செய்திகள் நாடும் நடப்பும்

நாட்டின் மகிழ்ச்சி முதியவர்கள் ஆனந்தத்தில்!


ஆர். முத்துக்குமார்


ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 அன்று 1990ல் ஐநா சபை எடுத்த முடிவை ஏற்று உலக நாடுகள் சர்வதேச முதியோர் தினமாக அனுசரித்து வருகிறது. இந்த மாத துவக்கத்தில் காந்திபிறந்தநாள் விழா உட்பட பல்வேறு முக்கிய அரசு விழாக்கள் நடந்த நிலையில் முதியோர் தினத்தின் மகத்துவத்தை நினைவு கூற சற்றே மறந்து விட்டோம் என்று தோன்றுகிறது.

நமது ஜனத்தொகை 140 கோடியாக இருப்பதில் 60 வயதை கடந்தவர்கள் எண்ணிக்கை 15 கோடி பேராக இருப்பதாக 2022ல் எடுக்கப்பட்ட புள்ளி விவரம் கூறுகிறது. இது நமது ஜனத்தொகையில் 10.5% ஆகும்!

ஜனத்தொகையில் 35 வயதுக்கும் குறைவாக இருப்போர் சதவிகிதம் 65% ஆக இருப்பது நமது நாடு பொருவாரியாக இளைஞர்களால் இயங்குகிறது என்று உறுதிபட தெரிகிறது.

ஆனால் காலச் சக்கர சூழற்சியில் 2036ல் 60 வயதை தாண்டியோர் ஜனத்தொகை 15% ஆக உயர்ந்து விடுமாம்!

ஆக மத்திய கஜானா செலவுகளில் 15% ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் 15% பேருக்கு செலவு செய்து கொண்டு இருக்குமாம்!

வாழ்க்கையின் அனைத்து சுகத்துக்கங்களையும் மாறிக் கொண்டே இருக்கும் மாற்றங்களையும் அனுபவித்தவர்கள் தற்சயம் 10.5% பேர் இருக்கிறார்கள், அவர்கள் தள்ளாமை காரணங்களால் முடியாமைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கையில் புதுப்புது தொழில்நுட்ப புரட்சிகள், சமூகவியல் மாற்றங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு வசமாகிவிட்ட டிஜிட்டல் மய வாழ்க்கை மூத்த குடிமக்களுக்கு அந்நியமாக மாறி வருவது காலச் சுழற்சியில் ஓர் அங்கமாகும்.

இதை மூத்தவர்கள் தேவையில்லை என ஒதுக்குவதும் நவீன யுக இளைஞர்கள் இதை வசப்படுத்தாமல் வாழ்ந்து என்ன பயன்? என்று தீர்மானித்து வாழ்வதும் தொடரத்தான் போகிறது.

டிஜிட்டல் பிரிவினை முதியவர்கள் புறம்தள்ளி விடும் அபாயமும் அவர்களுக்கு அவமானம் தந்து ஒதுக்கி வைத்துவிடும் நிலையும் எழத்தான் செய்கிறது.

நடமாடத் திணறும் வயதில் பல ஓய்வு பெற்ற பணியாளர்கள் பல அரசு துறைகளுக்கும் வங்கி அலுவலகங்களுக்கும் அழைத்து மூத்த குடிமகன் நிதி உதவிகளுக்கு அலைவதை பார்க்கும்போது மனம் கணக்கிறது.

60 வயதை தாண்டிய பிறகும் இளைஞர்களின் சுறுசுறுப்பில் இயங்குவது ஆனந்தமாக இருக்கலாம்! ஆனால் ஒவ்வொருவரின் உடல் பணியாற்றும் திறன் வயது மூப்பு காரணங்களால் பல்வேறு தேய்மானங்களுக்கும் சோர்வுகளுக்கும் சேதம் அடைந்திருப்பது தான் உண்மை.

சிலர் 90 வயதைத் தாண்டியும் எந்த எலும்பு முறிவு சிகிச்சை பெறாது சுயமாய் தங்களது பணிகளை செய்து கொண்டிருப்பவர்கள் சிலர் நம் குடும்பங்களில் இருக்கலாம்.

ஆனால் 70 வயதை தொடும் நேரத்தில் இருதய கோளாறுகள், சர்க்கரை வியாதி, எலும்பு முறிவும் தசைப்பிடிப்பு சமாச்சாரங்களும் கொண்டவர்களே அதிகம்.

மேலும் மனநோய் ஏற்பட்டு தவிப்போர் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருப்பதையும் மறந்து விடக் கூடாது.

ஆக மருத்துவ செலவு, வீட்டில் அடைப்பட்டிருப்பது, வருவாய் ஈட்டா நபராக மாறி விடுவது இயற்கை சுழற்சியில் ஏற்பட்ட நிலையில் முதமை ஓர் கொடுமை என அலுப்புத் தட்ட பேசுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இன்று வரை நமது அன்றாட உபயோக கட்டுமானத்தை முதியவர்களுக்கும் ஏற்றதாக அமைப்பதில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்ததால் படிகளில் ஏறிச் செல்வதை ஓர் உடற்பயிற்சி எனச் சிறுவர்கள், வாலிபர்கள் உபயோகிக்க முதியவர்களும் அதையே உபயோகிக்க வைத்து வருகிறோம். 2 அல்லது 3 படிகள் கூடவா ஏறிச் செல்லக் கூடாது? எனக் கேட்கலாம். உலகெங்கும் முதியவர்கள், தள்ளு வண்டியில் குழந்தைகள் அல்லது நடக்க முடியாதவர்கள் எல்லாம் செல்ல சரிவு பாதை கட்டாயம் இருக்கும். அதில் சென்றே லிப்ட்டில் செல்ல வசதியான வழி அமைந்திருக்கும்.

பொதுமக்களுக்கான பஸ்களில் கூட நவீன படிகட்டுகள் மட்டுமே இருப்பது முதியவர்களுக்கும் நடக்க சிரமப்படுபவர்களுக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம் புரிகிறது.

அந்த பஸ் படிக்கட்டில் தள்ளு வண்டியை மேல் நிறுத்தினால் தானாக பஸ்சுக்கு சென்று விடும்! நம் சிட்டி பஸ்களில் படிகளில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகம் என்பதால் அது போன்ற வசதியை எதிர்பார்க்கவே முடியாது தான்! ஆனால் அடுக்குமாடி வீடுகளில், வாடகை கார்களில், சாப்பிங் வளாகங்களில் முதியவர்களுக்கான பிரத்தியேக மான குடியிருப்புகளில் இதுபோன்ற வசதிகள் ஏற்பட வைத்தால் அது வரும் காலத்தில் நம் மண்ணில் முதியவர்களுக்கு தரப்பட்ட விசேஷ கவுரவம், அந்தஸ்தால் அவர்களால் நிறைவான வாழ்வை வாழ முடியும்.

அந்த மனநிறைவோடு வாழும் முதியவர்கள் நிச்சயம் குடும்பத்தாருக்கு சுமையாக மாறவிட மாட்டார்கள். அதன் எதிரொலியாய் எந்த குடும்பத்தாரும் முதியவர்களுக்கு தொல்லை தரும் நிலைக்கு தள்ளப்படவே மாட்டார்கள்.

ஆக முதியவர் நலனை ஒவ்வொரு இல்லத்திலும் உறுதி செய்து விட்டால் நாடே மகிழ்ச்சி குறியீட்டில் முன்னணி நாடாக உயர்ந்து உண்மையான வல்லரசு நாடாக வளர்ந்து அடுத்த பல நூற்றாண்டுகளுக்கு மனநிம்மதிக்கு புகழ் பெற்ற நாடாகவும் இருப்போம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *