சிறுகதை

சர்வர் சந்தானம்- ராஜா செல்லமுத்து

…..

நடுநிசி இரவு 12 கடந்து நின்றது கடிகாரம் . சந்தானம் அப்போதுதான் சாப்பிட ஆரம்பித்தான்.

ஆனால் அவனால் சாப்பிட முடியவில்லை. விதவிதமான உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு பரிமாறி ஓய்ந்தபின் அந்த நடுநிசியில் தான் தினமும் சாப்பிடுவது வழக்கம். அதுதான் அவனுக்கு இட்ட கட்டளை. அது தான் அவனுக்கு வாய்த்த வாழ்க்கை. இதுதான் தன் விதி என்று நினைத்துக் கொண்டிருந்தான் சந்தானம்.

அந்த விதியின் படியே தான் நகர்ந்து கொண்டிருந்தது அவனது வாழ்க்கை.

ஆனால் அன்று ஏனோ அவனால் சாப்பிடவே முடியவில்லை. இட்லியும் தோசையும் தான் அவன் எதிரே இருந்தன. அதைச் சாப்பிட முடியாமல் கண் கலங்கியபடி இருந்தான் .

வாழ்க்கையா இது? தாயும் தகப்பனும் சரியாக இருந்திருந்தால் எனக்கு இந்த நிலைமை வந்திருக்குமா?. அவர்கள் சரியில்லை என்ற காரணத்தினால் தான் இந்த இழிதொழிலை நான் செய்து கொண்டிருக்கிறேன். அதுவும் கண்டவனிடமெல்லாம் பேச்சு வாங்கிக் கொண்டு இந்த வயிற்றை வளர்ப்பதற்கு நான் என்ன வரம் வாங்கி வந்தேன்? ஏன் மற்றவர்களிடம் நான் பேச்சுக்கு கேட்க வேண்டும்? இந்த வேலை வேண்டாம் என்று சொல்லிவிட்டு போனால் வேறு வேலை தெரியவும் தெரியாது. என்ன செய்வது ? என்று தட்டில் இருந்த இட்லியை பிசைந்தபடியே கண்ணீர் விட்டு கொண்டு இருந்தான்.

மற்ற சர்வர்கள் எல்லாம் சாப்பிட்டு முடித்துவிட்டுப் போய்விட்டனர். எஞ்சி இருப்பது சந்தானம் மட்டும்தான். அவனுக்குள் அப்படி என்னதான் நடந்தது ?என்று அவன் மனசாட்சியே மறுபடியும் சொல்ல ஆரம்பித்தது .

அதே நாள் இரவு 7 மணி 8 மணி இருக்கலாம். வாடிக்கையாளர்களாக வந்த இருவர் குடிபோதையில் அவனைத் திட்டியது ஞாபகத்திற்கு வந்தது.

வாடா போடா என்று ஏக வசனத்தில் பேசியதும் அவனுக்கு நினைவில் வந்தது.

எவ்வளவு நேரம் கறிக் குழம்பு கேட்கிறேன். தர மாட்டியா? உன் மூஞ்சில குழம்ப ஊத்தி விட்டுருவேன்.போய் குழம்பு எடுத்துட்டு வா என்று ஒரு குடிகாரன் பேசியது ஞாபகத்திற்கு வந்தது.

ஆம்லெட் கேக்குறாங்க. போய் குடுடா என்று கடை முதலாளி பேசியது ஞாபகத்திற்கு வந்தது.

கிளாஸ் சரியா கழுவாம இருக்கு. இப்படித்தான் சப்ளை பண்றதா ? மூஞ்சிய பேத்துருவேன் என்று ஒருவன் சொன்னது அவன் ஞாபக பிடரியில் அடித்தது .

இந்த டேபிள துடைக்க மாட்டீங்களா? மனுஷன் சாப்பிடுவானா? என்று இன்னொருவன் ஏகமாகத் திட்டியது ஞாபகத்தில் வந்தது .

இப்படியாக ஆளாளுக்கு சந்தானத்தைத் திட்டியதெல்லாம் மொத்தமாக சேர்த்துத்தான் அவனால் சாப்பிட முடியாமல் இருந்தது .

என்ன செய்வது? இந்த வாழ்க்கை இட்ட கோடு படி தான் நடந்து செல்ல முடியும் போல என்று வருந்திய படியே சாப்பாட்டைப் பிசைந்து கொண்டே இருந்தான்.ஆனால் ஒரு வாய் கூட அவனுக்குள் இறங்கவில்லை.

அப்போது சந்தானம். சந்தானம் என்று ஒரு குரல் கேட்க சட்டென்று திரும்பினான்.

அங்கே இலைகளை அள்ளிப் பெருக்கி போட்டுக் கொண்டிருக்கும் காளியம்மாள் அவன் முன்னால் வந்து நின்றாள்.

என்ன சந்தானம் சாப்பிடலையா ? ஏன் இப்படி சாப்பிடாம அழுதுகிட்டே இருக்க. சாப்பிடு சந்தானம் உன்னோட கஷ்டம் என்னன்னு எனக்குத் தெரியும் .எத்தனை பேர் உன்னை திட்டுறாங்கன்னு பாத்துட்டு தான் இருக்கேன். என்ன செய்றது சந்தானம். நாம பெறந்த நேரம் அப்படி .எல்லாருட்டயும் திட்டு வாங்கித் தான் வாழனும்னு இருக்கு போல . நீ சாப்பிடு என்று ஆறுதலாக காளியம்மாள் சொன்னாள்.

ஆனால் சந்தானத்தால் சாப்பிட முடியவில்லை. அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தலையை மட்டுமே ஆட்டினான்.

அவன் அருகில் போன காளியம்மாள் அவனின் தலை கோதினாள்.

அவன் முகத்தைத் தூக்கி பார்த்தாள். அவன் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருகி ஓடியது .

தன் முந்தானையில் அவன் கண்களைத் துடைத்து விட்டாள் அவன் முன்னால் இருந்த இட்லியையும் தோசையும் அப்புறப்படுத்தி விட்டு ,அவள் வாங்கி வந்த அசைவ உணவைச் சந்தானத்தின் முன்னால் வைத்தாள்.

சந்தானம் இது நான் வெளியே வாங்கிட்டு வந்தது. நம்ம சம்பாதித்து சம்பாதித்தில் வாங்குனது .அந்த கடைக்காரன் ஓசி கொடுத்த டிபன் இல்ல. நீ சாப்பிடு சந்தானம் என்றாள். காளியம்மாள் நிமிர்ந்து பார்த்தான் சந்தானம்.

இப்போது முன்னைவிட சந்தானம் கண்களில் கண்ணீர் பெருகியது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *