வடிவமைத்து அசத்தியுள்ளார்.

ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற உள்ள நிலையில், இந்த அழகான சிற்பத்திற்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *