செய்திகள்

தமிழகத்தில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 39 தொகுதிகளில் 950 பேர் போட்டி

சென்னை, மார்ச்.31-

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு வாபஸ் நேற்று முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி 39 தொகுதிகளில் 950 பேர் போட்டியிடுகின்றனர்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19ந்தேதி நடைபெறுகிறது.

நடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தமிழகத்தில் கடந்த 20ந்தேதி தொடங்கியது. தொடக்கத்தில் மந்தமாக இருந்த மனு தாக்கல் கடந்த 25ந்தேதி சூடுபிடித்தது. அன்றைய தினம் மிகவும் நல்ல நாள் என்று கருதப்பட்டதால் முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் பலர் தங்களது மனுக்களை தாக்கல் செய்தனர். அன்று ஒரே நாளில் மட்டும் 405 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

கடந்த 27ந்தேதியுடன் மனு தாக்கல் நிறைவடைந்தது. அன்றைய நிலவரப்படி 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 1,403 பேர் 1,749 மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை 28ந்தேதி நடைபெற்றது. அப்போது 1,085 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் நேற்று மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. இதில் 135 பேர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றனர்.

இதைத்தொடர்ந்து இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. இதன்படி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இதில் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54 பேர் போட்டியிடுகின்றனர். குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியில் உள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு, அண்ணா தி.மு.க. சார்பில் டாக்டர் ஜி.பிரேம்குமார், த.மா.கா. சார்பில் வி.என்.வேணுகோபால், நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் ரவிச்சந்திரன் உள்பட 31 பேர் களம் காண்கின்றனர்.

திருவள்ளூர், காஞ்சீபுரம்

திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சசிகாந்த் செந்தில், தே.மு.தி.க. சார்பில் கு.நல்லதம்பி, பா.ஜ.க. சார்பில் பொன்.வி.பாலகணபதி, நாம் தமிழர் கட்சி சார்பில் மு.ஜெகதீஷ் சுந்தர் உள்பட 14 பேர் போட்டியில் உள்ளனர்.

காஞ்சீபுரம் தொகுதியில் தி.மு.க. சார்பில் க.செல்வம், அண்ணா தி.மு.க. சார்பில் ஈ.ராஜசேகர், பா.ம.க. சார்பில் வெ.ஜோதி வெங்கடேசன், நாம் தமிழர் கட்சி சார்பில் வி.சந்தோஷ்குமார் உள்பட 11 பேர் போட்டியிடுகின்றனர்.

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் சவுமியா அன்புமணியை எதிர்த்து 23 பேர் களத்தில் உள்ளனர்.

இதேபோல் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 25 பேரும், நாமக்கல் தொகுதியில் 40 பேரும், கிருஷ்ணகிரி தொகுதியில் 27 பேரும் போட்டியிடுகின்றனர்.

நீலகிரி தொகுதியில் தி.மு.க. சார்பில் ஆ.ராசா, அண்ணா தி.மு.க. சார்பில் டி.லோகேஷ் தமிழ்செல்வன், பா.ஜ.க. சார்பில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெயக்குமார் ஆகியோர் உள்பட 16 பேர் களத்தில் உள்ளனர்.

திருப்பூர் தொகுதியில் 13 பேரும், ஈரோடு தொகுதியில் 31 பேரும், வேலூர் 31 பேரும், அரக்கோணம் தொகுதியில் 26 பேரும், திருவண்ணாமலையில் 31 பேரும், ஆரணியில் 29 பேரும், விழுப்புரம் தொகுதியில் 17 பேரும், கள்ளக்குறிச்சி தொகுதியில் 21 பேரும் போட்டியிடுகின்றனர்.

கோவை தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் மாநில தலைவர் கே.அண்ணாமலையை எதிர்த்து 36 பேர் களம் காண்கின்றனர்.

பொள்ளாச்சியில் 15 பேரும், திண்டுக்கல் தொகுதியில் 15 பேரும், கரூர் தொகுதியில் 54 பேரும் போட்டியிடுகின்றனர்.

துரை வைகோ, திருமாவளவன்

திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வைகோவின் மகன் துரை வைகோவை எதிர்த்து 14 பேர் போட்டியிடுகிறார்கள். பெரம்பலூரில் 23 பேரும், கடலூரில் 13 பேரும் களம் காண்கிறார்கள்.

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனை எதிர்த்து 14 பேர் போட்டியிடுகிறார்கள்.

மயிலாடுதுறையில் 17 பேரும், நாகப்பட்டினத்தில் 9 பேரும், தஞ்சாவூரில் 12 பேரும் போட்டியில் உள்ளனர்.

ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி. தினகரன்

தேனி தொகுதியில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை எதிர்த்து 24 பேர் போட்டியிடுகிறார்கள்.

இதேபோல் ராமநாதபுரத்தில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு எதிராக 24 பேர் களம் காண்கிறார்கள்.

சிவகங்கையில் கார்த்தி சிதம்பரத்தை எதிர்த்து 19 பேர் போட்டியிடுகிறார்கள். மதுரையில் 21 பேர் போட்டியிடுகிறார்கள்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கியுள்ள கனிமொழியை எதிர்த்து 27 பேர் போட்டியிடுகிறார்கள்.

நெல்லையில் 23 பேரும், தென்காசி தொகுதியில் 15 பேரும் களம் இறங்கியுள்ளனர்.

கன்னியாகுமரி தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்த்து 21 பேர் களத்தில் உள்ளனர்.

கடந்த தேர்தலில்

845 பேர் போட்டி

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் 845 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *