செய்திகள்

தமிழகப் பொருட்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய 174 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்

சென்னை, ஜன.9-–

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய 174 சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

சென்னை உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பன்னாட்டு வாங்குவோர், விற்போர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு 174 நிறுவனங்களுடன் தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஆஸ்திரேலியா, ஜப்பான், இத்தாலி, சிங்கப்பூர், ஸ்பெயின், கென்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் இந்த நிகழ்ச்சியில் நேரடியாக பங்கேற்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாற்றம் செய்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:-

தமிழ்நாடு இந்திய அளவில் 2-வது மிகப் பெரிய பொருளாதார மாநிலமாகவும், தொழில் தொடங்க உகந்த மாநிலங்கள் பட்டியலில் 3-வதாகவும் உள்ளது.

தமிழ்நாட்டில் 12 ஆயிரத்து 182 சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.824 கோடியே 40 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

சமுதாயத்தின் அனைத்து பிரிவு மக்களையும் தொழில் முனை வோர்களாக உருவாக்க வேண்டும் என்ற நல்ல நோக்கில் 5 வகையான சுயதொழில் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று, இதுவரை ஆயிரத்து 99 கோடியே 86 லட்சம் ரூபாய் மானியத்துடன் ரூ.3 ஆயிரத்து 890 கோடியே 59 லட்சம் வங்கி கடன் உதவி வழங்கப்பட்டு 30 ஆயிரத்து 981 படித்த இளைஞர்கள் புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர். தொழில் துறையில், உலகின் தலைசிறந்த இடமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற நல்ல நோக்கில் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு என்ற புத்தொழில் இயக்கத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்துயிர் அளித்து வருகிறார். இதனால் இந்திய அளவில் கடைசி இடத்தில் இருந்த தமிழ்நாடு புத்தொழிலில் மூன்றாம் நிலைக்கு முன்னேறி உள்ளது.

புத்தொழில் முனைவோர்களுக்கு ஆதார நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 21 ஆதிதிராவிட, பழங்குடியின தொழில்முனை வோர்க்கு ரூ.28 கோடியே 10 லட்சம் நிதி உதவியுடன் 153 புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.42 கோடியே 5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டின் மூலம் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் 174 சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து ரூ.42 கோடியே 12 லட்சம் தமிழக நிறுவனங்களுக்கு கிடைத்துள்ளது. இதில் 73 பேர் முதல்முறை ஏற்றுமதி யாளர்கள் ஆவர். இவர்களது நிறுவனங்கள் மட்டும் ரூ.16 கோடியே 24 லட்சத்துக்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் அர்ச்சனா பட்நாயக், இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் தென்மண்டல தலைவர் இஸ்ரார் அகமது, தென்மண்டல தலைவர் ஹபீப் உசேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *